2010-2011ம் ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் கேபிட்டல் ஆகிய 4 நிறுவனங்களின் மூலம் அதன் தலைவர் அனில் அம்பானிக்கு ரூ. 17 கோடியை விட சற்று அதிகமாக சம்பளம் வந்தது. ஆனால் அந்த 4 நிறுவனங்களில் இருந்து தனக்கு வர வேண்டிய சம்பளத்தை பெறாமல் போர்டு மற்றும் பிற குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டதற்கான அமர்வுக் கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டார். சம்பளம் தவிர நிறுவனங்களின் டைரக்டர்களுக்கு கிடைக்கும் கமிஷனும் அனிலுக்கும் கிடைக்கும்.
அந்த நிறுவனங்களின் சமீபத்திய ஆண்டறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் அனில் ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேபிட்டல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய 3 நிறுவனங்களில் இருந்து தனக்கு சேர வேண்டிய கமிஷனை அவர் வாங்கவில்லை. அவர் 2009-2010ம் ஆண்டு முதல் 2011-2012ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் தனக்கு சேர வேண்டிய கமிஷனைப் பெறவில்லை.
பொருளாதார நிலை சரியில்லாததால் கடந்த சில ஆண்டுகளாக பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களில் பலர் தங்கள் சம்பளத்தை குறைத்துள்ளனர், சிலர் சம்பளமே வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர். அனிலைப் போன்று பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் கடந்த ஆண்டு தனது சம்பளத்தை 22 சதவீதம் குறைத்துவிட்டார். மேலும் 2011-2012ல் விப்ரோ நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜி தனது சம்பளத்தை பாதியாகக் குறைத்து ரூ.1.9 கோடி மட்டுமே பெற்றார்.
2011-2012ல் அனில் திருபாய் அம்பானி குழுமம் மூலம் அனிலுக்கு ரிலையன்ஸ் பவரில் இருந்து அமர்வு கட்டணமாக ரூ.80,000, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சரில் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸில் இருந்து ரூ.2.6 லட்சம் என்று மொத்தம் ரூ.5.4 லட்சம் கிடைத்துள்ளது. அவர் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சரில் இருந்து அமர்வு கட்டணத்தை தவிர சம்பளமோ, கமிஷனோ பெறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக