வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அட்டக்கத்தி - சமரசங்கள் இல்லாமல் திரையில்


இதுவரை பார்க்காத சென்னையை இதில் பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை. சென்னையை சுற்றியுள்ள கிராம பகுதியின் மக்கள் வாழ்வை பிரதிபலிக்கிறது அட்டகத்தி என்ற திரைப்படம். அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களின் கதையை சமரசங்கள் எதுவும் இல்லாமல் திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். கதாபாத்திர தேர்வு, காட்சிபடுத்திய விதம் என அனைத்தும் கச்சிதம். ஆனால் கதை சொல்லப்பட்ட விதம் தான் சில இடங்களில் குழம்ப வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவை மட்டுமில்லாமல் பார்வையாளர்களையும் ஏமாற்றிவிடுவது மிகப் பெரிய ஏமாற்றம்! ஃபெயிலாகி விட்டு டுடோரியல் காலேஜில் படிக்கும் தீனா என்கிற தினகரன். எப்படியாவது ஒரு பெண்ணை கரெக்ட் பண்ணி காதலிக்க வேண்டும் என்பது இவர் லட்சியம். தினமும் பேருந்தில் பயணம் செய்து படிக்கப்போகிறார் தினகரன். பாக்குற ஒரு பொண்ண விடறதில்ல.
ஏதாவது ஒரு பொண்ணு எதிரில் வந்தா தலைமுடியை சரி பண்ணி, முகத்தை துடைத்து கெத்தா நடக்கிற கேரக்டர். செம பீலா பார்ட்டி. டுடோரியல் காலேஜ் என்று சொல்லாமல் காலேஜ் படிக்கிறேன் என்று வெளியில் சொல்லிக்கொள்வார். எல்லோரும் காதலித்துதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இவங்க நண்பர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்.முதல்ல பூர்ணிமா என்ற பெண்ணை ரூட் விட்டு காதலை சொல்லப் போகும் நேரத்தில், அவளோ தினகரனை அண்ணா... என்று அழைக்க ‘பல்பு’ வாங்கி திரும்புகிறார் தினகரன். திவ்யா, நதியா என பல பெண்கள்... ஒன்னு கூட நம்ம ஹீரோவுக்கு செட் ஆகல. எல்லா விஷயத்திலும் மொக்கை வாங்குவதாலேயே அட்டகத்தி என்று அழைக்கப்படுகிறார் ஹீரோ தினகரன்.நண்பர்களுடன் ஊர் சுற்றும் ஹீரோ +2 பாஸாகிவிட, சென்னை அரசு கல்லூரியில் சேர்கிறார். புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள்.  சண்டை, பிரச்சனை, அடிதடி என காலேஜ் வாழ்க்கை தொடங்குகிறது. பேருந்தில் பயணம் செய்து கெத்து காட்டும் ஹீரோவை ரூட்டு தல என்று அழைக்கிறார்கள். அட்டகத்தி இப்போது தல ஆகிவிட்டார். இந்த நேரத்தில் தான், தினகரன் முதன் முதலில் காதலை சொன்னாரே அந்த பூர்ணிமாவும் அதே காலேஜில் வந்து சேர்கிறார். மீண்டும் லவ் சீன் தான்.சீரியஸான காதல் தான் என்று ஹீரோ மட்டும் இல்ல, நாமும் நினைத்து விடுகிற நேரத்தில் அதுலயும் ‘பல்பு’ வாங்குகிறார் ஹீரோ. நாமும் தான்! ஒருத்தன் எப்படி இத்தனை பெண்களை காதலிக்க முடியும் என்று கேள்வி வரலாம். அட... இந்த காலத்துல இதெல்லாம் சகஜம் தான். இந்த மாதிரி கேரக்டர்கள் நிஜ வாழ்கையிலும் நிறைய உண்டு. ஆனால் அதற்கு பெயர் காதல் என்று நினைத்துக்கொள்வதுதான் அநியாயம். பேருந்தில் ஒரு பெண் ஹீரோவைப் பார்த்து சைட்டடிப்பதும், பேருந்திலேயே இருவரும் ஜலபுலஜங்ஸ் நடத்துவதும் பலருக்கு வியப்பாக இருக்கலாம். இது போன்ற விஷயங்கள் புறநகர் பேருந்துகளில் நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பதில் சந்தேகமும் இல்லை.ஹீரோ தினேஷ், ஹீரோயின் நந்திதா, ஹீரோவின் அம்மா, அப்பா, அண்ணன், நண்பர்கள் என எல்லாமே சரியான தேர்வு. ஹீரோவின் அப்பா குடித்துவிட்டு கலாய்க்கும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஹீரோ காதல் கடிதம் எழுதும் போது சினிமா பாட்டு புத்தகத்தை பார்த்து காப்பி அடிப்பதும், பென்சில் சீவும் போது கையில் ரத்தம் வந்ததும் அந்த ரத்ததில் ஐ லவ் யூ எழுதுவதும் ரசிக்க வைக்கும் காட்சி.கானா பாலா பாடிய ஆடிப்போனா ஆவணி..., நடுக்கடலுல..., பாடல்கள் தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என அனைத்தும் அதிகமான அலட்டல்கள் இல்லாமல் இருந்தது ஆறுதல்.ஒரு பத்து வருடதுக்கு முன்பு வந்திருந்தால், இதே ஸ்டைலில் பல படங்கள் வெளிவந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ( இப்பல்லாம் ஏது பாஸ் லவ் லெட்டர் - மிஸ்டுகால், எஸ்.எம்.எஸ் என்று காலம் எங்கோ போய்விட்டது ) 80களில் பிறந்தவர்கள் படத்தை ரசிக்கலாம். பல ஞாபகங்களை அட்டகத்தி கிளறிவிடும் என்பதில் ஆச்சரியம் இல்லை.அட்டக்கத்தி - ‘பல்பு’ ஹீரோவுக்கு மட்டும் இல்ல, நமக்கும் தான்!

கருத்துகள் இல்லை: