தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது, கணிசமான இடங்களைப் பெறுவது, காங்கிரஸ் ஆதரவின்றி எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவது என்பதுதான் ராகுல் காந்தியின் ஜீபூம்பா திட்டம். அந்தத் திட்டம் பீகாரிலும் தவிடுபொடியாகியிருக்கிறது.
என்றைக்கு சோனியா அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவியாகப் பொறுப்பேற் றாரோ அப்போதும் தனித்துப் போட்டி என்றுதான் முடிவெடுத்தனர். மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஜாம் ஜாமென்று பி.ஜே.பி. ஆட்சி பீடம் ஏறியது. இன்றைக்கும் எட்டு மாநிலங்களில் அந்தக் கட்சி ஆட்பிபீடத்தில் அமர்ந்து இருக்கிறது. அசைக்க முடியவில்லை. அடித்தளம் அமைத்துத் தந்ததே காங்கிரஸ்தான்.
பி.ஜே.பி. பெருந்தலைவர்களின் அதிகாரப் போட்டி காரணமாக ராஜஸ்தானில் மட்டும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது.
தனித்துப் போட்டியிட்டால் வகுப்புவாத சக்திகள்தான் வளரும் என்பதனை அறிந்து காங்கிரஸ் பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டது. மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி காண்பது என்று முடிவு செய்தது. 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி பீடம் ஏறியது.
தமிழகத்தில் தி.மு.கழகமும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும், பாஸ்வானின் லோக்தள்ளும் தோழ மைக் கட்சிகளாக அமைந்தன. இடது சாரிக் கட்சிகளும் இணைந்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிர தேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அந்தக் கட்சியே எதிர்பாராத அளவில் வெற்றிபெற்றது. இதற்கு சோனியாவின் சூத்திரமும் ராகுல்காந்தியின் மாயா ஜாலமும்தான் காரணம் என்றனர். உண்மையில் ராகுல் காந்தியின் உழைப்பை, பழகும் பண்பை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆனால் உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றி குருட்டுப்பூனை வெற்றிகரமாக விட்டத்திற்கு தாவிய கதைதான்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங். அவர் அப்போது பி.ஜே.பி. தலைவர். அதனால் இஸ்லாமிய மக்கள் அவர்மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முலாயம்சிங் கட்சிக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் அதே கல்யாண்சிங்கை முலாயம்சிங் தமது கட்சியில் சேர்த்தார். இஸ்லாமிய மக்கள் அவரைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டனர்.
தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே டெல்லி இமாம்களையும் இதர இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சி உத்திரப்பிர தேசத்திற்கு அழைத்து வந்தது.
இன்னொரு பக்கம் பிராமணர்களையும் சேர்த்து மாயாவதி ஜாதிக் கூட்டணி அமைத்ததை இஸ்லாமிய மக்கள் விரும்பவில்லை
உத்திரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இருபது சதவிகித பேர் இருக்கின்றனர். அவர்கள்தான் பி.ஜே.பி.யின் முன்னணிப் படையாக இருந்தனர். மூன்று முறை மையத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது. மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்ட முடியவில்லை. மேலும் ஆட்சியில் பிராமணர் அல்லாத கல்யாண்சிங் போன்றவர்களுக்கு கிரீடம் சூட்டியதையும் விரும்பவில்லை. எனவே அந்தச் சமுதாயத் தினரும் அதிருப்தியில் இருந்தனர்.
எனவே இஸ்லாமியர்களும் பிராமணர் களும் எதிர்மறை ஓட்டு என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். மார்கழி மாத மழை மாதிரி காங்கிரஸ் 24 தொகுதி களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றி நிரந்தரமானதல்ல. காட்டாற்று வெள்ளம் என்பதனை அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தல்கள் மெய்ப்பித்தன. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அடுத்து ஜார்கண்ட் மாநில சட்ட மன்றத் தேர்தல் வந்தது. இங்கேயும் தனித்துப் போட்டி என்ற ராகுலின் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரே ஒரு சிறிய ஆதிவாசி அமைப்பை மட் டும் சேர்த்துக்கொண்டனர்.
இந்த மாநிலத்தில் லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சிக்கு ஓரளவு செல் வாக்கு உண்டு. கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் அந்தக் கட்சிக்கு ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர். காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு காணவே லாலு விரும்பினார். ஆனால் அவர் நீட்டிய நேசக் கரத்தை தொட காங்கிரஸ் மறுத்தது. விளைவு என்ன? இப்போது மலைவாழ் மக்கள் அமைப்புகளுடன் பி.ஜே.பி. ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறது.
ராகுல்காந்தி தனது அற்புத விளக்கை தேய்த்துத் தேய்த்துப் பார்த்தார். பூதம் வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் அதுவே வாக்குப்பெட்டிகளை நிரப்பியிருக்கும்.
தனித்துப் போட்டி என்ற ராகுல் தத்துவத்தின் அந்தப்புரம் வரை சென்று ஆராய்ந்தாலும் தோல்விதான் தென்படுகிறது. அங்கேயும் ராகுலின் கலர் கனவுகள் நனவாகவில்லை.
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளம் வடிந்த நதி. பள்ளங் களில் மட்டும் வெள்ளம். படகு சவாரி செய்ய முடியாது.
மாநிலக் கட்சிகளின் செல்வாக்கைக் குறைப்பது, பின்னர் மாய்ப்பது ராகுல்காந்தியின் இன்னொரு திட்டம். அந்தத் திட்டமும் ஜார்கண்ட்டில் தோல்வி கண்டது. சிபுசோரன் கட்சி உட்பட பல மாநிலக் கட்சிகள் உயிர் பெற்றுவிட்டன. அங்கே கோடு போட்ட ராகுல் காந்திக்கு ரோடு போடத் தெரியவில்லை.
ஜார்கண்ட் தந்த தீர்ப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியும் ராகுல்காந்தியும் பாடம் படித்துக் கொள்ளவில்லை. பீகார் தேர்தலிலும் அதே தவறை அமர்க்களமாகச் செய்தனர்.
அங்கேயும் லாலுவோடும், ராம்விலாஸ் பாஸ்வானோடும் கூட்டணி இல்லை என்று முடிவு செய்தனர். களத்தில் இறங்குவதற்கு முன்னர் எதிர் முகாமின் பலத்தை கணிக்க வேண்டும். அதுதான் அரசியலில் ஆரம்பப் பாடம்.
பீகாரில் ஐக்கிய ஜனதாதள - பி.ஜே.பி. கூட்டணி வலிமை யானது. அந்த மாநிலத்தில் பிராமணர் கள் பதினெட்டு சதவிகிதம் பேர். எனவே பி.ஜே.பி.யை விரும்பவில்லை யென்றாலும் அந்தக் கட்சியுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்டாயக் கல்யாணம் செய்துகொள்கிறது. நிதிஷ்குமார் சார்ந்த குர்மி இன மக்கள் பதினெட்டு சதவிகிதம் பேர்.
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் தங்கள் சமுதாயத்தில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். எனவே ஐக்கிய ஜனதாதள கூட்டணியின் வாக்கு வங்கி 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக அமைகிறது என்று தேர்தலுக்கு முன்னரே தீர்ப்புச் சொன் னார்கள். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் பாஸ்வானின் லோக் தளத்திற்கும் அதிகபட்சம் 27 சதவிகித வாக்குகள் என்று அறிவித்தார்கள். அது அன்றைய நிலை.
இம்முறை பீகாரில் எல்லா இடதுசாரி கட்சி களும், கானகம் விட்டு ஊரகம் வந்த சில நக்சல் பாரிக் குழுக்களும் இணைந்து ஓர் அணி அமைந் தன. அதன் வாக்குவங்கியே அதிகபட்சம் 19 சதவிகிதம் என்றனர். அதுவும் அன்றைய கணக்கே.ஆனால் தனிமையில் தள்ளாடும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அதிகபட்சம் 12 சதவிகிதமே என்று ஏடுகள் சுட்டிக் காட்டின. ஆனால் பள்ளத் தாக்கின் பாதாளத்தில் நின்று கொண்டு வானத்தை அளப்பேன் என்றனர். கூட்டணியில்லாது காங்கிரஸ் செய்த தனி ஆவர்த்தனம் கைகொடுக்கவில்லை.
இங்கேயும் இஸ்லாமிய மக்களின் வாக்கு வங்கியை (17 சதவிகிதம்) காங்கிரஸ் நம்பியது. மாநிலத் தலைவராக ஓர் இஸ்லாமியர் பொறுப் பேற்றார். இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களெல் லாம் காங்கிரஸ் கட்சி யைக் கரை சேர்க்க பாட்னாவிற்கே படையெடுத்தனர்.
ஆனால் மாநில இஸ்லாமிய உல மாக்களின் சிந்தனை வேறு விதமாக இருந் தது. மாவட்டம்தோ றும் அவர்கள் கூட் டம் போட்டனர். பாபர் மசூதியை இடித்தவர்களை நாம் மறந்து விடக் கூடாது. நேரு பிரதமராக இருந் தார். அப்போதுதான் மசூதிக்குள் ராமர் பொம்மையை வைத்தனர். அதனைத் தொடர்ந்து மசூதி பூட்டப்பட்டது. ராஜீவ்காந்தி பிரதமரானார், பாபர் மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டன. ராமர் பொம்மைக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் நரசிம்மராவ் பிரதமரானார். பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்ற முறையில் உள்ளூர் மார்க்கத் தலைவர்களின் பிரச்சாரம் அமைந்தது. விளங்கச் சொன்னால் காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஜே.பி.க்கும் வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.
ஒரு பக்கம் சோனியாவின் சூறாவளிப் பிரச்சாரம். இன்னொரு பக்கம் ராகுல்காந்தியின் புயல் வேகப் பிரச்சாரம். மற்றொரு பக்கம் பிரதமர் மன்மோகன் சிங்கின் முற்றுகை. கொட்டப்பட்ட கோடிகளுக்கு அளவேயில்லை.
பிரதான எதிரியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சந்திப்பதை விட இங்கேயும் லாலு, பாஸ்வானின் கூட்டணியைத் தோற்கடிப்பதிலேயே காங்கிரஸ் கவனம் செலுத்தியது. இன்னும் சொல்லப் போனால் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக சிவப்புக் கம்பளம் விரித்துத் தந்தது.
எப்படியோ தனித்துப் போட்டி என்ற ராகுல் காந்தியின் கோட்பாடு பீகாரிலும் ஐக்கிய ஜனதா தள- பி.ஜே.பி.யை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியைத் துடைத்தெறிந்து விட்டது.
அங்கே ஐம்பது இடங்களில் வெற்றிபெற்றால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்திற் கும் திரிணாமுல் காங்கிரசிற்கும் கடிவாளம் போடுவது என்பது ராகுல்காந்தியின் கனவுத் திட்டம். அவ ரைக் கிங்-மேக்கராகக் காட்டுவது காங்கிரஸ் கட்சியின் கனவுத் திட் டம். எல்லாம் பழங்கதை யாய் போய்விட்டது.
இப்போது வகுத் துக் கொண்ட இதே பாதையில் காங்கிரஸ் பயணிக்குமானால் மையத்திலும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக