ஞாயிறு, 24 நவம்பர், 2019

சரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை


பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார் திட்டவட்டம் மாலைமலர் :  நான் இன்னும் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன். சரத்பவார் தான் எனக்கு தலைவர் என்று தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி அஜித்பவாருக்கு சரத்பவார் பதில் அளித்துள்ளார். சரத்பவார் < மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக சில தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின்
முதல்வராக நேற்று மீண்டும் பதவியேற்றார். சில எம்.எல்.ஏ.க்களுடன் அவருக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் அஜித்பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவார் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ’நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எப்போதும் இங்கே தான் இருப்பேன். சரத்பவார் தான் எங்கள் தலைவர்.
 எங்கள் பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்கி மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்களுக்காக நேர்மையாக உழைக்கும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடனடியாக பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சி அமைப்பதற்காக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது எங்கள் கட்சியின் ஒருமித்த முடிவாகும்.

மக்களின் நடுவே குழப்பத்தை விளைவிப்பதற்காகவும் தவறான யூகத்தை உருவாக்கவும் இதுபோன்றதொரு கருத்த அஜித்பவார் தெரிவித்துள்ளார்’ என்று சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: