சென்னை: ரயிலில் ஏ.சி.பெட்டியைப் போன்று இனி 2ம்
வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
கட்டாயமாக்கப்படுகிறது.
ரயிலில் ஏ.சி. பெட்டியில் பயணிப்பவர்கள்
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் இனி 2ம் வகுப்பு அதாவது தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டியில்
பயணம் செய்வோரும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம்
அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு ரயில்வே போர்டுக்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் முகுல்ராய் உத்தரவிட்டுள்ளார். ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிப்பவர்கள், அடுத்தவர் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணிப்பவர்கள் போன்றோரை கண்டறிய இந்த புதிய திட்டம் உதவும். பயணத்திற்கு முந்தைய நாள் தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் யார் பயணம் செய்கிறார்களோ அவர்கள் தனது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்தால் மட்டும் டிக்கெட் கிடைக்கும்.
ஏ.சி. பெட்டியில் பயணிப்பவர்கள் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏ.சி. பெட்டியில் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாகக் கருதி அவர்களிடம் இருந்து அபாரதத்துடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை 2ம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டிக்கும் விரைவில் வரவிருக்கிறது.
குடும்பத்துடன் பயணம் செய்தால் யாராவது ஒருவர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் தனியாக பயணம் செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாகக் கருதி அவர்களிடம் இருந்து அபாரதத்துடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படும்.
அண்மையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரில் தீப்பிடித்ததில் 34 பேர் உடல் கருகி பலியாகினர். அதில் சிலரை அடையாளம் காண முடியவில்லை. மற்றவர்களின் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணம் செய்ததால் தான் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்னென்ன அடையாள ஆவணங்கள் வைத்திருக்கலாம்?
1. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.
2. பாஸ்போர்ட்.
3. வருமான வரித்துறையின் `பான்' கார்டு.
4. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழங்கும் (ஆர்.டி.ஓ.) டிரைவிங் லைசென்ஸ்.
5. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சீரியல் நம்பருன்கூடிய அடையாள அட்டை.
6. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வழங்கும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.
7. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ்புக்.
8. வங்கிகளின் கிரெடிட் கார்டு.
9. மத்திய அரசால் வழங்கப்படும் `ஆதர்ஸ்' அடையாள அட்டை.
ரயிலில் பயணிக்கும்போது இவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக