ஞாயிறு, 25 ஜனவரி, 2026

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஓரளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது லீக்கான பட்டியல்

No photo description available.

 Oneindia Tamil: ஏரியா பிரிச்சாச்சு.. கமலுக்காக விட்டுக் கொடுத்த திமுக! காங்கிரஸுக்கு அதே தான்! லீக்கான திமுக லிஸ்ட்!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களத்தில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கூட்டணியின் இறுதி வடிவம் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற பல கட்சிகள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் தான் மக்கள் நீதி மய்யம் அந்த கூட்டணியில் இடம்பெற்றது.


மேலும் கருணாஸ் உள்ளிட்ட சில தலைவர்களும் திமுக ஆதரவாளர்களாக மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் திமுகவின் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பட்டியல் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதுக்கு இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணி
கடந்த 2021 தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அந்த தேர்தலில் திமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 3 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தொகுதி பங்கீடு
இதில், மதிமுக, கொமக, மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பெரும்பாலான கட்சிகள் இந்த முறையும் தொடர்கின்றன. அதோடு கூடுதலாக, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணியையும், தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
இந்த சூழலில், திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து வருகின்றன. ஆனால், வெளிப்படையாக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இருந்தபோதிலும், திமுக கூட்டணி ஏற்கனவே இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், அதற்கான தொகுதி ஒதுக்கீட்டு வரைவு தயாராகிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக காங்கிரஸ் தொகுதிகள்
அந்த தகவலின்படி, திமுக இந்த முறை 164 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதுடன், கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்படும் என்ற பேச்சு நிலவுகிறது. பாமக ராமதாஸ் அணிக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
திமுக சீட் ஒதுக்கீடு
இதுதவிர, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் தொகுதிகள் கடைசி நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு வரை மாற்றம் அடையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்களாக இருந்தாலும், திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பெரும்பாலும் இந்த அடிப்படையிலேயே அமையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

கருத்துகள் இல்லை: