Viru News
நேற்றிரவு பரவத் துவங்கியது இந்த வதந்தி. “கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும்” என்றபதை தவிர வேறு விபரம் ஏதும் கிடையாது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமாக இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.
நேற்று இரவே, பெங்களூரு ரெயில் நிலையத்தில் திடீரென ஏராளமானவர்கள் பெட்டி படுக்கைகளுடன் வந்து இறங்கினார்கள். கிடைக்கும் ரயிலை பிடித்து, எப்படியாவது கர்நாடகாவை விட்டு வெளியேறினால் போதும் என்ற மன நிலையிலேயே அநேகர் இருந்தனர். இதனால், நேற்றிரவில் இருந்து பெங்களூருவில் இருந்து வடக்கே செல்லும் அனைத்து தொலைதூர ரயில்களும் நிரம்பி வழிகின்றன.
கர்நாடகா அரசு, அனைவரது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையிலும், நகரை விட்டு வெளியேறுபவர்கள், தொடர்ந்து வெளியேறிக் கொண்டுதான் உள்ளார்கள்.
இதற்கு மற்றொரு காரணம், மைசூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பரவி, பீதியை கிளப்பி விட்டிருப்பதுதான்.
மைசூரில், கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர் உண்மையில் இந்தியரே கிடையாது. திபெத்தை சேர்ந்தவர். ஆனாலும் இவரது முக அடையாளத்தை வைத்து, வட கிழக்கு மாநிலத்தவர் என்று கருதி தாக்குதல் நடத்தப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது.
இவரைத் தாக்கிவிட்டு ஓடியதாக கூறப்படும் இருவரை மைசூர் போலீஸ் தேடிவருகின்றனர்.
அசாம் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன், மும்பையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அதனால், இந்த வதந்தியை வட கிழக்கு மாநில மக்கள் லேசாக ஓதுக்கிவிட தயாரில்லை என்கிறார்கள்.
தற்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள பதட்டம், உடனடியாக தணிந்து விடாது போல தோன்றுகிறது. கர்நாடகாவின் மற்றைய பகுதிகளுக்கும் பரவினால், நிலைமை மோசமடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக