வெள்ளி, 3 டிசம்பர், 2010

BJP:ஊழலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு... அசைவம் உண்டு

பெங்களூர்: அரசு நிலத்தை மோசடி செய்த கர்நாடக அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் கட்டா ஜெகதீஷ் உள்பட பலர் மீது லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் விரைவிலேயே கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இதனால் கட்டா பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கர்நாடக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிலங்களை ஒதுக்கீடு செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இந்த அரசு நிலங்களை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றி, அதற்கு நிவாரணத் தொகை பெற்றார் சுப்பிரமணிய நாயுடு.

மேலும், அரசு நிலம் மோசடி தொடர்பாக தனக்கு எதிராக சாட்சியம் அளிக்காமல் இருக்க, விவசாயி ஒருவருக்கு நாயுடுவின் மகன் கட்டா ஜெகதீஷ் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தபோது, அவரை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலரான ஜெகதீஷ் இப்போது சிறையில் உள்ளார்.

இந் நிலையில் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் ஜெகதீஷ் மற்றும் கர்நாடக தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து லோக் ஆயுக்தா போலீசார் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதனால் நாயுடு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால், நில மோசடி செய்த முதல்வர் எதியூரப்பாவே இன்னும் பதவியில் தொடர்ந்து வருவதால் நாயுடு பதவி விலகுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

பெங்களூரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு நிலங்களை எதியூரப்பாவின் குடும்பத்தினர் சுருட்டிய விவகாரம் வெளியான பின்னரும் அவரை பாஜக தலைமை பதவியிலிருந்து நீக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை சுட்டிக் காட்டி நாடாளுமன்றத்தை பாஜக முடக்கி வருகிறது. இந் நிலையில் நாயுடு விஷயத்திலும் அதே இரட்டை நிலையை பாஜக கடைபிடிக்கும் என்றே தெரிகிறது.

எதியூரப்பா ஊழல் வேற, இது வேற-அத்வானி:

இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் அத்வானி, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்பது சாதாரண விஷயமில்லை. பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடும் வரை ஓயமாட்டோம்.

ஊழல் விஷயத்தில் மத்திய அரசு கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது. ஊழல் மலிந்து விட்ட இந்த ஆட்சியை எதிர்த்து இனி நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் போராடுவோம். ஊழலுக்கு எதிராக பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களைத் திரட்டி அறப்போராட்டம் நடத்துவோம் என்றார்.

கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது உள்ள முறைகேடு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நாங்கள் அந்த விஷயத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதையும், மத்திய அரசின் ஊழல்களையும் ஒப்பிடக்கூடாது. தங்கள் கட்சியில் ஊழல் செய்தவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக சோனியா கூறியுள்ளார். பாஜகவில் பதவியில் இருந்து நீக்கும் அளவுக்கு ஊழல்வாதிகள் யாரும் இல்லை என்றார் அத்வானி.

பிரச்சனைகள் முடிந்துவிட்டன, நானே முதல்வர்-எதியூரப்பா:

இந் நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு எதியூரப்பா அளித்துள்ள பேட்டியில், இந்த மாதம் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தல் வரை தான் என் பதவி நிலைக்கும் என்பதில் உண்மையில்லை.

அனைத்து இந்திய தலைவர்களின் ஆசியுடன் நான் மீதமுள்ள இரண்டரை வருடம் காலமும் பதவியில் இருப்பேன். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நடந்த விஷயங்கள் அனைத்தையும் கட்சி மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன். மேலிடமும் சந்தோஷமாக இருக்கிறது. என் பதவி குறித்த அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டன என்றார்.

கருத்துகள் இல்லை: