வாஷிங்டன் : "விக்கிலீக்ஸ்' வெளியீடு குறித்து, இந்திய உயரதிகாரிகளுடன் பல முறை பேசியிருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தொடர்பான மூவாயிரம் ஆவணங்களில் உள்ள செய்திகளை இதுவரை, "விக்கிலீக்ஸ்' வெளியிடாதது புதிராகவே இருக்கிறது.
"விக்கிலீக்ஸ்' வெளியிட்டுள்ள இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ரகசிய ஆவணங்களில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தொடர்பான மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களில் உள்ள விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி கூறுகையில், "இது குறித்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் பலமுறை பேசியிருக்கிறோம்; இனியும் பேசுவோம்' என்று தெரிவித்துள்ளார்.எனினும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், "ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்காக ஜி-4 நாடுகளான பிரேசில், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் தாமே ஒரு கூட்டணி வைத்துக் கொண்டு முன்னேறத் துடிக்கின்றன' என்று விமர்சித்துள்ளது ஓர் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், பொருளாதாரம், நிதி இவற்றைத் தாண்டி, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சீனா மற்றும் இந்தியா இணைந்து செயல்பட ஒரு பெரிய தளத்தை உருவாக்கித் தர முயன்று வரும் அமெரிக்காவை, சீன வெளியுறவு அமைச்சர் ஹீ யாபெய் பாராட்டியுள்ளார்.எனினும், பிற ஆவணங்கள் மூலம் இந்தியா பற்றி உலக நாடுகளின் கருத்துக்கள் தெரியவந்துள்ளன.
பக்ரைன் நாட்டின் அரசர் ஹமாத் பின் இசா அல் கலீபா, ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றி அமெரிக்க உயரதிகாரிகளிடம் பேசி தெரிந்து கொண்டு, "இது ஒரு புதிய சகாப்தம்; இந்தியா பேருதவி செய்கிறது' என்று புகழ்ந்திருக்கிறார்.மற்றொரு ஆவணத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் முகமது பின் ஜாயத், எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பது என்ற அமெரிக்காவின் முடிவை ஆதரிக்கிறார். அதேநேரம், "இந்த விற்பனை, அந்தப் பிராந்தியத்தின் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படியே ஏற்பட்டாலும், தன் அண்டை நாடு மூலம் அபாயகரமான சூழல் உருவாவதை மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தடுத்து விடும்' என்று கூறுகிறார்.இன்னொரு ரகசிய ஆவணத்தில், இத்தாலிய வெளியுறவுக் கொள்கை நிபுணர் பியரோ பேசினோ, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளோடு இந்தியாவையும் சேர்த்துப் பேசுகிறார். "அணு ஆயுதப் பரவல் சட்டத்தை அமலாக்குவது என்பது, ஈரான் போன்ற பொறுப்பற்ற நாடுகள் இருக்கும் வரையில் கடினம் தான். அதேநேரம், இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை குறித்து பயப்படத் தேவையில்லை' என்கிறார் பியரோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக