வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அசாஞ்சேவைக் கைது செய்ய ஈக்வடார் தூதரகம் மீது நடவடிக்கை

equator
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாஞ்சேவுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்த நபர்களைக் கைது செய்யும் போலீஸார் குவிட்டோ, ஆக. 16: விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவைக் கைது செய்வதற்காக லண்டனில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பிரிட்டன் மிரட்டியதாக ஈக்வடார் குற்றம் சாட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை நிறுவி, அதில் பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளின் அரசு மற்றும் ராணுவங்களின் ரகசிய ஆவணங்கள் இடம்பெற்றன.
இதனால், இந்த நாடுகளின் அரசுகளுக்கு அசாஞ்சே மீது கடும் கோபம் ஏற்பட்டது. இதனிடையே, அவர் மீது ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், லண்டனில் வாழ்ந்து வரும் அசாஞ்சே அங்கிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அவர், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தஞ்சம் புகுந்தார். இரண்டு மாதங்களாக அங்கேயே பதுங்கியுள்ளார். இந்நிலையில், ஈக்வடார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ பாடினோ வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ""அசாஞ்சேவை எங்களிடம் ஒப்படைக்கா விட்டால் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பிரிட்டன் மிரட்டியுள்ளது. இந்த எச்சரிக்கையை எங்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், தூதரிடமும் அந்நாடு எழுத்து மூலமாக அளித்துள்ளது'' என்று அவர் தெரிவித்தார். அசாஞ்சேவை வழக்குகளில் சிக்க வைத்து, ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து அவரை நாடு கடத்தி தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதே அமெரிக்காவின் நோக்கம் என்று அவரது ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர். அவரைக் கைது செய்வதற்காக லண்டனில் உள்ள தனது தூதரகத்தில் பிரிட்டன் போலீஸார் நுழைந்தால், அது வியன்னா மாநாட்டுத் தீர்மானத்தை மீறிய செயலாகும் என்று ஈக்வடார் தெரிவித்துள்ளது. இதனிடையே, தனக்கு ஈக்வடாரில் அடைக்கலம் தருமாறு அசாஞ்சே அளித்துள்ள விண்ணப்பம் குறித்து அந்நாட்டு அரசு வியாழக்கிழமை மாலை பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து, அசாஞ்சேவுக்கு அடைக்கலம் தருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

கருத்துகள் இல்லை: