வியாழன், 2 டிசம்பர், 2010

Azim Premji:8846 கோடி மதிப்புள்ள பங்குகளை சமூக சேவைப் பணிகளுக்காக

பெங்களூரு: விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி தனது ரூ 8846 கோடி மதிப்புள்ள பங்குகளை சமூக சேவைப் பணிகளுக்காக அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கினார். இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்த பங்குகளின் அளவு 79.36 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக குறைந்துள்ளது. அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற பெயரில் 2001 முதல் இயங்கும் இந்த சமூக சேவை நிறுவனம், இந்தியாவின் அடிப்படைக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளது. இந்த அமைப்புக்கு ஏற்கெனவே பல கோடி ரூபாயை வழங்கியுள்ளார் பிரேம்ஜி. இப்போது தனக்கு சொந்தமான விப்ரோ பங்குகளில் 213 மில்லியன் (21.30 கோடி) பங்குகளை இந்த அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் அஜீம் பிரேம்ஜி. இதன் சந்தை மதிப்பு ரூ 8846 கோடி. அடுத்த ஆண்டு அஜீம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தை இந்த அறக்கட்டளை சார்பில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் அஜீம் பிரேம். எனவே இப்போதுஇந்த பங்கு மாற்றம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொது நிறுவனங்களில் குறைந்த பட்சம் 25 சதவீத பங்குகள், பிற வரையறுக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருக்க வேண்டும் என்ற சட்ட நிபந்தனையைப் பூர்த்தி செய்யவே இந்த பங்குமாற்றம் என்றும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், இந்த பங்கு மாற்றத்தை வர்த்தக நோக்கில் செய்யாமல், மக்களுக்கு அடிப்படைக் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளுக்கு அஜீம்பிரேம்ஜி செய்திருப்பது அவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு என்று வர்ணித்துள்ளது சர்வதேச மீடியா.

கருத்துகள் இல்லை: