சென்னை : "கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை' என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஜெயலலிதா துவங்கி அ.தி.மு.க., தொண்டர்கள் வரையிலும், சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், நான் ஏதோ சல்லிக்காசு கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும், என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்களையும் வாங்கிக் குவித்திருப்தைப் போலவும் பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள். நான் சிறு பருவத்திலே இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது. கடந்த 1949ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளர் பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.க., துவக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது, விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன்.
என், "மந்திரிகுமாரி' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் துவங்கியது. அப்போது சேலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன் என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என கேட்டார்; ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன். அதுபோலவே, "இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக வசனம் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடியதால், தயாரிப்பளர் எல்.வி.பிரசாத் என் வீட்டிற்கு வந்து முதலில் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார். நான் அந்தக் தொகையைக் கொண்டு திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய்சேய் நல விடுதி கட்டி, அதை அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை அழைத்துச் சென்று திறந்து வைத்தேன்.
அந்தக் காலகட்டத்தில் சென்னை தி.நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள், கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே 5,000 ரூபாய் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு, எனக்கு ஒரு கார் வாங்கித் தந்தார். அந்த காரில் என்னை உட்கார வைத்து கலைவாணரே ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். எல்லா முதல்வர்களின் வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலே தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை, வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடு கூட நான் அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான்.
நான் இத்தனை பொறுப்புகளையும் என் 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக் கொண்டதும் இல்லை.
இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வைப்பு நிதியாக ஐந்து கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும், சேமிப்பு கணக்கில் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது. நான் வசிக்கிற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுத்துள்ளேன். இந்த வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் விஷயத்தில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி.
நான் முதல் முறையாக முதல்வராக இருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வக்கீல் தவறு செய்த போது அவர் மீது நடவடிக்கை எடுத்தேன். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கவும், என் மீது இன்னும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுடையோர் காண்பதற்காக. முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக