செவ்வாய், 26 நவம்பர், 2019

டென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை தேடி சென்னை வந்து நேரில் சந்தித்த டேவிட் சாந்தகுமார்!

சாந்தகுமார் தாயின் புகைப்படத்துடன் பாசப் போராட்டம் டேவிட் சாந்தகுமார்.vikatan.com : சி.ய.ஆனந்தகுமார் : 41 வருடங்களுக்குப் பிறகு டென்மார்க் நாட்டிலிருந்து சென்னை வந்த அவர் முதன்முதலில் தாயை நேரில் சந்தித்தார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி-தனலட்சுமி தம்பதி. குடும்ப வறுமை காரணமாக இவர்கள், கடந்த 1979-ம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.
சென்னையில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தினாலும், வறுமை ஒழியவில்லை. இந்த நிலையில், கலியமூர்த்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால், குடும்பம் மேலும் தள்ளாடியது. இவர்களுக்கு ராஜன் மற்றும் சாந்தகுமார் எனும் இரு பிள்ளைகள். அதன் காரணமாக பிள்ளைகளைக் காப்பாற்ற தனலெட்சுமி, வீட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார். இதனால் மகன்களை பல்லாவரத்தில் செயல்பட்டு வந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளார்.

சில தினங்களுக்குப் பிறகு, தன் பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற தனலட்சுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் கணவர் சம்மதத்தின் பேரில், குழந்தைகள் இருவரும் டென்மார்க் நாட்டுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இரண்டு மகன்களைப் பிரிந்த வேதனையில் தவித்தார் தனலெட்சுமி. டென்மார்க் நாட்டில் வாழும் டானிஸ் எனும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டார். தற்போது, படித்து முடித்து வங்கி அதிகாரியாக பணியாற்றும் டேவிட் சாந்தகுமாருக்கு, அந்நாட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டை ஆண்குழந்தைகள் உள்ளனர்.
சாந்தகுமார் மனைவி மற்றும் குழந்தைகள்
சாந்தகுமார் மனைவி மற்றும் குழந்தைகள்
இந்த நிலையில், அவருக்கு நீண்ட வருடங்களாகவே தன் தாயைக் காண வேண்டும் என்கிற தேடல் இருந்தது. தனது விருப்பத்தை டென்மார்க்கில் உள்ள வளர்ப்பு பெற்றோரிடம் கூறியவர், அவர்களின் சம்மதத்துடன் தனது தாயைத் தேடி, கடந்த 2013-ம் ஆண்டு தனியாளாக டேவிட் சாந்தகுமார் இந்தியா வந்தார்.
அதிலிருந்து ஒவ்வொரு வருடமும், தாய் மற்றும் உறவினர்களைத் தேடி அலைந்தார் சாந்தகுமார். பலமுறை தனது குடும்பத்தார் பற்றிய தகவல் தெரியாத காரணத்தினால் திரும்பிச் சென்றார்.
மீண்டும் தேட ஆரம்பித்து கடந்த செப்டம்பர் 24-ம் தேதி திருச்சி வந்தார். மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோர் உதவியுடன் தஞ்சாவூர் வீதிகளில் தாயைத் தேடினார். இதுகுறித்த தகவல்களை முதன்முதலில் விகடன் இணையதளத்தில் வெளியிட்டோம்.
தொடர்ந்து கடந்த மாதம், டேவிட் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி சென்னை அடுத்த அம்பத்தூரில் அவரின் இளைய மகன் சரவணன் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இன்ப அதிர்ச்சியில் இருந்த டேவிட் சாந்தகுமார், தாயுடன் வீடியோ காலில் பேசினார். விரைவில் தாயைச் சந்திக்க தமிழகம் வருவதாக கூறியிருந்தார். கூறியபடியே, நேற்று தாயைச் சந்திக்க டேவிட் சாந்தகுமார் டென்மார்க்கிலிருந்து சென்னை வந்தார்.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய டேவிட் சாந்தகுமார், “அம்மாவை நேரில் பார்ப்பேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த நம்பிக்கையில் தேடி அலைந்தேன். அம்மா கிடைத்துவிட்டார். அம்மாவை நேரில் சந்தித்த இந்த நாளை மறக்கவே முடியாது. இவ்வளவு உறவுகள் எனக்கு இருக்கிறார்கள் என நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது.
விரைவில் என் மகன்கள் மற்றும் மனைவியை அழைத்துவந்து அம்மாவிடம் காட்டணும். என் அம்மா கிடைப்பதற்கு நிறைய ஊடகங்கள் உதவினாலும், முதன்முதலில் எனது வலியைப் பதிவு செய்தது விகடன்தான். தொடர்ந்து விகடன் செய்த உதவிகளை எந்த நாளும் மறக்க மாட்டேன்” என்று சந்தோஷ வார்த்தைகளை உதிர்த்தார்.<

கருத்துகள் இல்லை: