வியாழன், 16 ஆகஸ்ட், 2012

Alchemists இல்லையென்றால் அமிலங்கள், காரங்கள், உப்புகள் நமக்குக் கிடைத்திருக்காது.


மேட்டர் / அத்தியாயம் 4
ஆரம்பகாலத்தில் தாதுக்களிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுத்தவர்கள், ஈயத்தைத் தங்கமாக்க முயற்சி செய்த ரசவாதிகள் ஆகியோர் மிக மிக முக்கியமான வேதியியல் விஞ்ஞானிகள்.
இவர்களுடைய விடாமுயற்சியாலும் எண்ணற்ற பரிசோதனைகளாலும்தான் வேதியியல் துறை வெகுவாக முன்னேறியது. 19-ம் நூற்றாண்டு ஆரம்பித்ததும் வேதியியல், வலுவான சித்தாந்தப் பின்னணியுடன் ஒரு முழுமையான அறிவியல் துறையாக மாற ஆரம்பித்தது. அதிலிருந்துதான் பொருள்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது. அவற்றையெல்லாம் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
அதற்குமுன், 18-ம் நூற்றாண்டில் இறுதிவரையில் நம் பரிசோதனை வேதியியல் விஞ்ஞானிகள் என்னவெல்லாம் செய்திருந்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்.

மனிதகுல முன்னேற்றத்தில் மிக முக்கியமானது ஆடைகளை உருவாக்குவது. இலை தழைகளிலிருந்து தொடங்கி, பருத்தி பயிர் செய்து, நூல் உருவாக்கி அங்கிருந்து தறிகளில் ஆடைகள் நெய்யத் தொடங்கிய மனிதன், அடுத்து பார்வையைச் செலுத்தியது வண்ணங்களில்.
பல்வேறு இயற்கை வண்ணங்களை தாவரங்களிலிருந்து வடித்தெடுத்து, அவற்றை விதவிதமான முறைகளில் நூலில் செலுத்தி வண்ண வண்ண ஆடைகளை உருவாக்குவதைப் பல நாகரிகங்கள் செய்தன. சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய அஜந்தா குகை ஓவியங்களில் விதவிதமான ஆடைகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு நூதனமான தொழில்நுட்ப முறைகள் ஆடைகளில் வண்ணம் சேர்ப்பதில் அப்போதே நிலவியிருந்தன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அடுத்த முக்கியமான தொழில்நுட்பம் ஓவியம் வரைவதற்கான வண்ணங்களை உருவாக்குவது. துணி வண்ணங்களிலிருந்து ஓவிய வண்ணங்கள் மாறுபட்டவை. துணி வண்ணங்கள் பெரும்பாலும் தாவரப் பொருள்களால் ஆனவை. ஓவிய வண்ணங்கள் பெரும்பாலும் தாது உப்புகளால் அல்லது ஆக்சைடுகளால் ஆனவை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் தொடங்கி அஜந்தா குகை ஓவியங்கள்வரை நம்மால் இன்றும் அவற்றைப் பார்க்கமுடிகிறது.
அதேபோல மருந்துகள். சித்தர்கள், ஆயுர்வேத ரிஷிகள் போன்றோர் பல்வேறு தாவரப் பொருள்களை மருந்துகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உலகின் பிற பாகங்களிலும் இப்படிப்பட்ட மருத்துவ விஞ்ஞானிகள் இருந்தனர். இவர்களுடைய முறை ‘பட்டறிவு முறை’ (எம்பிரிகல்) எனப்படும். உள்ளுணர்வால் ஒரு சில மூலிகைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். பின் அவற்றை உலரவைத்து, அரைத்து, பல்வேறு விகிதங்களில் சேர்த்து, வேதிவினைகளுக்கு ஆட்படுத்தி, மருந்தை வெவ்வேறு நோயாளிகளுக்குக் கொடுத்து, இறுதியில் பெரும்பாலானவர்களுக்குப் பலன் அளிக்கக்கூடியதான ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பார்கள்.
உணவு பதப்படுத்துதலில் எண்ணற்ற வேதிப் பொருள்கள் தினம் தினம் பயன்படுகின்றன. இதிலும் நிறைய பட்டறிவு சார்ந்த முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாலைத் தயிராக ஆக்குதல், தோசை மாவைப் புளிக்கவைத்தல் போன்ற செயல்பாடுகளில் உயிரிகள் வேதிவினை புரிவதைப் புரிந்துகொண்டு அவற்றை இன்றுவரை தொடர்ந்து செயல்படுத்திவருகிறோம் நாம்.
அடுத்து நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டியது அமிலம், காரம், உப்பு ஆகிய வேதிப்பொருள்களை. இவற்றின் முழுமையான வரலாறு நமக்குத் தெரியவில்லை. சாப்பிடும் உப்பு (சோடியம் குளோரைடு) மனித உணவில் சில ஆயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கவேண்டும். உப்பளங்கள், கடல் நீரிலிருந்து உப்பு எடுப்பது போன்றவை பற்றி நாம் பண்டைய இலக்கியங்களிலேயே படித்திருக்கிறோம்.
அமிலங்கள் பலவற்றையும் தினம் தினம் நாம் சமையலில் பயன்படுத்துகிறோம். எலுமிச்சை (சிட்ரிக் அமிலம்), புளி (டார்டாரிக் அமிலம்) ஆகியவை இல்லாத சமையலே நம்மிடம் இல்லை. புளிக்காடி எனப்படும் வினிகரும் (அசிட்டிக் அமிலம்) சமையலில் பயன்படும் பொருள்தான். இந்தக் காடியை ஆப்பிள், கரும்பு, தேங்காய், பேரீச்சை என்று அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களிலிருந்து தயாரிக்கலாம். இவை எல்லாமே உணவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இவற்றையெல்லாம்விட மிக வலுவான ஓர் அமிலம் நம் வயிற்றில் எப்பொதும் சுரந்துகொண்டே இருக்கிறது. அதுதான் ஹைட்ரோகுளோரிக் அமிலம்.
அமிலம் என்றாலே ஒருவித புளிப்புச் சுவை. அதேபோல காரம் என்பதில் ஒருவித காரமான எரிச்சல் தரும் சுவை. உப்பின் சுவை நமக்கு நன்றாகவே தெரியும். காரம் என்பதற்கு நல்லதோர் உதாரணம், வெற்றிலையுடன் போடப்படும் சுண்ணாம்பு. அதில் இருக்கும் கால்சியம் ஹைட்ராக்சைடு என்பது ஒரு காரம்.
பல உலோகங்களின் தாதுக்களை, மேலே சொன்ன சுண்ணாம்புடன் சேர்த்து வாணலியில் இட்டு வறுக்கும்போது பலவகைக் காரங்கள் கிடைத்தன.
எளிதில் தயாரிக்க முடிந்த ஓர் அமிலம் சல்பூரிக் அமிலம் அல்லது கந்தக அமிலம். கந்தகத்தைக் காற்றில் எரித்து, அதன்மூலம் உருவாகும் புகையை நீரில் கரைத்தால் கந்தக அமிலம் கிடைத்துவிடும். இந்தக் கரைசல் ரசவாதிகள் கையில் மிக முக்கியமான பொருளாக ஆனது. இந்தக் கரைசல் பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கவல்லது. ஆனால் சில உலோகங்கள் இதற்கு மசியாது.
இந்த கந்தக அமிலக் கரைசலை எடுத்துக்கொண்டு அதில் சாப்பாட்டு உப்பைக் கொட்டினால் உடனே ஹைட்ரோகுளோரிக் அமிலம் கிடைத்துவிடும். அதாவது நம் வயிற்றில் கிடைக்கிறதே, அந்த அமிலம். இப்போது நம் ரசவாதிகளுக்கு இரண்டாவது அமிலம் கிடைத்துவிட்டது.
இதைவிட வலுவான ஓர் அமிலம் உண்டு. வெடி உப்பு என்று ஒரு பொருள் சொல்வார்கள். இயற்கையில் கிடைக்கக்கூடியது. இதனைக் கொண்டுதான் ஆரம்பகாலத்தில் துப்பாக்கி வெடிமருந்தைத் தயாரித்தார்கள். அதனால்தான் இதன் பெயரும் வெடி உப்பு! ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த்தும், சாப்பாட்டு உப்பு, வெடி உப்பு ஆகியவற்றை வரி இன்றி வியாபாரம் செய்யும் உரிமையைத்தான் முகலாய அரசர்களிடமும் நவாபுகளிடமும் பெற்றார்கள். இந்த வெடி உப்பு என்பது பொடாசியம் நைட்ரேட் என்பது.
எப்படி சாப்பாட்டு உப்பை (சோடியம் குளோரைடு) கந்தக அமிலத்தில் போட்டால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் கிடைக்கிறதோ, அதேபோல வெடி உப்பை (பொடாசியம் நைட்ரேட்) கந்தக அமிலத்தில் போட்டால் நைட்ரிக் அமிலம் கிடைக்கும்.
இந்த அமிலம் முன் உள்ள இரண்டு அமிலங்களைவிடவும் அதிக விரியம் கொண்டது. தோலில் பட்டால் எரித்துப் பிய்த்துவிடும் என்பது மட்டுமல்ல, பொதுவாக மேலே சொன்ன அமிலங்களில் கரையாத உலோகங்களும்கூட நைட்ரிக் அமிலத்தில் கரையும்.
ஆனால் இந்தத் தங்கம் இருக்கிறதே, அது இந்த எல்லா அமிலங்களுக்கும் டிமிக்கி கொடுத்துவந்தது. தனித்தனியாக கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்று எதில் போட்டாலும் கரையவில்லை.
அதற்கு ஒரு தனி காம்பினேஷன் தேவைப்பட்டது. ஒரு பங்கு நைட்ரிக் அமிலம், மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்த கலவை. இது தங்கத்தையே கரைத்துவிடக்கூடிய தன்மை கொண்டது. இதற்கு அக்வா ரீஜியா என்று பெயர்.
ஆக இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டுதான் ரசவாதிகள் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனாக ஈயத்தைத் தங்கமாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருந்தனர். ஆனால் அவர்கள் இல்லையென்றால் இத்தனை அமிலங்கள், காரங்கள், உப்புகள் ஆகியவை நமக்குக் கிடைத்திருக்காது.
இனி இவற்றை வைத்துக்கொண்டு 18-ம் நூற்றாண்டில் என்னவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை நோக்கிப் போவோம்.
 (தொடரும்)

கருத்துகள் இல்லை: