சனி, 30 நவம்பர், 2019

லண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு .. பலர் காயம்

தினமலர் : லண்டன் : லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
இங்கிலாந்தில் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பகல் 2 மணியளவில் மர்மநபர் ஒருவர், அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். அப்போது சிலர் அந்த மர்ம நபர்களை தாக்கி, மர்ம நபர் பொதுமக்களை தாக்குவதை தடுத்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் மர்ம நபரை, சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் போலி பாதுகாப்பு கவசங்களும், போலி வெடிகுண்டுகளும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீசார் அங்கு வருவதற்கு முன் மர்ம நபரை, துணிச்சலுடன் தாக்கி, பொது மக்களை காப்பாற்றியவர்களை லண்டன் மேயர் சாதிக் கான் பாராட்டி உள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து லண்டன் பிரிட்ஜ் மூடப்பட்டுள்ளது. லண்டன் பிரிட்ஜ் அருகில் உள்ள உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக லண்டனில், கடைவீதி ஒன்றிலும் இதே போன்தொரு கத்திகுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன், லண்டன் பிரிட்ஜ் பகுதியில் மர்ம நபர்கள் 3 பேர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: