வெள்ளி, 29 நவம்பர், 2019

பணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெக்டர.. பணத்தை மாற்றிக்கொள்ள வழி உள்ளதா...?

பணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெக்டர்மின்னம்பலம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், பூமலூர் கிராமத்திலுள்ள கருப்பராயன் கோயில் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது-82). கணவர் பெயர் பழனிசாமி. இவரது சகோதரி ரங்கம்மாள் (வயது-77). கணவர் பெயர் காளிமுத்து. கணவரை இழந்த இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர்.
வெளியுலகத் தொடர்புகள் இல்லாத சகோதரிகள் இருவரும் விவசாய கூலிவேலை செய்து வந்துள்ளனர். பணதிப்பழிப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ.46 ஆயிரத்தை இருவரும் சேமித்து வைத்திருந்தனர். காச நோய் தாக்குதலுக்கு உள்ளான ரங்கம்மாள் மருத்துவரிடம் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன் சென்றபோது, பத்திரமாக வைத்திருந்த பழைய நோட்டுகளை நீட்டியிருக்கிறார். அப்போதுதான் இந்த நோட்டுகள் செல்லாது என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

மருத்துவ செலவுக்கு வழியில்லாமல் சகோதரிகள் இருவரும் சிரமத்தில் உள்ளது குறித்து செய்திகள் வெளியானதும் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உடனே இதுபற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவையடுத்து பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் விரைவாக செயல்பட்டு, வருவாய் ஆய்வாளர் சந்தீஷ், வி.ஏ. ஓ. கோபி ஆகியோரை பூமலூர் கிராமத்துக்கு சென்று விசாரிக்கச் சொன்னார்.
இதனைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் சதீஷ் மற்றும் வி.ஏ.ஓ கோபி ஆகியோர் பாதிக்கப்பட்ட இரு மூதாட்டிகளையும் நேரில் சென்று பார்த்துப் பேசினார்கள். ‘இந்த நோட்டையெல்லாம் செல்லாதுனு அரசாங்கம் சொல்லிட்டாங்களே அது உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டதற்கு,<> “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பணம் இருப்பது தெரிஞ்சா மகன்கள் எடுத்து செலவு பண்ணிடுவாங்கனுதான் தெரியாம வச்சிருந்தோம்’ என்றிருக்கிறார்கள் அப்பாட்டிகள்.
அந்தப் பாட்டிகளின் வங்கி கணக்கு, ஆதார் அட்டை ஆகிய சான்றிதழ் நகல்களைப் பெற்றுக் கொண்டு இது தொடர்பான விசாரணை அறிக்கையை கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் இன்று (நவம்பர் 29) வழங்கினார்கள். அந்த இரு பாட்டிகளையும் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வர உத்தரவிட்டார் கலெக்டர்.
இதையடுத்து இன்று மதியம் அந்தப் பாட்டிகள் இருவரும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவைக் கொடுத்தார் கலெக்டர். அத்தோடு நிற்கவில்லை... ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு போன் போட்டு, ரங்கம்மாளுக்கு காசநோய் சிகிச்சை அளிக்குமாறு பேசி, பரிந்துரை கடிதமும் கொடுத்துள்ளார் கலெக்டர்.
மேலும், திருப்பூரில் உள்ள அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மூலமாக இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று மூதாட்டிகள் இருவரும் சேமித்து வைத்திருந்த பணத்தை மாற்றிக்கொள்ள வழி உள்ளதா...? என்று ஆய்வு செய்து, அவர்களுக்கு உதவுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார் கலெக்டர் விஜய கார்த்திகேயன்.
நாளிதழ்களில் வரும் செய்தியைப் பார்த்து நமக்கென்ன என்று கடந்துவிடாமல், கவனித்து விசாரித்து கனிவோடு உதவியும் செய்திருக்கும் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் பாராட்டுக்குரியவர், வாழ்த்துக்குரியவர்.

கருத்துகள் இல்லை: