ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தை கொண்டுவரவேண்டும்,
வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று வலியுறுத்தி தில்லியில் திங்கள்கிழமை நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்
நடத்திய யோகா குரு பாபா ராம்தேவ், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஐடிஓ அருகே உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கில்
போலீஸôர் காவலில் வைக்கப்பட்டனர். பொது இடத்தில் சட்டவிரோதமாகக் கூடி அமைதியை
சீர்குலைக்க முயன்றதாக ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு
வரவும் ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும்
தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை பாபா ராம்தேவ் கடந்த 9-ம் தேதி தொடங்கினார்.
அவரது போராட்டத்துக்கு முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் உள்ளிட்டோர் ஆதரவு
தெரிவித்தனர்.
""எனது கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் ஊழலுக்கு எதிரான
போராட்டம் புரட்சியாக மாறும்'' என்று ஞாயிற்றுக்கிழமை ராம்தேவ் தெரிவித்தார். ஆனால்,
அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் மேலும் ஒருநாள் போராட்டத்தை நீட்டித்த அவர், பிரதமர்
மன்மோகன் சிங் திங்கள்கிழமை காலைக்குள் தீர்வாக பதில் அளிக்க வேண்டும் என புதிய கெடு
விதித்தார். இந்த நிலையில், பாஜக தலைவர் நிதின் கட்கரியும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர்
சரத் யாதவும் ராம்தேவ் நடத்தும் போராட்டத்துக்கு திங்கள்கிழமை காலையில் நேரில் வந்து
ஆதரவு தெரிவித்துப் பேசினர். மத்திய அரசு தரப்பில் பதில் வராததால், நாடாளுமன்ற
முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ராம்தேவ் அறிவித்து ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றத்தை
நோக்கி புறப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஞ்சித்
சிங் மேம்பால சந்திப்பில் நான்கு புறமும் தடுப்பு வேலி அமைத்து போலீஸôர் பேரணியை
தடுத்தனர்.
அப்போது ராம்தேவ், ஆதரவாளர்களிடம் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்று
அமைதியான முறையில் போராட்டம் நடத்தவேண்டும் என்று ஆதரவாளர்களிடம் கூறினார்.
இதையடுத்து ராம்தேவுடன் வாகனத்தில் இருந்த போலீஸ் காவலர் உயரதிகாரிகளின்
உத்தரவின்படி அவரது கையைப் பிடித்துக் கொண்டார். இதையடுத்து, ஆதரவாளர்களை நோக்கி,
""போலீஸ்காரர் என்னைக் கைது செய்யும் நோக்கில் செயல்படுகிறார். என்னை எங்கு கொண்டு
சென்றாலும் போராட்டத்தை தீவிரமாகத் தொடருவேன். இந்த நாட்டில் ஊழல் அகற்றப்பட
வேண்டும். அதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்'' என்று
ராம்தேவ் குரல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ராம்தேவ் ஆதரவாளர்களை பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி
விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தாற்காலிகச் சிறைக்கும், ராம்தேவ் இருந்த வாகனத்தை
ஐடிஓ அருகே உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்துக்கும் போலீஸôர் கொண்டு சென்றனர். ஆனால்,
அங்கு இறங்க ராம்தேவ் மறுத்தார். தன்னை மற்ற ஆதரவாளர்கள் அடைக்கப்பட்ட இடத்துக்கே
கொண்டு செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இதையடுத்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவரை மாலை 6 மணியளவில்
ஐடிஓ அருகே உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன்
போலீஸôர் காவலில் வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், ""எனது போராட்டம் இன்னும் முடிந்து
விடவில்லை. ஊழல் கறைபடிந்த உறுப்பினர்கள் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது
நாடாளுமன்றத்திற்குள் செல்லும் முன் தடுக்கப்படுவார்கள்'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக