![]() |
Mhm Ibrahim : வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளினால் திட்டமிட்டே வெளியேற்றப்பட்டனர்!
களத்தில் நின்றவரின் நேரடி சாட்சியம்! தொடர் (1)
“யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னரும் வெளியேற்றப்படும் போதும் தமிழ் - முஸ்லிம் உறவினில் எவ்வித வீழ்ச்சியும் இருக்கவில்லை.
மிக நெருக்கமாகத்தான் உறவு இருந்தது.
90 காலகட்டமானது போராட்டக் காலமாகும்.
அரசாங்கத்திற்கும் - புலிகள் இயக்கப் போராளிகளுக்குமிடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 80ஆம் ஆண்டுகளில் இருந்து யாழ்ப்பாணத்தில் பலதரப்பட்ட இயக்கங்கள் செயற்பட்டு வந்தன.
இறுதியாகப் புலிகள் இயக்கம் டெலோ இயக்கத்தைத் தாக்கி அழித்து அரசாங்கத்துடன் பலமாக மோதும் நிலைக்கு வந்தது.
அக் காலகட்டத்தில் இயக்கப் போராட்டத்திற்கு எதிரானவர்கள், இராணுவத்துடன் இணைந்து செயற்படுபவர்கள், தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் எனத் தமிழ் மக்களில் கனபேர் புலிகளால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அப்படியான ஒரு காலகட்டத்திலும் எந்தவொரு யாழ். முஸ்லிமும் புலிகளினாலோ அல்லது ஏனைய தமிழ் இயக்கங்களினாலோ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தமைக்காக மரண தண்டனைக்கு உள்ளாகவில்லை. இது முஸ்லிம்கள், தமிழர்களின் போராட்டத்திற்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதவர்களாகவும் தமிழ் மக்களுடன் நல்லுறவுடன் வாழ்ந்து வந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதையே தெளிவுபடுத்துகின்றது.
இக் காலகட்டத்தில் வட மாகாணத்தின் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டிருந்தன.
கொம்படி எனும் பிரதேசத்தினூடாகவே வர்த்தகங்கள் நடந்து கொண்டிருந்தன.
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் கண்டாவளை எனும் இடத்தில் எமது லொறிகள் நிறுத்தப்படும்.
அங்கிருந்து மீண்டும் வேறொரு டிரக்டரில்தான் பொருட்களை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறான ஒரு கஷ்டமான நிலை இருந்தும் நாங்கள் பதுக்கல் விலைகளில் பொருட்களை விற்கவில்லை. யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகக் கொழும்பு விலைக்கே பொருட்களை விற்பனை செய்து வந்தோம்.
இவ்வாறான யுத்த நெருக்கடி இருந்த காலப்பகுதியிலேயே 1990, செப்டம்பர், 28ஆம் திகதி என்னைப் புலிகள் பிடித்துச் சென்றனர்.
பின்னர் 29, 30, 31களில் இன்னும் பல யாழ். முஸ்லிம் முக்கியஸ்தர்களைப் புலிகள் பிடித்துச் சிறையில் அடைத்திருந்தனர்.
18 மாதங்கள் எம்மைத் தடுப்பு முகாமில் புலிகள் வைத்தனர்.
இதன் மூலம் நான் நம்புவது யாழ். முஸ்லிம்களின் வெளியேற்றம் புலிகளினால் ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
நாம் பிடிக்கப்பட்டது 90, செப்டம்பர், 28ஆம் திகதி.
யாழ். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 90 ஒக்டோபர் 30ஆம் திகதி.
ஆகவே புலிகள் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை ஏற்கனவே திட்டமிட்டிருந்தமையின் காரணமாகவே அவர்கள் யாழ்ப்பாணத்தில் எல்லா விடயங்களிலும் முன்னிற்கும் என்னைப்போன்ற முஸ்லிம் முக்கியஸ்தர்களை ஒரு மாத காலத்திற்கு முன்னரே பிடித்துச் சிறையில் அடைத்தமைக்கான காரணம் என்று நான் நம்புகின்றேன்.
எம்மைப் பிடிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய புலிகளின் முக்கியஸ்தர்கள், “முபீன் காக்கா, ஏன் நீங்கள் இந்த நெருக்கடிக்குள் யாழ்ப்பாணத்தில் நிற்கிறீர்கள்? கொழும்புக்குப் போகலாமே?” என்று சூசகமாகச் சொன்னதை நான் பெரிதாகக் கணக்கில் எடுக்கவில்லை. எம்மைப் பிடித்ததன் பின்னரே புலிகள் இதற்குத் தான் சொன்னார்கள் என்ற உண்மை எனக்குத் தெரியவந்தது.
என்னைப் புலிகள் பலவந்தமாகக் கைது செய்யவில்லை.
நான் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுவதற்கான புலிகளின் ‘பாஸ்’ எடுக்கப் போனபோதே அவர்கள் என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.
இக் காலப்பகுதியில்தான் ‘பாஸ்’ என்ற நடைமுறையைப் புலிகள் கொண்டு வந்தனர்.
‘பாஸ்’ எடுத்துத்தான் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்.
இது யாழ். முஸ்லிம்களுக்குப் பெரும் அசௌகரியமாக இருந்தது.
யாழ். முஸ்லிம் வட்டாரத்தில் செப்டம்பர் மாதமளவில் குண்டொன்று விழுந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 09 முஸ்லிம்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இச் சம்பவம் யாழ். முஸ்லிம்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
என்னைப் புலிகள் கைது செய்து சிறையில் அடைத்த நேரத்தில் எனது மனைவி, புலிகளின் ‘பாஸ்’ வழங்கும் அலுவலகத்திற்குச் சென்று என்னைப்பற்றிக் கேட்டபோது, “நாம் அன்றைக்கு எத்தனைத் தடவைகள் சொன்னோம், யாழ்ப்பாணத்தைவிட்டுப் போகுமாறு!
அவர் வெளியேறாமல் நின்றமைக்கு நான் என்ன செய்ய முடியும்?
நாம் அவரிடம் எல்லா விடயத்தையும் சொல்ல முடியுமா?” என்று புலிகளின் முகாமில் இருந்த புலி முக்கியஸ்தர் கூறியுள்ளார்.
நான் பாஸ் எடுக்கச் சென்றபோது அதற்குப் பொறுப்பானவர், “அண்ணே, நான் பாஸ் எடுத்து வைக்கிறேன். நீங்கள் பின்னரேம் திருநெல்வேலிக்கு வாருங்கள்,” என்றார்.
நான் அவரின் வாக்கை நம்பி அங்குச் சென்றபோதுதான் ஜீப்பில் வந்த புலிகள் என்னை ஏற்றிக் கொண்டுபோய் ஒரு வீட்டு அறையில் அடைத்தார்கள்.
சலீம் என்ற இயக்கப் பெயர் கொண்ட ஒரு தமிழ்ப் பொடியன் தான் என்னை அறையில் அடைத்தவன்.
அந்த இரவு முழுவதுமாக வாகனங்களின் சத்தமும் மற்றைய அறையில் வேறு வேறு முஸ்லிம் நபர்கள் உரத்துப் பேசும் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
காலையில் நான் மலசல கூடத்திற்குச் செல்லும்போதுதான் எனக்குத் தெரியவந்தது - என்னை மாத்திரமல்ல, பல யாழ். முஸ்லிம் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பாரென்று.
இக் கைது நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் வரை நடந்தது.
இது எனக்குப் பெரிய கேள்விகளை எழுப்பியது.
உடனே நான் மூன்றாவது தினம் என்னை அடைத்து வைத்திருந்த அறையின் சீட்டை உடைத்துப் புலிகளின் முகாமிலிருந்து தப்பி வந்து விட்டேன்.....
தப்பியவருக்கு என்ன நடந்தது...?தொடரும்...
நன்றி: "சாட்சியமாகும் உயிர்கள்"
-முனைமருதவன்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக