பெங்களூர்: வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு
முஸ்லீம்களால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை. எனவே அவர்கள் கர்நாடகத்தை விட்டு
வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்
என்று முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெங்களூர்
நீலசந்திரா பகுதியில் நேற்று முஸ்லீம் அமைப்பான மெக்கா மஸ்ஜித் கமிட்டி
சார்பில் ஒரு அமைதிக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முஸ்லீம் தலைவர்கள்
பலரும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டாம்
என்று கேட்டுக் கொண்டனர்.கமிட்டித் தலைவர் முகம்மது சமியுல்லா கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பெங்களூரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் பாதுகாப்புடன்தான் உள்ளனர். யாருக்கும், எந்தவிதமான மிரட்டலும் இல்லை.
நாம் அனைவருமே வாழ்க்கைக்கா பல்வேறு ஊர்களுக்குச் செல்கிறோம். அதேபோலத்தான் வட கிழக்கு மாநிலத்தவர்கள் இங்கு வந்து வாழ்ந்து வருகின்றனர். நாம் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்து வருகிறோம். வட கிழக்கு மாநிலத்தவர்கள் கடுமையான உழைப்புக்குப் பெயர் போனவர்கள். எனவே அவர்கள் இங்கிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகைகளின் முடிவில் முஸ்லீம்களிடம், அஸ்ஸாம் பிரச்சினை குறித்து அனைவருக்கும் விளக்கிக் கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அங்கு நடப்பது மத ரீதியான மோதல் அல்ல, மாறாக சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பிரச்சினைதான் என்பதை விளக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக