பிரிட்டனுக்குள் பிரவேசிக்கும் ஐரோப்பியர் அல்லாதவர்கள் ஆங்கில மொழிப் பரீட்சையொன்றுக்குத் தோற்ற வேண்டும் என்ற புதிய நடைமுறை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அல்லது பிரிட்டனில் குடியேறி இருப்பவர்களுக்கு பங்காளிகளாக அல்லது வாழ்க்கைத் துணையாக வர விரும்பி பிரிட்டன் செல்வதற்கு விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றவேண்டும்.
தற்காலிக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது தேவையில்லை. புள்ளி அடிப்படையில் விசா பெறும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இது தேவையில்லை. மேற்படி விசாவுக்கு விண்ணப்பிப்போர் அடிப்டையில் தங்களுக்கு ஆங்கிலம் பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். பிரிட்டிஷ் எல்லை முகவராண்மையின் அங்கீகாரம் பெற்ற வினாத்தாள் ஒன்றுக்கே இவர்கள் முகம் கொடுக்க வேண்டும்.
விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இந்தப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்த சான்றிதழுடனேயே விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பட்டப்படிப்பு கற்கைநெறிச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலமும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தவிர்க்கலாம். அப்படியாயின் கற்கை நெறியின் அசல் சான்றிதழழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக