திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பணம் மட்டும் காரணமல்ல தொழில் தொடங்குவதற்குக்


ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 4
அன்று தொடங்கிய பயணம். அடுத்த இரு மாதங்களுக்கு வயிற்றில் குழந்தையுடன் வெயில், மழை பாராமல் வங்கிகள், கிளைகள் என்று அலையத் தொடங்கினேன். பொருள்களைக் கொடுத்தவர்களும், உற்பத்திக் கருவிகளை வழங்கியவர்களும் பணத்துக்காக நெருக்கத் தொடங்கி விட்டனர்.
என் அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ஆயிரம் ரூபாய் செலுத்தி கரெண்ட் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கியிருந்தேன்.
நாள் தவறாமல் அங்கு சென்று, வங்கி மேலாளரைச் சந்திப்பேன். கடன் வாங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கையோடு கொண்டு செல்வேன். ஆனால் அவரோ பிடிகொடுக்கமாட்டார். இந்த நிலையில் நீங்கள் ஏன் இப்படி அலைகிறீர்கள் என்றுகூட கடுமையாக ஒருமுறை சொல்லிவிட்டார். ஆனாலும் நான் பொறுமையுடன் என் நிலையை அவருக்கு விளக்கினேன். ஒவ்வொரு நாளும் இது நடந்தது. தினமும் ஐந்து நிமிடங்களாவது இதற்கென்று ஒதுக்கிவைத்துக்கொண்டேன். மறுப்பது அவர் உரிமை என்றால், விடாமல் என் கனவைத் துரத்துவது என் கடமையல்லவா?
இப்படியாகச் சில நாள்கள் கடந்தன. ஒருநாள், சனிக்கிழமை மதியம் சுமார் மூன்று மணியளவில், யாரோ என் அலுவலகப் படியேறி வரும் ஓசை கேட்டு வெளியில் வந்தேன். எதிர்பாராதவிதமாக அந்த வங்கி மேலாளர் வந்திருந்தார். சிறிது பதட்டத்துடன் அவரை வரவேற்று அமரச் செய்தேன். ஆனால், அவரோ கிடுகிடுவென்று எனது அலுவலகத்தின் உள்ளே சென்று பணியிடங்களையும், இயந்திரக் கருவிகள் இயங்குவதையும் பார்த்துக் கொண்டே வந்தார். என்ன பார்க்கிறார்? என்ன செய்கிறார்? அவரது செய்கையை என்னால் புரிந்துகொள்ளடியவில்லை.
சிறிது நேரத்தில் என்னிடம் திரும்பினார்.
‘நான் உடனே போகவேண்டும், போவதற்குமுன் உங்களிடம் ஒன்றுகூற விரும்புகிறேன். உங்களின் விடாமுயற்சியும் நேர்மையான அணுகுமுறையும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இதைப்போல லோன் கேட்டு வருபவர்கள் தக்க ஆவணங்களுடனும், நாணயத்துடனும், பணியாற்றும் திறமையுடனும் நடந்துகொள்ளும் பட்சத்தில் எங்களைப் போன்ற அலுவலர்களுக்கு வேலை சுலபமாகிவிடும்.’
பாராட்டுகளெல்லாம் சரிதான். கடன் உதவி? மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவர் பின்னே படிக்கட்டில் இறங்கி வாசல் வரை வந்தேன். வாசலிலிருந்து விடைபெறும் நேரம் அவர் அமைதியாகச் சொன்னார். ’மேடம், உங்களுக்கு ரூபாய் 50,000 லோன் அளிக்க ஆவன செய்கிறேன். முதல் கட்டக் கடனை அதை வைத்துச் சமாளியுங்கள்.’
கண்ணெதிரே கடவுள் வந்து நின்று வரம் கொடுத்ததுபோல் உணர்ந்தேன். அடுத்த சில நாள்கள் வேலையைத் தவிர வேறு சிந்தனைகள் இல்லை. ஓன்றிரண்டு மாதங்களில், நான் கேட்காமலேயே என்னுடைய ஓசிசி லிமிட் 75,000 ரூபாயாக உயர்ந்தது.
மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்று நினைத்தபோது, பிரச்னைகள் மீண்டும் சூழ்ந்தன.  உற்பத்தி செய்த இயந்திரங்கள் பர்சேஸ் ஆர்டர் இல்லாமல் தங்கிவிட்டன. விற்ற இயந்திரங்களுக்குப் பணம் வரவில்லை. தனிப்பட்ட முறையிலும் வீட்டு வாடகை, அலுவலக வாடகை என்று பல்வேறு சவால்கள். மார்க்கெட்டிங் சப்போர்ட் கொடுப்பதாகச் சொல்லி வந்தவர்களும் கையை விரித்துவிட்டனர். பிரசவத்துக்கான காலமும் நெருங்கி கொண்டிருந்தது.
சிறிய இடமாக இருந்தாலும், வீடும் அலுவலகமும் ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். அது அப்போதைய பணப் பிரச்சனையை முழுவதுமாகத் தீர்க்காவிட்டாலும் உடனடியாக ஓரளவுக்குத் தீர்த்துவைக்கும். என் கணவரும் இதற்கு ஒத்துக்கொண்டார். நான் நினைத்தது போல் இடம் தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகே இடம் கிடைத்தது. மேலே வீடு, கீழே அலுவலகம். சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கினேன்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பிரசவத்துக்குத் தாய் வீடு போகமுடியாத சூழல். குழந்தை பிறக்கும் தினத்தன்றும், என் பொருள்களை நானே எடுத்து வைத்துக் கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போக நேர்ந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை. அலுவலக வாழ்க்கை. இரண்டிலும் பிரச்னைகளும் சவால்களும் மாறிமாறி வரத் தொடங்கின. ஆனால் அனைத்தையும் மீறி, உழைப்பின் பலன்கள் சிறிது சிறிதாக கிடைக்கத் தொடங்கின. குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தோல்வியைக் குறித்து நான் ஒருபொழுதும் சிந்திக்கவில்லை என்பதுதான்.
வெற்றி பெற்றவர்களின் கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது தற்செயலல்ல. தாங்கமுடியாதபடி பல துயரங்களை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களைச் சவால்கள் பிடித்து தள்ளியிருக்கும். ஒருவர்கூட சுகமாக இலக்கை அடைந்திருக்கமாட்டார்கள்.
நான் சில விஷயங்களில் தெளிவாக இருந்தேன். யாரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பணபாக்கி வைத்துக்கொள்ளக்கூடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும். நம்மிடமிருந்து ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறாரென்றால் அவர் அதற்குண்டான பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
என் அலுவலகத்துக்கு வருபவர் யாராக இருந்தாலும் அவர், தான் ஒரு நேர்மையான நிர்வாகத் திறமையாளரிடம்தான் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்று உணரவேண்டும். இந்த 22 வருடத்தில் என்னுடைய ஒரு காசோலைகூட பணம் இல்லை என்று வங்கியில் இருந்து திரும்பியதில்லை.  இதை என்னுடைய மிகப் பெரும் பலமாகக் கருதுகிறேன்.
0
சுயதொழில் செய்வோர், வீடு, நிலம் வாங்குவதைப் பற்றி இந்த இடத்தில் சிறிது பார்ப்போம். சுயதொழில் செய்வோர் தங்கள் லாபத்தை நல்ல விதமாக முதலீடு செய்ய நினைக்கும்போது, தொழில் செய்வதற்காக உரிய இடத்தை விலைக்கு வாங்குவது மிகமிக அவசியம். சிறு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதல் தேவையே ஒரு இடம் என்று இருக்கும்போது, வரும் லாபத்தில் அதற்குரிய இடத்தை வாங்குவது மிக  அவசியம். ஆனால் தொழில் செய்வதற்கு வேண்டிய இடத்தை வாங்குவதாக இருந்தாலும், வாடகைக்கு எடுப்பதாக இருந்தாலும் அதற்குரிய செலவை தொலைநோக்கோடு திட்டமிடாது போனால், ஒவ்வொரு மாதமும் அந்தத் தொழிலை நடத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படும்.
சிலர் ‘நான் வீட்டிலிருந்தபடியே தொழில் செய்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, தேவையான தொழில் ரீதியான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் பல சட்ட ரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தொழிலில் ஒரு மாதிரி தலையெடுத்து வரும் கால கட்டத்தில், இதைப் போன்ற சட்டச் சிக்கல்கள் வரும்போது மேற்கொண்டு தொடரமுடியாமல் போய்விடும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, முதலில்  வேலைக்கான இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். பணம் இருப்பவர்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்பது உண்மையானால் என்னைப் போன்ற பலர் தொழில்முனைவோராக மாறியிருக்கமடியாது. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே  தொழில் செய்து முன்னேறியிருக்க வேண்டும்.
ஆக, பணம் மட்டும் தொழில் தொடங்குவதற்குக் காரணமல்ல. எத்தனையோ பிற முக்கிய அம்சங்களோடு சேர்த்து பணமும் தேவை. அவ்வளவுதான். இதை பலர் உணர்வதில்லை. ‘பணம் போடுவதற்கோ கடன் கொடுப்பதற்கோ யாராவது இருந்தால், நான் இந்நேரம் தொழில் செய்து உலகையே என் காலடியில் கொண்டு வந்திருப்பேன்’ என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: