யாழில் பெருகும் ‘பெட்டிச’க் கலாச்சாரம் !
யாழ் முன்னாள் நீதிபதிகள் இருவர் பொலீஸ் விசாரணையில் !
- நமது யாழ் நிருபர்
தற்போதும் யாழ் நீதிமன்றில் சட்டத்தரணிகளாக தொழில் புரியும் முன்னாள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் மற்றும் முன்னாள் யாழ் மாவட்ட நீதிபதி ஒருவரும் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த விசேட பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் யாழ் மேல் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவருக்கு எதிராக மொட்டைப் பெட்டிசம் போட்டு அபகீர்த்தி ஏற்படுத்திவருகின்றனர் என்ற முறைப்பாட்டின்மேலேயே இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த விசேட குற்றத்தடுப்பு பொலிசாரினால் பல மணி நேரம் இவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டதாகவும், இவர்களது விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் பெட்டிசம் தயாரிக்கப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கணணி உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக விசாரணையாளர்கள் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களது விசாரணைகளுடன் யாழ் உயர் நீதிமன்ற பெண் பதிவாளர் உட்பட ஜந்து நீதிமன்ற ஊழியர்கள் கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்ற நீதிவானிற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடொன்றை தொடர்ந்தும் நீதிமனற ஊழியர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாண பெட்டிசக் கலாச்சாரம் பரவலாகத் தெரிந்ததே. யாழ்ப்பாண உதவி மேயர் திரு துரைராசா இளங்கோ அவர்களுக்கு எதிராக, அவர் முன்னாள் சாவகச்சேரி நீதவான் திரு பிரபாகரன் அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு அண்மையில் துப்பாக்கியுடன் நடமாடித் திரிந்தார் என கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டிருந்த ‘மொட்டைப் பெட்டிசம்’ ஒன்றின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, சில காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போதும் விசாரணை செய்யப்பட்டு வருவது தெரிந்ததே.
தற்போதைய நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான விசாரணைகள்பற்றி கருத்துத் தெரிவித்த யாழ் சட்டத்தரணி ஒருவர், திரு துரைராசா இளங்கோ அவர்கள் யாழ் மாநகரின் உதவி மேயராக இருந்தாலும்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே அவர் ‘மொட்டைப் பெட்டிசம்’ ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் எனவும், தற்போது மொட்டைப் பெட்டிசத்தின் பேரில் விரசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் உயர்சாதியினர் என்பதால் கைது செய்யப்படவோ தடுப்புக் காவலில் வைக்கப்படவோ சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் யாழ் பத்திரிகைகள் எவற்றிலும் பிரசுரமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக