சென்னை ஜியோன் பள்ளிப் பேருந்தில் பயணித்த
மாணவி ஸ்ருதி, பேருந்தின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவத்தில்
அப்பள்ளியின் நிர்வாகி விஜயன் கைது செய்யப்பட்டதைப் போல, சென்னை பத்மா
சேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியின் நிர்வாகியான ராஜலட்சுமி
ஒய்ஜி பார்த்தசாரதி என்கிற திருமதி ஒய்ஜிபியும் கைது செய்யப்படுவாரா, அவர்
மீது கொலை வழக்கு பாயுமா என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும்
அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது
தமிழக மக்களை பதறடித்து வருகிறது. அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து அதே பேருந்து நசுக்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் தமிழக மக்களை துடிதுடிக்க வைத்தது.
அடுத்த நாளே வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி தனது பள்ளி வேனின் சக்கரத்திலேயே சிக்கி உயிரிழந்தாள். இந்த நிலையில் நேற்று இன்னொரு பிரபல சென்னை பள்ளியில் ஒரு 4ம் வகுப்பு மாணவன் அநியாயமாக உயிரிழந்துள்ளான். முழுக்க முழுக்க பள்ளியின் கவனக்குறைவே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
சென்னை கே.கே.நகரில் உள்ளது பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளி. இதன் நிர்வாகியாக இருப்பவர் ராஜலட்சுமி ஒய்.ஜி பார்த்தசாரதி, அதாவது திருமதி ஒய்ஜிபி. இவர் சிரிப்பு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஆவார்.
இவரது பள்ளியில் திரைப்பட இயக்குநர் மனோகரின் மகனான ரஞ்சன் 4ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் பள்ளிக்குள்ளேயே உள்ள நீச்சல் குளத்தில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்து கொண்டபோது ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்தான்.
இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர் ரெங்கா ரெட்டி, உதவியாளர் அருண்குமார், விளையாட்டு ஆசிரியர் ரவிச்சந்திரன், துப்புரவு பணியாளர் ரவி ஆகிய 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஆனால் பள்ளி நிர்வாகியான திருமதி ஒய்ஜிபி மீதோ முதல்வர் இந்திரா மீதோ மற்றவர்கள் மீதோ இதுவரை வழக்கு எதுவும் பதிவாகவில்லை.
பொதுமக்கள் ஆவேசம் - கடும் கோபம்
இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியையும், ஆவேசத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் மாணவன் ஒருவன் மூழ்கும் வரை நீச்சல் பயிற்சியாளர் உள்ளிட்டோர் என்ன செய்து கொண்டிருந்தனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை என்று அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை, வலிப்பு வந்து விட்டது, இதனால்தான் இறந்து விட்டான் என்று பொத்தாம் பொதுவாக பொறுப்பில்லாமல் பேசுவதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர்.
மாணவன் பலியானது தொடர்பாக கே.கே.நகர் போலீஸ் நிலையம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில்,போலீஸ் விசாரணையில் ராஜசேகரன், ரங்காரெட்டி, அருண்குமார், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவான செயல்பாட்டினால்தான் மாணவரின் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இவர்கள் விழிப்புடன் செயல்பட்டிருந்தால் மாணவனின் இறப்பை தவிர்த்திருக்கலாம் என்பது புலன் விசாரணையில் தெரிய வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஏன் கொலை வழக்குப் போடவில்லை?
ஜியோன் பள்ளியில் கடந்த மாதம் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தில், தானாக முன்வந்து வழக்குப் போட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன் பின்னரே அரசு சுதாரிப்படைந்து கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளைப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், ஏன் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் போடப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் முழுக்க முழுக்க அஜாக்கிரதையே காரணம் என்று காவல்துறையே கூறியுள்ளது. அப்படி உள்ள நிலையில் படு சாதாரணமான கவனக்குறைவு காரணமாக என்ற பிரிவில் வழக்குப் போட்டுள்ளனர். ஏன் கொலை வழக்குப் போடவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.
கைதாவாரா ஒய்ஜிபி?
அதேபோல ஜியோன் பள்ளி விவகாரத்தில் அதன் நிர்வாகியான தாளாளர் விஜயன், அவரது இரு தம்பிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல ஜேப்பியாரின் கல்லூரி வளாகத்தில் நடந்த விபத்தில் 10 பேர் பலியான சம்பவத்தில் ஜேப்பியாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் திருமதி ஒய்ஜிபி பள்ளி விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் தரப்பில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, ஏன் வழக்குக் கூட போடப்படவில்லை. இது என்ன நியாயம் என்றும் மக்கள் கேட்கிறார்கள்.
திருமதி ஒய்ஜிபியின் நேரடி கண்காணிப்பில்தான் இப்பள்ளி நிர்வாகம் நடக்கிறது. மாணவர்கள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட சற்று தாமதமானாலும் கூட டிசி கொடுத்து விடுவோம் என்று இப்பள்ளியில் மிரட்டுவார்கள். கடுமையான கட்டுப்பாடுகள், எதற்கெடுத்தாலும் பணம். இந்த நிலையில் ஒரு அப்பாவி மாணவனை அநியாயமாக சாக விட்டுள்ளனர். எனவே திருமதி ஒய்ஜிபி உள்ளிட்டோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை வழக்குப் போட வேண்டும். அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.
யார் இந்த திருமதி ஒய்ஜிபி?
சிரிப்பு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார்தான் திருமதி ஒய்ஜிபி. இவரது முழுப் பெயர் ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. ஆனால் எல்லோரும் திருமதி ஒய்ஜிபி என்றுதான் கூப்பிடுவார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சமச்சீர் கல்வியை ஒழித்துக் கட்ட உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்குககள் தொடரப்பட்டன. அதில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் கண்டனத்தை அரசு சம்பாதித்தது. அப்போது உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து இதுகுறித்து ஆராயுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் பேரில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினராக இருந்தவர்தான் இந்த திருமதி ஒய்ஜிபி. அப்போதே அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. பணக்காரர்களுக்காக பள்ளியை நடத்தும், அதுவும் ஸ்டேட் போர்ட் பாடத் திட்டத்தைப் பின்பற்றாத ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியை எப்படி இந்தக் குழுவில் சேர்க்கலாம் என்று எதிர்ப்புகள் கிளம்பின என்பது நினைவிருக்கலாம்.
ஜியோன் விஜயன், ஜேப்பியார் வரிசையில் திருமதி ஒய்ஜிபியும் இணைவாரா என்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக