பள்ளிகளில் மாணவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வழங்கப்படும் கடுமையான தண்டனைகள், ஆசிரியர்கள் அடித்து குழந்தைகள் துடிதுடித்து பலியாகும் சம்பவங்கள், வயதுக்கு வந்த மாணவியரை ஆபாசமாக பேசுவதால் நடக்கும் தற்கொலைகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளால் ஏற்படும் பிரச்னைகள்... இப்படி பட்டியலில் அடங்காத இந்த அவலங்களும், கொடூரங்களும் அவ்வப்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், நகரங்களிலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் நிகழும்போது, பெற்றோரும், பொதுமக்களும் கொந்தளிக்கும்போது, "நடவடிக்கை எடுக்கிறோம்' என, போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் கோரசாக சமாதானம் செய்வதும் அவ்வப்போது நிகழாமல் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் பெரும்பாலான குற்றங்களில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுவது தான் பெரும் கொடுமை. சம்பவங்களுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதோ, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதோ போலீசாரும், கல்வித்துறையும் கடும் நடவடிக்கை எடுக்காமல், "பூசி மெழுகி' விடுவதால், குற்றம் செய்பவர்கள் குதூகலிக்கும் நிலைமை தமிழகத்தில் உள்ளது.
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில், 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் துடிதுடித்து தீயில் கருகி சாம்பலான சம்பவம், தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. இதற்கு காரணமானவர்கள், சட்டத்தின் ஓட்டைகளை கண்டுபிடித்து "வெளியே' வந்துவிட்டனர். குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் வாழ்க்கை இன்று சூனியமாகி, நடமாடும் பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அளவிற்கு வன்முறைகளும், கொடூரங்களும் நடக்கும்போது, "யாருமே, இந்த அநியாயத்தை கேட்க மாட்டாங்களா? கயவர்களுக்கு கைவிலங்கு மாட்ட மாட்டார்களா?' என, பாதிக்கப்பட்டவர்கள் குமுறுவது உண்டு. இப்படிப்பட்டவர்கள், வாய்ப்பு கிடைக்கும்போது, தங்களுடைய ஆதங்கங்களை எல்லாம் ஒன்று திரட்டி கொட்டி விடுவர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய, பொதுமக்கள் விசாரணை கூட்டமும் இப்படித்தான் அமைந்தது.
ஷாந்தா சின்ஹா மற்றும் பல்வேறு நீதிபதிகள் அடங்கிய இக்குழு, சென்னையில் நேற்று முன்தினமும், தொடர்ந்து நேற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது. மாநிலம் முழுவதும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என, தேசிய ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று அண்ணாசாலை தேவநேய பாவாணர் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தேசிய ஆணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு, ஏராளமான பொதுமக்களும், பல்வேறு சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் திரண்டு வந்திருந்தனர்.
மகளை பறிகொடுத்த தாய்: தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தாய், "நான் ஆயா வேலை பார்த்து, எனது மகளையும், மகனையும் கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். எனது மகள் யோகதாரணி, ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தா. நல்லா படிப்பா. வகுப்பு, "லீடர்' அவதான். அப்படிப்பட்ட அவளை, ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு வாயால சொல்ல முடியாத அளவுக்கு அசிங்க, அசிங்கமா ஒரு லேடி டீச்சர் திட்டியிருக்காங்க. அவமானம் தாங்காம, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைச்சுகிட்டு இறந்துட்டா. அவ எழுதி வைச்ச கடிதம் மூலமாத்தான், இந்த தகவல் எங்களுக்கு தெரிஞ்சுது' என, அழுதார்.
பிஞ்சை இழந்த பெற்றோர்: மணப்பாறை அடுத்த, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, "எனது மகள், பக்கத்துல இருந்த ஒரு தனியார் பள்ளியில யு.கே.ஜி., படிச்சிட்டு இருந்தா. வழக்கமா, நான்தான் பள்ளியில கொண்டுபோய் விடுவேன்; அழைச்சிட்டு வருவேன். ஒரு நாள் காலையில பள்ளியில விட்டுட்டு மாலையில போனா, குழந்தை வரலன்னு சொன்னாங்க. கேட்டா பதிலே இல்லை. மறுநாள், பக்கத்து பள்ளி தண்ணீர் தொட்டியில காயத்தோட பிணமா பார்த்தோம்' என கூறியவர், தொடர்ந்து பேச முடியாமல், அப்படியே கீழே சரிந்தார். அவரது மனைவி, "தண்ணீர் தொட்டியில முள் நிறைய இருந்துச்சு. அந்த முள் எல்லாம் என் மகள் உடம்புல குத்தி ரத்த காயமா, இறந்து கிடந்தா. அவளை, பள்ளி தலைமை ஆசிரியரோ, வகுப்பு ஆசிரியரோ யாருமே வந்து பார்க்கல. வகுப்பு ஆசிரியை அடிச்சதால தான், அவ இறந்திருக்கிறா. சம்பந்தப்பட்டவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் குழந்தை இறந்ததுக்கு நீதி கிடைக்கணும்' என, அவரும் அழுதார். இந்த காட்சியைக் கண்டு, விசாரணைக்கு வந்த ஒட்டுமொத்த மக்களும் கண் கலங்கினர்.
அதிகாரிகள் மவுனம்: இதேபோல், பலரும் தங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவங்களை, தேசிய ஆணையம் முன் தெரிவித்தனர். இதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், "நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என ஒற்றை வார்த்தையை பதிலாக தந்தனர். கல்வித்துறை அதிகாரிகளோ, "மவுன விரதம்' இருந்தனர். "குற்றங்களில் தொடர்புடையவர்கள் வசதியாக இருந்தால், தப்பி வெளியே வந்து விடுகின்றனர்; அதுவே, ஏழைகளாக இருந்து தவறே செய்யாவிட்டாலும், அவர்கள், "உள்ளே' வாடுகின்றனர்' என ஆணைய உறுப்பினர்கள் வேதனை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக