வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 4


www.tamilpaper.net
பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி மிகவும் சிறப்பாக இருந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் மகாராஜா ரஞ்சித் சிங் மேற்கொண்ட விசேஷ முயற்சிகள்தான். History of Indigenous Education in the Punjab என்ற புத்தகம் டாக்டர் லெயிட்னரால் (Gottlieb William Leitner) எழுதப்பட்டிருந்தது. லாகூரில் இருந்த ஓரியண்டல் கல்லூரி, அரசு கல்லூரி ஆகியவற்றின் பிரின்சிபாலாக இருந்தவர் இவர். டைரக்டர் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் ஆகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார்.
அவர் தன்னுடைய நூலில் வேதனையுடன் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
‘பஞ்சாபின் உண்மையான பாரம்பரிய கல்வி கழுத்து நெரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. அதை ஆரோக்கியமான முறையில் மறுமலர்ச்சி அடையச் செய்யவும் வளர்த்தெடுக்கவும் இருந்த வாய்ப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. அல்லது திரிக்கப்பட்டன. தனி நபர்களை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. இது நம் (பிரிட்டிஷ் அரசின்) நிர்வாகத்தின் ஒட்டு மொத்த தோல்வியையே காட்டுகிறது.’

இந்த வாக்கியங்கள் பிரிட்டிஷ் அரசின் பிழையான செயல்பாடுகளுக்கு அழுத்தமான ஆதாரமாக விளங்குகின்றன. பிரிட்டிஷாரின் கைக்கு பஞ்சாப் வருவதற்கு முன்பாக அங்கு கல்வி எப்படி இருந்தது என்பது பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.
‘பஞ்சாப் ஒரு அருமையான பிரதேசம். சட்லெஜ், யமுனை நதிகள் பாய்வதால் மட்டுமல்ல. இந்த ஒட்டுமொத்த பிராந்தியமுமே அற்புதமான நினைவுகளைக் கொண்டிருக்கிறது. அதன் கலாசார வரலாறு பல்வேறு விஷயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. திறமையான நிர்வாகம், தலைமைக்குக் கீழ்படியும் விசுவாசம் இவற்றுக்கெல்லாம் பஞ்சாபுக்கு இணையாக உலகில் வேறு எங்குமே கிடையாது. இவை எல்லாவற்றையும்விட கல்வி கற்பதற்கு இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஆர்வமும் மதிப்பும் அபாரமானது. அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது. ஒரு பூசாரி என்பவர் ஒரு பேராசிரியராகவும் கவிஞராகவும் இருந்திருக்கிறார். கல்வி என்பது சமூக, மத, தொழில் சார் கடமையாக இருந்திருக்கிறது.’
பஞ்சாப்தான் இந்தியாவிலே கடைசியாக பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பகுதி. ஔரங்கசீபுக்குப் பின்னால் வந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சீக்கியர்கள் வலுப்பெற்றிருந்தனர். முழுவதுமாக பிரிட்டிஷாரின் வசம் பஞ்சாப் வருவதற்கு முன்புவரை சீக்கீயர்களின் நிர்வாகத்தின் கீழே பஞ்சாப் இருந்தது. அவர்கள் தங்களுடைய பாரம்பரிய வழிமுறைகள் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள். எனவே, கல்வியைப் பழைய முறைப்படியே தொடர்ந்து நிர்வகித்துவந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கு என்று கணிசமான தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. வாத்தியார் காணி, காவல்காரன் காணி போன்றவை இல்லாத கிராமமே கிடையாது. கல்வி இலவசமாகவோ, மிக சொற்பமான கட்டணம் பெறப்பட்டோ தரப்பட்டது. இந்த ஆரம்ப நிலைப் பள்ளிகள் நீங்கலாக ஏராளமான கல்லூரிகளும் இருந்தன. மெய்யியல், வானவியல், கணிதம், இலக்கணம், தத்துவம் மற்றும் பல விஷயங்கள் கற்றுத்தரப்பட்டன.
Philip Hartog
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி தரப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியும் தரப்பட்டது. ஒவ்வொரு மாணவரின் திறமைக்கு ஏற்பவும் அவர் என்ன தொழிலை உத்தேசித்துப் படிக்கிறார் என்பதற்கு ஏற்பவும் ஆசிரியர்கள் கல்வி அளித்தனர்.
இந்த விஷயங்களை பிலிப் ஹெர்டாகுக்கு தேசாய் அனுப்பி வைத்தார். ஆனால், ஹெர்டாகுக்கு இவை திருப்தியைத் தரவில்லை. இதில் அவர் விரும்பும் வகையிலான புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை. எனவே காந்தியை 1931 டிசம்பர் 2 அன்று சந்தித்தபோது தன் தரப்பு வாதங்களை மேலும் வலுவாக முன்வைத்தார். இந்த பஞ்சாப் பற்றிய அறிக்கையை வைத்துத்தானா அந்த அதிரடி முடிவுகளை அறிவித்தீர்கள் என்று காந்தியை மடக்கினார்.
டாக்டர் லெயிட்னர் பஞ்சாப் பற்றி எழுதிய அறிக்கை1882-ல் எடுக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை சுமார் 21 கோடி. அது 1931 வாக்கில் 27 கோடியாக உயர்ந்திருக்கிறது. சுமார் 30 சதவிகித உயர்வு. அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் கல்விகற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கல்வி குறைந்தது என்று சொல்லவே முடியாது என்று வாதிட்டார்.
இந்தியப் பாரம்பரியக் கல்வியை பிரிட்டிஷார் நேரடியாக அழிக்கவில்லை. அதை அவர்கள் புறக்கணித்தார்கள். அதனால் அது அழிய நேர்ந்துவிட்டது என்று காந்தி தன் வாக்கியத்தைச் சிறிது மாற்றிக்கொண்டார். அந்தக் கல்வி முறையில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நல்லதாக எதுவும் இருந்திருக்கவில்லை. எனவே, பிரிட்டிஷார் அதை இயற்கை மரணத்தைத் தழுவும்படி விட்டுவிட்டார்கள் என்று ஹெர்டாக் சொன்னார். இஸ்லாமிய மத நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த கல்வியானது இஸ்லாமியர்களுக்கு பெரும் பின்னடைவைத்தான் தந்துள்ளது. நாட்டின் பிற பல பகுதிகளில் நடந்துவந்த பள்ளிகளின் நிலைமையும்இதுவேதான் என்று சொன்னார்.
தேவனின் மகிமையையோ விஞ்ஞானத்தின் பெருமையையோ போதிக்காத கல்வி இயற்கையான மரணத்தைத் தழுவ வேண்டிய ஒன்றாக பிரிட்டிஷாருக்குத் தோன்றியதில் வியப்பேதும் இல்லையே.
ஒருவகையில் ஹெர்டாக் சொன்னது சரிதான். பிரிட்டிஷார் இந்தியப் பாரம்பரிய மரத்தை கோடாலியால் வெட்டிப் பிளக்கவில்லை. ஆனால், அந்த மரத்துக்கு நீர் வரும் கால்வாயை அடைத்துவிட்டார்கள். அந்த மரம் வாடிவிட்டது. அதற்கு மாற்றாக ஆங்கிலக் கல்வி தரும் வேறு ஏராளமான முட்செடிகளை நட்டு வளர்த்தார்கள்.
இந்திய இலக்கியங்கள் எதையுமே படிக்காமலேயே அவை அனைத்தும் குப்பை என்ற தீர்மானத்துக்கு வந்த மெக்காலேயிடம்தான் நம் கல்வியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
தாஜ்மகாலை வெறும் பளிங்குக் கற்களை பிரமாண்டமாக அடுக்கிவைக்கப்பட்ட குவியல் என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை காட்டுமிராண்டித்தனமான கட்டுமானம் என்றும் சொன்ன லுட்யென்ஸ் (Edwin Lutvens) வசம்தான் நம் தலைநகரை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்தியா கேட் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையை ஒரு வழியாக எடுத்த பின்னரும் 5000 ஆண்டுகளுக்கும் அதிகமான கலாசார பாரம்பரியமுள்ள சுதந்தர இந்தியாவால், அந்த இடத்தில் வேறொரு சிலையை வைக்கமுடியவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலையையோ, நவீன இந்தியாவை உருவாக்கிய முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சிலையையோ வைத்திருக்கலாம். பன்மைத்தன்மை மிகுந்த தேசத்துக்குப் பொதுவானதொரு சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் சிலையை அங்கே வைத்திருக்கலாம். அல்லது சாரநாத்தில் உள்ள அசோகர் தூண் போன்ற ஒரு சின்னத்தையாவது அங்கே வைத்திருக்கலாம். ஆனால், அந்த மண்டபம் இன்றும் காலியாகத்தான் இருக்கிறது. இந்தியப் பாரம்பரியக் கல்வியின் கண்ணி அறுபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் இப்படியான அவலம் நமக்கு நேர்ந்திருக்காது.
ஹெர்டாக் காந்தியுடன் வேறு பல விஷயங்களும் பேசினார். ஆரம்பக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்; இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கிடைக்க வழி செய்யவேண்டும் என்று சொன்னார். சாட்லர் கமிஷனின் உறுப்பினராக இருந்தபோது அவர்கள் பல்கலைக்கழக உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொன்னபோது ஹெர்டாக் அதை மறுத்துத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தர எவ்வளவு செலவாகும். அதன் மூலம் எத்தனை பேருக்கு கல்வி கிடைக்கும்… எத்தனை வருடங்களில் அதை செய்து முடிக்க முடியும் என்ற புள்ளிவிவரங்களை விரிவாகப் பட்டியலிட்டார். அது மட்டும் போதுமா… அடிப்படைக் கல்விக்குப் பிறகு நடுநிலைக் கல்வி தருவது தொடர்பாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று காந்தி கேட்டபோது அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்பதே ஹெர்டாகின் பதிலாக இருந்தது. ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுக்கொண்டே செல்வதைவிட நூறு மரங்கள் நட்டாலும் தொடர்ந்து பராமரித்து அதைப் பெரிய மரமாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது காந்தியின் சிந்தனையாக இருந்தது.
பெண்களுக்கான கல்வியின் வீச்சு அதிகரிக்க வேண்டும் என்று ஹெர்டாக் சொன்னபோது, நிச்சயமாக அதைச் செய்யத்தான் வேண்டும். அதே நேரம் பெண்களை நல்ல தாயாக ஆக்குவதற்கும் அந்தக் கல்வி பயிற்றுவிப்பதாக இருக்கவேண்டும் என்று சொன்னார். சுருக்கமாகச் சொல்வதானால், காந்தியின் கல்வித் திட்டம் என்பது நல்ல மதிப்பீடுகள் சார்ந்ததாக இருந்தது. தனி நபர் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே சிறந்தது என்பதாக இருந்தது.
ஹெர்டாக் கடைசியாக ஒரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார். கல்வி தொடர்பான ஒரு பிரச்னைக்கு இந்தியா இன்னும் தீர்வு காணவில்லை. ஒரு விவசாயியை கிளார்க்காக ஆக்குவதற்குப் பதிலாக மேலும் சிறந்த விவசாயியாக ஆக்கும் வகையிலான கல்வி முறையை அது கண்டடையவில்லை.
தேர்ந்தெடுப்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமென்றால் எல்லாரும் ஒரே தேர்வைத்தான் எழுத வேண்டும். இந்த மரத்தில் ஏறுங்கள் பார்க்கலாம்.
அவர் சொன்னவையே இன்றும் நம் பிரச்னைகளுக்கெல்லாம் ஆதார காரணமாக இருந்துவருவதை ஒருவர் பார்க்க முடியும். நினைத்துப் பாருங்கள்… செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்ட ஒருவரை பாட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக ஆக்கியிருக்கலாம். மாடு மேய்த்தவரை அமுல் இந்தியாவின் தலைவராக ஆக்கியிருக்கலாம். சேற்றில் இறங்கி உழுத விவசாயியை விவசாயப் பல்கலையின் பேராசிரியராக, பிரின்சிபாலாக உயரச் செய்திருக்கலாம். அது மிகவும் இயல்பான, எளிய, சண்டை சச்சரவுகள் இல்லாத வளர்ச்சியாக இருந்திருக்கும். அந்ததந்தப் பிரிவினர் பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் உயர்ந்திருப்பார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. அனைவருமே அரசுப் பணிகளின் குறுகலான வாசல் வழி நுழைவதில்தான் முட்டி மோதினார்கள். அல்லது மோதவைக்கப்பட்டார்கள். அதன் விலையை நாம் கொடுத்துவருகிறோம். இனியும் கொடுப்போம்.
காந்தி – ஹெர்டாக் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிய வருகிறது. காந்தியிடம் தன் கூற்றை பலப்படுத்துவதற்கான புள்ளிவிவரங்கள் போதுமான அளவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால், விஷயம் என்னவென்றால் அது புள்ளிவிவரத்தால் அளவிட முடிந்த ஒன்றும் அல்ல.
மேலும் காந்தியிடம் அப்போது அந்தப் புள்ளி விவரங்கள் இருந்திருக்கவில்லையே தவிர அவை இல்லாமலேயே போயிருக்கவில்லை. இந்தியாவில் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தியப் பாரம்பரியக் கல்வி ஒரு அழகிய மரமாகத்தான் இருந்தது என்ற கூற்றுக்கு ஆதாரமாக லண்டன் நூலகத்தின் மூடப்பட்ட அறைகளில் தெளிவான, விரிவான புள்ளிவிவரங்கள் மண்ணில் புதைந்த விதை போல் தூங்கிக் கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி போல் தரம்பால் வந்து தொட்டு எழுப்பும்வரை.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: