புதன், 27 நவம்பர், 2019

இதுதானா இந்த வல்லரசுக் கனவு?... பொது நிறுவனங்களை விற்க கூவிக் கொண்டு நிற்கிறோம்..

Kathir RS
இத்தனை நிலங்களை வளங்களை விற்றும் இத்தனை வளங்களை விற்றும்..
இத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டில் கடந்த 20 வருடங்களாக வேலைவாய்ப்புகளையும் சம்பளத்தையும் வசதிகளையும் வாரிக் கொடுத்தும்..
80களில் 90களில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன் வாழ்வில் நிதித் சுதந்திரத்தையும் வாழ்வியல் சுதந்திரத்தையும் அடைந்தும்..
இந்த நாடு ஏன் இன்னும் ஏழை நாடாக இருக்கிறது?
இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப புரட்சி தொடங்கி 20 வருடங்கள் முடிந்து விட்டன. உலகமயமாக்கல் வந்து 20 வருடங்கள் முடிந்து விட்டன.
1990 களில் பொறியியல் பயின்று வேலைக்குச் சேர்ந்த ஐடி தலைமுறையினர்
ஒரு கார் ஒரு ஃப்ளாட் என்று தங்கள் வாழ்வையே வாழ்ந்து முடித்துவிட்டனர்.
இந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் கோடிக்கணக்கான டாலர்களில் கடந்த 20 ஆண்டுகளாக, சுதந்திரமடைந்த பின் இந்தியா ஈட்டிய மொத்த வருமானத்தை விடவும் பன் மடங்கு ஈட்டிக் கொடுத்த பின்பும் இந்த நாடு ஏன் இன்னும் ஆண்டியாய், போண்டியாய் கிடக்கிறது.
எங்கே போனது நாம் ஈட்டிக் கொடுத்த வருமானம் ?
அரபு நாட்டில் கிடைத்த எண்ணெய் வளம் அந்த நாட்டை சொர்க்கபுரியாக்க எடுத்துக் கொண்ட காலம் இருபது வருடங்களுக்கும் குறைவே.
ஒரு காலத்தில் மும்பையும் ஷாங்காயும் வளர்ச்சியில் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்த மாநகரங்கள்..

ஆனால் இன்று ஷாங்காயின் கால் தூசி பெறாது மும்பை..
அதுவும் 20 வருடத்திற்குட்பட்ட வளர்ச்சிதான்.
ஷாங்காய் மட்டுமல்ல மொத்த சீனாவும் இந்த இருபது வருடங்களில் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசாக நிற்கிறது.
இத்தனை ஆண்டுகளில் நம்மால் சாலை கட்டமைப்பிலாவது சாதிக்க முடிந்ததா?
போட்ட சாலைகளையாவது பராமரிக்க துப்பிருக்கிறதா?
சுங்க வரி என்ற நிரந்த திருட்டு அமைப்பையல்லவா உருவாக்கி வைத்திருக்கிறோம்.
கல்வி, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து,உணவு, வீட்டு வசதி, இவற்றில் தன்னிறைவு பெற்ற ஏதாவது ஒரு துறையுண்டா?
ஞானத்தின்,வேதங்களின்,தெய்வங்களின் பிறப்பிடமாக கொண்டாடப்படும் இந்த நாட்டை மாதாதீகளும் ஸ்ரீராமன்களும் ஏன் கைவிட்டுவிட்டனர்..?
பாரத மாதா ஏன் இன்னும் கந்தலுடையை கட்டிக்கொண்டு பரிதாபமாக நிற்கிறாள்..?
இந்த நாட்டின் சாதி ஒரு 20-30 சதவீத மக்களை இன்னமும் முன்னேற விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.
இன்னொரு 20 சதவீதம் இந்திய நாட்டின் மொத்த வருமானத்தையும் சுருட்டி வைத்திருக்கிறது.
இந்த நாட்டின் மீதி மக்கள் தொகைக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் இந்த கும்பல் குவித்து வைத்திருக்கிறது.
இந்த கும்பல் தான் இந்த நாட்டின் அழிக்க முடியாத கிரிமினல் கேபினெட்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களையும் என்னையும் போன்ற படித்த இளைஞர்கள் உழைத்தாலும்..உங்களையும் என்னையும் போன்ற தொழில் முனைவோர் உயிரைக் கொடுத்து இந்த நாட்டை முன்னேற்ற நினைத்தாலும் அது நடக்காது..
இனி ஒரு பொருளாதாரப் புரட்சி இந்த மண்ணில் நடக்கப்போவதில்லை..ஒரு நூற்றாண்டின் அற்புதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது..அப்படியே இனியோருமுறை அது நடந்தாலும் அதைப் பார்க்க நாம் இருக்கப் போவதில்லை.
2020 ல் நாம் எதையோ பெரிதாக கிழிக்கப் போகிறோம் என்றொரு மஹான் சொன்னாரே நினைவிருக்கிறதா?
இதோ அந்த 2020 க்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை..
என்ன நடந்திருக்கிறது இந்த நாட்டில்..
பொதுச் சொத்துகளை நிறுவனங்களை விற்க கூவிக் கொண்டு நிற்கிறோம்..
இதுதானா இந்த வல்லரசுக் கனவு?
இனி நம் வாழ்நாளில் இந்தியா என்ற நமது நாடு வல்லரசாகும் என்றோ குறைந்த பட்சம் குண்டும் குழியுமற்ற சாலையாவது போடப்படும்...அவை பராமரிக்கப்படும் என்றோ எல்லா மக்களுக்கும் குறைந்த பட்ச வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றோ ஒரு எண்ணமிருந்தால் அதை தீயிலிட்டு கொளுத்திவிடுங்கள்.
அதன் சாம்பலை உடலெல்லாம் தடவிக் கொண்டு உரக்கச் சொல்லுங்கள்... சம்போ மஹாதேவா!!

கருத்துகள் இல்லை: