ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் அரசுக்கும் எமது நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காக வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாம் எதிர்த்து வாக்களிப்பதில்லையென முடிவெடுத்துள்ளோம். எமது இந்த நல்லெண்ண நடவடிக்கையை ஜனாதிபதி சரியாகப் பற்றிக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த மாவை சேனாதிராஜா மேலும் கூறியதாவது;இலங்கை அரசுகளின் வரவுசெலவுத் திட்டங்களை நாம் எதிர்த்து வாக்களித்து வருவதே வரலாறு. ஆனால் நாம் இம்முறை புதியதொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளோம். இன்று (நேற்று) நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதில்லை என்பதே எமது தீர்மானம்.
எமது இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் அரசுக்கும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகவே நாம் எடுத்துள்ளோம். இதனை ஜனாதிபதி சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவேண்டும். அவர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். குறைக்கப்படவேண்டுமென அவரிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த அறிவிப்பை எமது தலைவர் இரா.சம்பந்தன் தான் சபையில் அறிவிப்பதாகவிருந்தார். ஆனால், அவர் உடற்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரின் சார்பாக எமது கட்சியின் தீர்மானத்தை நான் இச்சபையில் வெளியிடுகின்றேன்.எமது இந்த முடிவு தமிழ் மக்களிடமும் ஏனையோரிடமும் விமர்சனங்களை ஏற்படுத்தலாம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாம் எமது மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
இஸ்ரேலியர்கள் பலஸ்தீனியர்களின் இடங்களை ஆக்கிரமித்தது போல் மக்களைக் கொன்று குவிப்பது போல் தமிழர்களின் மண்ணிலும் நடக்கின்றது. ஜனாதிபதியுடன் நாம் பலமுறை சந்திப்புகளை நடத்தியுள்ளோம். தீர்வு எப்போது கிடைக்குமென எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதற்குள் எமது இனம் தமது அடையாளத்தை இழந்துவிடுமென அஞ்சுகின்றோம்.ஒரு தேசிய சிறுபான்மை இனத்துக்குத் தான் அழிக்கப்பட்டு விடுவோமா என்ற அச்சம் இருக்கும். ஆனால், பெரும்பான்மை இனத்துக்கு அந்த அச்சம் இல்லை. தான் அழிக்கப்பட்டு விடுவேனோ என்று சிறுபான்மை இனம் அச்சப்படும் நிலையில் தான் பெரும்பான்மையினம் தனது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். ஆனால், சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறினால் என்னவென ஜனாதிபதி கேட்கிறார். கொழும்பின் சேரிப்புறங்களிலுள்ள சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றும் திட்டம் உள்ளதாக கேள்விப்படுகின்றோம்.
ஆட்சி, அதிகாரம், இராணுவம், படைப்பலம் எல்லாம் உங்களிடம் இருக்கும் போது ஏன் நீங்கள் சிறுபான்மையினத்துக்கு அச்சப்படுகின்றீர்கள்? இந்திய அரசின் பேச்சுகாலத்தில் வடக்கில் 13 இராணுவ முகாம்களே இருந்தன. இன்று வீட்டுக்கு வீடு இராணுவப் பிரசன்னம்உள்ளது.ஜனாதிபதி சர்வபலம் பொருந்தியவராகவுள்ளார். எம்மைத் தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளனர். நாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம். தொடர்ந்தும் பேசுவதற்கும் இணைந்து செயற்படுவதற்கும் உடன்பட்டுள்ளோம். ஆனால், இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. அது வரவேண்டுமென விரும்புகின்றோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை விட எமது நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே இன்றுள்ள முக்கிய பிரச்சினையாகும். வடக்கு இராணுவ ஆளுகைக்குள் உள்ளது. அரச ஊழியர்கள் இராணுவ சட்டங்களால் அவதிப்படுகின்றனர். வேலையில்லாதோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். விதவைப் பெண்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டுகிறது. எதிர்காலம் குறித்து நம்பிக்கையில்லாது ஒரு சமூகம் உள்ளது. வரலாற்றுக்குரிய தமிழ்த் தேசிய இனம் வாழ வேண்டும்.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 இலட்சம் படையினர் உள்ள நிலையில் அதிக பணத்தை ஒதுக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. வரி செலுத்த வேண்டாமென்ற இயக்கத்தை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், அந்நிலை வரலாம். அரசு ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும்.
பசில் வரவேற்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பை மேசையில் தட்டி வரவேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காது விலகி நிற்பதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமையை நான் வரவேற்கிறேன், மகிழ்ச்சி தெரிவிக்கிறேன். அவர்கள் மீள்குடியேற்ற எம்முடன் இøணந்து செயற்பட்டு வருகின்றனர். இது ஒரு நல்ல முடிவு என்றார். இதையடுத்து அரச தரப்பினர் மேசைகளில் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக