யாழ் கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் நடத்தப்படுவதாகக் கூறி, 14 கேபிள் தொலைக்காட்சி சேவை நடத்துநர்கள்மீது தொலைத் தொடர்பு ஆணைக்குழுவினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த, கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளும், சி.ஐ.டி.யினரும், 14 சேவை வழங்குநர்கள்மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தொலைக்காட்சி சேவை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்ற டான் ரீவி மற்றும் ரிவி லங்கா அனுமதிப்பத்திரம் ஊடாகவே தாம் கேபிள் சேவையை நடத்திவருவதாக சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.
இவற்றை ஆராய்ந்த நீதிபதி ஆனந்தராஜா, இதுதொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சுமார் 90க்கும் அதிகமானவர்கள் நீண்ட காலமாக கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்கி வருகின்றனர். எனினும், அண்மையில் டான் தொலைக்காட்சி மற்றும் ரீவி லங்கா தொலைக்காட்சி சேவையினர் இணைந்து ஆரம்பித்திருக்கும் டொல்ஃபின் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையினருடன் இணைந்து யாழ் நகரிலுள்ள 91 கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடர்ந்து வந்தனர்.
டொல்ஃபின் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை தொடர்பாக விளக்கும் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றும் ஒக்டோபர் 22ம் திகதி நடத்தப்பட்டு, 91 கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்கள் இந்தச் சேவை ஒப்பந்தத்தைச் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், டொல்ஃபின் டிஜிட்டல் தொலைக்காட்சி ஊடாக கல்வி தொலைக்காட்சி என்ற புதிய ஒளிபரப்புச் சேவையொன்று உள்ளூரில் ஆரம்பிக்கப்படுவதாகவும், இதில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவசியமான நிகழ்ச்சிகள் 24 மணிநேரமும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்டபடியே, தீபாவளி தினமான நவம்பர் 6ம் திகதி முதல் கல்வி டொல்ஃபின் டிஜிட்டல் தொலைக்காட்சியின் கல்வி ரிவி ஒளிபரப்பு ஆரம்பித்து, க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றது.
எனினும், சட்டவிரோதமான முறையில் கேபிள் தொலைக்காட்சி சேவை நடத்துவதாகக் கூறி, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினர் 14 கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களின் அலுவலகங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், இவர்கள்மீது வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று 29ம் திகதி நடைபெறவிருந்தபோதும், பின்னர் அது இன்றையதினம்(30-11-2010) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, மேற்படி கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறி, வழக்கு விசாரணைகளை ஜனவரி 17ம் திகதிக்கு நீதிபதி ஆனந்தராஜா ஒத்திவைத்தார்.
பத்திரிகைகளில் தவறான செய்தி
இதேவேளை, மேற்படி கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாகச் செய்திகளை வெளியிட்ட யாழ் பத்திரிகைகள் சில, கேபிள் சேவை வழங்குநர்கள் கைதுசெய்யப்பட்டதாக தமது செய்திகளில் குறிப்பிட்டிருந்தன.
இதுதொடர்பாக மேற்படி ஊடகங்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, வெளிநாட்டு இணையத்தளங்களில் வெளியான செய்திகளையே தாம் வெளியிட்டதாக அவர்கள் தமக்குப் பதிலளித்ததாக, கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக