செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஊருக்கே வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு… சொந்த வழக்கில் நீதிபதி எச்சரிக்கை!


Viru News , “அவகாசம் கேட்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கட்டும்”
“தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை அவகாசம் கேட்டு இழு இழு என்று இழுக்கிறார். அதை தடுக்க வேண்டும்” என்று தொடுக்கப்பட்ட வழக்குக்கே, பதிலளிக்க அவகாசம் கேட்டு நீதிபதிகளை கிறுகிறுக்க வைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. கோபமுற்ற நீதிபதிகள், “அவகாசம் கேட்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கட்டும்” என்று ஜெயலலிதாவின் வக்கீலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதிலளிப்பதற்கே அவகாசம் கேட்கப்பட்டது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு முடிவுக்கு வந்தால், ஜெயலலிதாவுக்கு விரும்பத் தகாத விதத்தில் முடிவு இருக்கும் என்பது, அவர்களுக்கு தெரியும்.
அதனால், எந்த சந்தில் எல்லாம் அவகாசம் கேட்க முடியுமோ, அங்கெல்லாம் புகுந்து அவகாசம் கேட்டுவருகின்றனர் தோழிகள். விசாரணை நடைபெறும்போது, “வாயில் உள்ள வெற்றிலை சாறு துப்பிவிட்டு வருகிறேன்” என்று அவகாசம் கேட்காததுதான் பாக்கி.
இதையடுத்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். “ஜெயலலிதா தரப்பின் இழுவையை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், அவர்கள் சகட்டு மேனிக்கு அவகாசம் கேட்பது குறையும்” என்பதே அன்பழகன் தாக்கல் செய்த வழக்கின் சாராம்சம்.
இந்த மனுமீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவகாசம் கேட்பதை தடுக்க கோரும் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தையே அதிர வைத்தார், ஜெயலலிதா தரப்பு வக்கீல். வக்கீல் கேட்டிருந்த அவகாசம், 3 வாரங்கள்.
பாவம், வக்கீலும் என்ன செய்வார்? ஜெயலலிதா தரப்பு கேஸை எடுத்ததில் இருந்து கோர்ட்டில் அவர் பிராக்டிஸ் செய்வதே, அவகாசம் கோரும் நடைமுறையில் மட்டும்தான். அவரே, சட்டப் படிப்பில் அந்த பாடத்தை மட்டுமே படித்து பாஸ் செய்தாரோ, என்னவோ!
அவகாசம் கோருவதை தடுக்க கோரும் வழக்குக்கு பதிலளிக்க ஜெயலலிதா தரப்பு வக்கீல் அவகாசம் கோரியதையடுத்து, அவரை கேலிப் பார்வை பார்த்த அன்பழகனின் வழக்கறிஞர் அல்லி அர்ஜூனா, “இவர்கள் கோர்ட்டில் தமாஷ் பண்ண வந்திருக்கிறார்களா?” என்று நீதிபதிகளைப் பார்த்து கேட்டுவிட்டு, “மேலும் அவகாசம் கொடுக்க கூடாது” என்றார்.
நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோரும், “இந்த வழக்கில் இனியும் அவகாசம் கேட்கக் கூடாது. இதுவே கடைசித் தடவையாக இருக்கட்டும்” என்று எச்சரித்துவிட்டு, வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.
3 வாரங்களின்பின், “கண் பரிசோதனை அப்பாயின்ட்மென்ட் உள்ளது” என்பதில் இருந்து, “கண்மாயில் மூக்குத்தி விழுந்துவிட்டது” என்பதுவரை ஏதோ ஒரு எக்ஸ்கியூஸூடன் இதே வக்கீல் வந்து நிற்பார் என்பது, பாவம் இந்த நீதிபதிகளுக்கு தெரியாது.

கருத்துகள் இல்லை: