விக்கிலீக்ஸின் பார்வையில் தமிழ் அரசியல்வாதிகள் சிலர
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் தமிழ் அரசியல்வாதிகள் குறித்த அபிப்பிராயங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் அமெரிக்க வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு அனுப்பிவைத்த அறிக்கை ஒன்றில் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அபிப்பிராயங்கள் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வறிக்கையில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் குறித்த அபிப்பிராயங்கள் உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த மேன்மையான தமிழ் அரசியல்வாதியென சித்திரிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் உறவினரான இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அதே நேரம் அரச ஆதரவு கட்சிகளையும் ஆதரிக்காமல் தனி வழியில் நின்றார் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளோ, அரசோ தமிழர் விவகாரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்று சிவாஜிலிங்கம் நம்பி இருந்தார் என்றும் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் தமிழர்கள், சிங்களவர் ஆகியோருக்கு என தனித் தனி பிரதமர்கள் வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்கான தீர்வாக இவரால் கொள்ளப்பட்டு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இவர் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் முழுமையான நீதி விசாரணை வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டும் என்றும் யுத்தத்தில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றும் யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகவே பேசி வந்துள்ளார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் யுத்த குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியமை குறித்து பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை என்றும் மிகவும் யதார்த்த முறையில் சிந்திக்கின்றார்கள் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் யுத்தக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியமையும், தண்டிக்கப்பட வேண்டியமையும் மிகவும் முக்கியமான விடயங்கள் என்று நம்புகின்றார் என்றும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் குறிப்பாக புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அக்கறையை வரவேற்கின்றார் என்றும் ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருக்கும் எந்தவொரு அரசும் யுத்த குற்ற விவகாரத்தை சரியான முறையில் கையாள மாட்டாது என்கிற யதார்த்தைப் புரிந்து வைத்திருக்கின்றார் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருக்கும் எந்த அரசு யுத்த குற்ற விசாரணைகளை முறையாக நடத்தாது என்றும் உண்மைகள் வெளி வரவேண்டியது தேசத்தின் நன்மைக்கு அத்தியாவசியம் என்றும் நம்புகின்ற சம்பந்தன் பாராளுமன்றத்தில் யுத்த குற்ற விவகாரங்களைப் பேச அஞ்சுகின்றார் என்று இவ்வறிக்கையில் எழுதப்பட்டு உள்ளது.
யுத்தத்தில் நடந்தவை என்ன? என்கிற உண்மைகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நம்புகின்ற சம்பந்தன் யுத்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கின்ற செயன்முறையில் தமிழருக்காக அவருடைய மனதில் இருக்கும் திட்டம் என்ன? என்பதை பல தடவைகள் தூதரகம் திரும்ப திரும்ப கேட்டபோதும் வெளிப்படுத்தவில்லை என்றும் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பில் உள்ள கல்விமான்கள் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் ஆகியோரின் நீடித்த பேராதரவுடன் கொழும்பை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் அரசியல்வாதி என அறிக்கையில் வர்ணிக்கப்பட்டு உள்ளார்.
சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர் ஆதரித்தார் என்றும் பொன்சேகா அந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயல் திட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையால் அன்றி பாராளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும் என்று பொன்சேகாவால் இவருக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு இருந்தது என்றும் அறிக்கையில் உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பத்மினி சிதம்பரநாதன் யுத்தத்தின் இறுதி நாட்கள் உண்மையாக இடம்பெற்று இருந்த சம்பவங்கள் குறித்து தூதரகத்துக்கு தெரிவித்து இருந்தார் என்றும் ஆனால் யுத்தக் குற்ற விசாரணை தற்போதைக்கு அவசியம் இல்லாத ஒன்று என்று கூறி இருந்தார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக