சனி, 4 டிசம்பர், 2010

விஜய் படத்தை வாங்கமாட்டோம்! சிக்கல் மேல் சிக்கல்...


               'காவலன்' படம் தொடங்கியதிலிருந்தே விஜய்க்கு பிரச்சனை மேல் பிரச்சனை.... அசின் இலங்கை சென்றதால் அசின்னுக்கு எதிராய் கிளம்பியது தமிழ் அமைப்புகள். அசினோடு சேர்ந்து விஜய்யும் தமிழர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கொண்டார். தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் சென்னையில் 'காவலன்' படபிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அதன் பிறகு கேரளாவில் படபிடிப்பு நடந்தது.

  

காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தர் சரவணனுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை சரி செய்தனர்.

இப்போது மீண்டும் விட்ட இடத்திலேயே வந்து நிற்கிறது காவலன் பிரச்சனை. தொடர்ந்து ஐந்து படங்கள் தோல்வி அடைந்ததால் படத்தை நம்பி வாங்கிய திரையரங்க உரிமையார்களுக்கு நஷ்டத்தை சரி செய்யும் வகையில் தங்களுக்கு விஜய் ஒரு தொகையை தர வேண்டும் என்பதே திரையரங்க உரிமையார்களின் கோரிக்கையாக இருந்தது. 'சுறா' விஜய்யின் சொந்தப் படம் என்பதாலும் ஏற்கெனவே பாபா, ஹேராம் படங்களுக்கு ரஜினி, கமல் இப்படி செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் வாதம்.

இப்போது இந்தப் பிரச்சனை மீண்டும் எழுப்பப்படுகிறது. சமீபமாக இதுபற்றி கலந்து பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் விஜய் நஷ்ட ஈடு தரும் வரையில் காவலன் படத்தை தமிழ்நாட்டின் எந்த திரையரங்கிலும் வெளியிடக்கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.



'காவலன்' படத்தில் அசின் நடிப்பதால் உலகத் தமிழர்கள் இந்தப் படத்தை புறக்கணிப்போம் என்ற முடிவோடு இருக்கிறார்கள். இப்படி பல சிக்கல்கள் நீடித்து வருவதால் இந்த மாதம் காவலன் படத்தை வெளியிட முடியாது போல தெரிகிறது. நிலைமை இப்படி இருக்க... விரைவில் இசை வெளியீடு நடக்கவிருப்பதாகவும் விளம்பரம் வருகிறது. 

பிரச்சனை தீர விஜய் தரப்பில் பல பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதனால் படத்தை சன் டிவி தலையில் கட்டிவிடலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் ஆல்ரெடி வேட்டைக்காரன், சுறா என சன் டிவி வெளியிட்ட விஜய்யின் இரண்டு படங்களின் தோல்வியால், விஜய் மேல் செம கடுப்பில் இருக்கிறதாம் சன் டி.வி டீம். பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலினையோ, தயாநிதி அழகிரியையோ அணுகலாம் என்று யோசித்து வந்தார்கள் தயாரிப்பாளர்கள். விஜய், அம்மா கட்சியில் சேர இருக்கிறார் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், அதுவும் நடக்காது என்றே சொல்லப்படுகிறது.  

ஆனால் இதற்கு விஜய் போடும் கணக்கே வேற... சில முக்கிய நகரங்களில் படத்தின் திரையரங்கு உ‌ரிமையை நானே ஏற்றுக் கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமசுக்கு 'மன்மதன் அம்பு' படம் வர இருப்பதால் 'காவலன்' படத்தை இந்த மாதம் வெளியிடப் போவதில்லை என்றும் பொங்கலுக்கு பிறகே படத்தை வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கிறது காவலன் தரப்பு. 

அதற்குள் பிரச்சனையை சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையாம்! 

கருத்துகள் இல்லை: