வியாழன், 2 டிசம்பர், 2010

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதினை TNA பகீரங்க படுத்த வேண்டும்!



-அர்ச்சுணன்
*புலிகள் வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்க விடாது தடுத்து மஹிந்தாவை வெல்ல வைத்தார்கள், த.தே.கூட்டமைப்பினர் பொன்சேகாவிற்கு வாக்களிக்க வைத்து மீண்டும் மஹிந்தாவை அதிபராக்கினார்கள்!
*நாவற்குழியில் 67 சிங்கள குடுபங்களை அரசு குடியேற்றியமைக்கு நல்லெண்ணமாக த.தே.கூட்டமைப்பு அரசிற்கு எதிராக வாக்களிக்க போவதில்லை!
கருத்து சுதந்திரமும் விமர்சனத்தை தாங்கிகொள்ளும் மனப்பக்குவம் இல்லாத சமூகத்தில் பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக எழுதக்கூடாது என்பது என் கருத்து, அதுவும் தமிழர்கள் எளிதில் உணர்சிவசப்பட கூடியவர்கள், இவ்வாறு கூறியவர் காலம் சென்ற எழுத்தாளர் சுஜாதா ஆகும். எழுத்தாளர் சுஜாதா எந்த விடயத்தினையும் குறுக்கு வெட்டாக அலசிப்பார்க்கும் ஒரு எழுத்தாளர் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. துட்டுக்கும் மெட்டுக்கும் எழுதுபவர்கள் இதனை அனுசரித்தே போகவேண்டும்.

எனக்கு அப்படியாக அனுசரித்து போகவேண்டிய தேவையில்லை என்பதுடன், புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் அறியாமையினை அகற்ற வேண்டும் என்ற அக்கறை கொண்டவன் நான். பொய் சொல்லி புலவர் பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையும் அற்றவன்.
கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்ட பிரபாகரனின் பிறந்த தின விழா,அதற்கு அடுத்த நாள் கொண்டாடப்பட்ட மாவீரர் விழா,இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நிதி சேகரிப்பிற்கே முதன்மை கொடுக்கப்பட்டது. அனுஷ்டிக்கப்பட வேண்டிய, மதிக்கப்பட வேண்டிய மாவீரர்களின் தியாகங்களை பிழைப்பாக்கியதுடன்,அதனை விழாவாகவும் கொண்டாடினார்கள். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கனடாவில் ஆளுக்கு 5 டொலர் அறவிடப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளை அவதானித்த போது ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் மீது கோபமும் ,பரிதாபமும் கலந்த உணர்வே தோன்றியது. புத்தி கெட்ட அப்பாவித்தனமான மடத்தனமான புலம் பெயர்ந்த புலிகளே உங்களை பார்த்து அயல்நாட்டவனும், அயலவனும் எள்ளிநகை ஆடுகின்றான். பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று இன்னமுமா உங்களுடைய மக்கள் நம்புகின்றார்கள் என்று நளினம் செய்கின்றான். உங்களை வைத்து அனைத்து ஈழத் தமிழர்களும் இப்படியாகவே மக்கர்களாகவே இருப்பார்கள் என்று மட்டுக்கட்டுகின்றான்.
இது மட்டும் அல்ல பிராபகரனும் 12 ஆயிரம் போராளிகளும் உயிருடன் இருப்பதாக உங்களுக்கு கூறுபவனே, உங்களுக்கு பின்னால் நின்று உங்களை பார்த்து சிரித்து விட்டு போகின்றான். சரத்பொன்சேகாவினால் கோமாளிகள் என்ற கூறப்பட்ட சில தமிழக கட்சிதலைவர்கள்(சீமான், வை.கோ., நெடுமாறன், திருமாவளவன்) உங்களை கோமாளிகளாக பார்க்கின்றார்கள். எங்களுடைய பேச்சிற்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து தலைப்பு செய்திகளாக்குகின்றனர், இவர்களுக்குள் எங்கள் அளவிற்கு கூட புத்திசாலிகள் இல்லை போலும், இவர்கள் மத்தியில் தான் நாங்கள் தலைவராக இருக்க முடியும் என்று முடிவே செய்துவிட்டார்கள்.
போதும் உங்களின் கோமாளித்தனங்கள் இத்தோடு நிறுத்திவிடுங்கள். எஞ்சியிருக்கும் இனத்தினை எப்படி எனி காப்பாற்றுவது என்று எங்களோடு சேர்ந்து சிந்தியுங்கள்.உங்களின் கடந்த கால தலைவனின் கணிப்புக்கள்(calculations) அனைத்தும் தவறிப்போயின, களங்கள் அனைத்திலுமே பிணங்களே மிச்சமாகியின, 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் மாவீரர்களாயினர், மூன்று லட்சம் மக்கள் முகாங்களில் முடங்கினர், இறுதியில் முள்ளிவாய்காலில் உங்கள் தலைவனும் தஞ்சமானார். இத்தோடு உங்களின் மூடத்தனங்கள் அனைத்தையும் முடக்கி வையுங்கள்.
ஒரு போராளிக்கு செலுத்தும் அஞ்சலியை கூட உங்கள் தலைவனுக்கு செலுத்த முடியாமல் உள்ளதே, அவர் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு கூட்டம் உங்களுக்கு பொய் உரைப்பதினால் தமிழ் செல்வனுக்கு கிடைத்த சிலை மரியாதை கூட உங்கள் தலைவனுக்கு செலுத்த முடியாமல் ஒரு கூட்டம் உங்களை தடுக்கின்றதே. ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு புலி விசுவாசியின் பிறந்த தினத்திற்கு அவரின் நண்பர் ஒருவர் தொலைபேசியில் வாழ்த்து கூறியபோது, முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு பின்னர் நாங்கள் இவைகளை கொண்டாடுவதில்லை என்றாராம் . ஐம்பது வயது தலைக்குள் ஐந்து வயது மூளையுடன் இப்படியாக பலர் உலாவி வருகின்றனர். புத்தி கெட்ட கூட்டங்களே வன்னிக்குள் உக்கிரமாக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது கொழும்பில் இருக்கும் கரும்புலிகளுக்கு நிதி தேவை என்று பணம் சேகரித்தவன் முன்றாவது வீடு வாங்கியிருக்கின்றான். உங்கள் தலைவன் கொல்லப்பட்டதின் பின்னர் புலிகளின் சொத்துகளுக்கு பினாமியாக இருந்தவர்கள் சொந்தக்காரார்களாகியுள்ளனர். யுத்தகாலங்களில் வெளிநாடுகளில் புலிக்கு பணம் சேகரித்த சிலர், கொழும்பு சென்று மஹிந்தாவை சந்தித்து அங்கு முதலீடு செய்து விட்டு, இம்முறை மாவீரர் தினத்தில் மீண்டும் நிதி சேகரிக்கின்றார்.
நீங்கள் முள்ளிவாய்காலோடு உங்கள் குடும்ப கொண்டாட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டதாக கூறுகின்றீர்கள். தயது செய்து உங்கள் பிள்ளைகளையாவது புத்திஜீவிகளாக்க முயற்சி செய்யுங்கள்.
புலிகளின் தலைவரும், தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள், யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி அறிவித்து இருந்தது.இலங்கை அரசு கூறுவதினை நீங்கள் பொய்யென்று வாதிடலாம், ஆனால் அது பொய்யெனில் அயல் நாடும், ஐ. நாவும் நம்புமா? சர்வதேச சமூகம் பொய்யை ஏற்றுக்கொள்ளுமா? தகவல் தொழில்நுட்பம் (information technology) தாண்டவம் ஆடும் ஆண்டுகளில் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். தனியே எச்சங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சுமார் 248 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு உயிரினத்தின் (Dinosaur, which are the largest known land animals)சரித்திரத்தினை கண்டு பிடித்து கூறும் காலங்களில் நீங்கள் வாழுகின்றீர்கள். அந்த உயிரினத்தின் நீளம், அகலம், அதன் குணாதியங்கள், எப்போழுது அது அழிந்து போனது என்பதினை எல்லாம் கண்சிமிட்டும் நேரத்தில் கணணியில் காணக்கூடியதாக காலம் இருக்கையில், கடந்த ஆண்டு கொல்லப்பட்டவர், இல்லை சாகவில்லை என்று அடம் பிடிக்கின்றீர்களே? உங்கள் அறிவீனங்களை கழைந்து அடுத்த சந்ததியினரை ஆவது அறிவுபடுத்துங்கள்.
பெற்றோர்களே குழந்தைகளின் ஆதர்ஷம் (role models) என்பார்கள். மாதா, பிதா அதற்கு பின்னர்தான் குருவிடம்(ஆசிரியரியரிடம்) குழந்தைகள் செல்கின்றார்கள். நீங்கள் உண்மைகளை உணர்வதற்கு மறுதலிப்பதோடு, அதனை பிள்ளைகளுக்கும் புகட்டுகின்றீர்கள். நாளை அந்த குழந்தை வளர்ந்து, நமது நாட்டின் சரித்திரத்தினை படித்துவிட்டு, அப்பா உங்கள் நாட்டில் நடந்த சம்பவங்கள் உங்களுக்கே எப்படி தெரியாமல் போனது, என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்? புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களில் எத்தனை விதமான ஏமாளிகள் இருக்கின்றீர்கள். ஒரு பகுதி தலைவர் சாகவில்லை என்கின்றீர்கள்? ஒரு பகுதியினர், இல்லை தலைவர் போரிட்டுத்தான் மடிந்தார் என்கின்றீர்கள்? இன்னொரு பகுதியினர் தலைவரின் படத்தினை சாமி அறைக்குள் வைத்து விட்டோம் என்கின்றீர்கள்? யாரை காட்டிலும் யார் மக்கு மடையன் என்பதில் உங்களுக்குள்ளேயே கடும் போட்டி போடுகின்றீர்கள். நீங்கள் ஏமாளிகளாக இருப்பதோடு மட்டும் அல்லாது, ஏனையோரையும் உங்களை போன்றே இருப்பார்களென்று நினைத்தோ என்னவோ, ஏனையோரையும் எமாற்ற முனைகின்றீர்கள்.
மாண்டவர் மீண்டதாக வரலாறு இல்லை என்பதினை ஏற்றுக் கொண்டு, உங்கள் இனத்திற்கு இயன்றளவு உதவியை செய்யுங்கள். அதுவும் முடியாமல் போனால்! தலைவர் இருக்கின்றார், ஈழத்தினை கொண்டு வருவார் என்று உபத்திரம் செய்யாதீர்கள். நீங்கள் இப்படியாக கோமாளித்தனம் புரிவதன் மூலம் அடுத்த சந்ததியில் இருந்து புதிய தலமை தளைப்பதற்கு தடையாக இருக்கின்றீர்கள் என்பதினை புரிந்து கொள்ளுங்கள்.
மாவீரர் நாள்?
அண்மையில் பொன்னார் மேனியன் என்பவர் “இனித்தான் புதியதோர் விதிசெய்ய வேண்டும்” என்ற நூல் ஒன்றை புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களுக்காக வெளியிட்டு இருந்தார். அதில் மாவீரர் தினத்தினை சிவகுமாரன் இறந்த தினமான ஜூன் மாதம் 5 ஆம் திகதியே கொண்டாடப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.ஈழ தமிழ் மக்களின் விடிவிற்காக முதன் முதலாக ஆயுதம் ஏந்தி போராடி வீரச்சாவை தழுவிக்கொண்டவன் சிவகுமாரன்.இவர் யாழ் உரும்பிராய் என்ற கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர். 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி வீரமரணம் அடைந்திருந்தார்.
சிவகுமாரனுக்கு 8 ஆண்டுகளுக்கு பின்னர் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சங்கர் வீரமரணம் அடைந்திருந்தார். அப்படியாயின் பொன்னார் மேனியன் எழுதியது போன்று சிவகுமாரன் கொல்லப்பட்ட தினத்தை அல்லவா மாவீரர் தினமாக அறிவித்திருக்கவேண்டும். சிவகுமாரன் முதல் மாவீரன் மட்டும் அல்ல முதல் தற்கொலை போராளியும் அவரே என்பதினை அறிந்து கொள்ளுங்கள்.
த.தே.கூட்டமைப்பு முதலில் தமிழ் இனத்திற்கு செய்வேண்டியது?
நீங்கள் தமிழ் இனத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் முதலில் செய்யவேண்டியது, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதினை ஈழத் தமிழர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். பிரபாகரனின் பெயரை சொல்லிகொண்டு வசதிகளை தேடும் நபர்கள், கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளின் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் நிதி திரட்டி வருகின்றார்கள். இதனை காட்டிலும் பாதமாக இல்லாத ஒருவர் இருப்பதாக கூறிகொண்டு, இருக்கின்ற மக்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு குந்தகம் விளைவித்து வருகின்றார்கள்.
பிரபாகரன் வந்து தமிழ் ஈழம் எடுத்துதருவார் என்று ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கின்ற வரையில் நீங்கள் மேற்கொள்ளுகின்ற எந்த முயற்சிகளும் பயன் தரபோவதில்லை. அத்துடன் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியினை நீங்கள் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்காத வரையில் புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தினை நீங்கள் ஊக்குவிப்பதாகவே அர்த்தமாகும்.புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டும் அல்ல, வட கிழக்கிலும் இன்னமும் சிறு பகுதியினர் பிரபாகரன் உயிர் உடன் இருப்பதாகவே நம்புகின்றனர். நீங்கள் பிரபாகரன் கொல்லப்பட்டதினை உறுதி செய்யாத பட்சத்தில் ஏமாற்றி சேர்க்கப்படும் பணத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு கிடைப்பதாகவே எடுத்து கொள்வோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நல்லெண்ணம்!
தமிழ் மக்களின் நல்லெண்ணத்தினை காட்டும் முகமாக வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது தாம் எதிர்த்து வாக்களிப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளதாக த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் 29ஆம் திகதி தமிழ் ஒசைக்கு தெரிவித்து இருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த முடிவினை கூட்டமைப்பின் மற்றொரு நடாளுமன்ற உறுப்பினரும்,தமிழரசு கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா அவர்கள் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற்கு முன்னராக சுரேஷ் ஏன் அவசரப்பட்டு 29 ஆம் திகதி தமிழ் ஓசைக்கு தெரிவித்தார் என்பது குறித்து கூட்டமைப்பிற்குள் குழப்பம் ஏற்பட்டதாக அறிந்தோம்.
த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தர் அவர்கள் தமிழகத்திற்கு சென்று விசேஷ வைத்தியரை பார்த்த பொழுது அறுவை சிகிச்சை (bypass surgery) மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் கூறியிருந்தார், மிக விரைவில் இவர் வைத்திய சிகிச்சைக்காக டெல்கி செல்லவுள்ளார். முன்னரைபோல் அவரின் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை. இந்நிலையில் அவரிற்கு அடுத்த படியாக த.தே.கூட்டமைப்பின் தலமை பொறுப்பினை யார் பெறுவது என்பதில் போட்டி, பொறாமைகள் ஏற்பட ஆரம்பித்து இருக்கின்றன. “தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்” என்று பிரேமம் ஆனவர் அதிக ஆவலுடன் காத்திருப்பதாக கட்சிக்குள் சிலர் முணுமுணுத்து கொள்ளுகின்றனர்.
மேலும் வட மாகாணத்திற்கான த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் (candidate) யார் என்பதிலும் போட்டி இருந்து வருவதாக அறிந்தோம். முதலீட்டு நிறுவன மோசடி(Supra finance company) புகழ் வித்தியாதரனுக்கும் சுரேஷிக்கும் இடையில் போட்டி இருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, குதிரை புரத்து நெடியவரே கட்சிக்குள் பலரின் மரியாதைக்கு உரியவராக இருப்பதோடு, பெரியளவில் நிதி மோசடியிலும் சிக்காமல் இருப்பவர் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் நல்லெண்ணத்தினை அரசிற்கு காட்டும் முகமாகவே அரசிற்கு எதிராக வாக்களிப்பது இல்லை என்ற முடிவினை தாம் மேற்கொண்டதாக சுரேஷ் தெரிவித்த அதேவேளை, அரசிற்கு தமது நல்லெண்ணத்தை காண்பிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பது இல்லை என்ற முடிவினை எடுத்தாக மாவை நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ் செல்வன் மக்களின் அபிலாசை என்று கூறிக்கொண்டு பிரபாகரனின் அபிலாசையினை அழுத்தி கூறியது போன்று சுரேஷ் அரசியல் பேசுகின்றார். ஆனால் மாவையின் பேச்சில் இருக்கும் ஓரளவு நேர்மை தனத்தை வரவேற்கலாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கவேண்டியுள்ளது.
அது என்னவெனில் அரசின் தூண்டுதலில் நாவற்குழியில் வலுக்கட்டாயமாக சென்று குடியேறி இருக்கும் 67 சிங்கள குடுபங்கள் குறித்து தமிழ் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோது, கொழும்பு நகரை தமிழர்களும், முஸ்லீம்களும் ஆக்கிரமித்து இருக்கின்றபோது ஏன் சிங்கள மக்கள் அங்கு சென்று குடியேறக் கூடாது என்று ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தாராமே.
இதற்கு நல்லெண்ணம் தெரிவிக்கும் முகமாகவா, நீங்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதினை தவிர்த்து உள்ளீர்கள்? வட கிழக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரை எதுவித காரணம் கொண்டும் வெளியேற்ற முடியாது என்று ஜனாதிபதி உறுதியாக தெரிவித்து இருக்கின்றார். இதற்கான நல்லெண்ணமாகவா நீங்கள் அரசிற்கு எதிராக வாக்களிப்பது இல்லை என்று முடிவினை எடுத்தீர்கள்? அல்லது வடக்கே நிலை கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இராணுவத்தினரின் குடுபங்களை வடக்கில் குடியேற்றுவதற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதினால்! அந்த வரவு செலவு திட்டத்தினை வரவேற்று உங்கள் நல்லெண்ணத்தினை காட்டுவதற்காகவா, நீங்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது இல்லை என்ற முடிவை எடுத்தீர்கள்?
இன்னொரு செய்தியும் எமது காதிற்கு வந்தடைந்தது, அயல் நாடு ஒன்று அரசுடன் ஒத்துபோகுமாறு உங்களுக்கு அறிவுறுத்தியதாமே? அப்படியென்றால் இதனைத்தானே சித்தார்த்தனும், தேவானந்தாவும், சிறீதரனும் செய்தபோது அவர்களை துரோகிகள் என்றும் ஒட்டுக்குழுக்கள் என்றும் நீங்கள் வர்ணித்து இருந்தீர்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசுடன் இணைந்து இயங்கும் குழுக்கள் துரோகிகள் என்றும்,அவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தீர்கள்? அந்த துரோகத்தனத்தை நீங்களும் இப்பொழுது செய்துள்ளீர்களே! பாவம் வட கிழக்கு மக்கள் மண்டையை பிச்சிக்க போகின்றார்கள்.
archunan2009@live.com

கருத்துகள் இல்லை: