கடந்த மாதம் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேசிய இளங்கோவன், மிகப் பெரிய பதவி வகித்தபோதிலும் காங்கிரஸ் தொண்டர்களின் குறைகளைக் கேட்க காமராஜர் தவறியதில்லை. அவர் முதல்வராக இருக்கும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் மிகப் பெரும் செல்வாக்கோடு இருந்தது.
அதே போல இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே. வாசன் பல அலுவல்கள் இருந்தாலும் டெல்லியிலும், சென்னையிலும் தொண்டர்களைச் சந்திக்கத் தவறுவதில்லை. அத்துடன், கட்சி வளர்ச்சிக்காகவும் நேரத்தை செலவிடுகிறார்.
சில நேரங்களில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட தனது தொகுதியில் மக்களைச் சந்திக்கிறார்.
ஆனால், தமிழகத்தில் இருந்து சென்றுள்ள இன்னொரு மத்திய அமைச்சர் தான் (ஜெயந்தி நடராஜன்) தொண்டர்களைச் சந்திப்பதில்லை, அதே போல தமிழக காங்கிரஸ் வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று பேசினார் இளங்கோவன்.
மேலும் தனது பேச்சில் தனது வழக்கமான ஸ்டைலில் மறைந்த தலைவர்கள், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் ப.சிதம்பரத்தையும் அவர் தாக்கிப் பேசினார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் மேலிடத்தில் ஜெயந்தி நடராஜன் புகார் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி செயலாளர் மோதிலால் வோரா இளங்கோவனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந் நிலையில் இது குறித்து இளங்கோவன் அளித்துள்ள ஒரு பேட்டியில், காமராஜர் பிறந்த நாள் விழாவில் நான் பேசியதைத் திரித்து, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் பற்றி தவறாகப் பேசியதாகவும், அதைப்போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சையாக விமர்சனம் செய்ததாகவும் தவறான, பொய்யான தகவலை சொல்லி ஜெயந்தி நடராஜன் மேலிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதற்காக விளக்கம் கேட்டு மோதிலால் வோரா கடிதம் எழுதியிருந்தார்.
கூட்டத்தில் நான் என்ன பேசினேன் என்பதை விளக்கி உடனடியாக பதில் அனுப்பினேன். பின்னர் டெல்லி சென்று ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ஏ.கே.ஆண்டனி மற்றும் மோதிலால் வோராவை சந்தித்தேன்.
மத்திய அமைச்சராகி பல காலம் ஆகிவிட்டபோதும், தமிழக காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் ஒரு முறை மட்டுமே ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்களையும், எம்.பிக்களையும் அவர் சந்திப்பதில்லை. மாறாக வணிகர்களை மட்டுமே சந்திக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலிட நோட்டீசுக்கு நான் அனுப்பிய விளக்கத்திலும், நேரிலும் வலியுறுத்தினேன்.
1967ல் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது. அண்ணா முதல்வரானார். அதற்கு பக்தவத்சலம்தான் காரணம் என்ற உண்மையையும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். (தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் பேத்தி தான் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது)
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நானும் அவரை சந்திக்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
ஆனால், சோனியாவை சந்திக்க இவர் டெல்லியில் காத்துக் கிடந்ததாகவும், அவரை சோனியா சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை இதுவரை எந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக