ஞாயிறு, 24 நவம்பர், 2019

பறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வீடியோ!

மின்னம்பம் : ஹைதராபாத்தில் மேம்பாலத்திலிருந்து பறந்து வந்த கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் ஹச்சிபவ்ளி என்னும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பயோ டவர் சிட்டி பாலம் ஒன்று கட்டப்பட்டு கடந்த நவம்பர் 4ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 69.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் கூர்மையான வளைவு, நெளிவுகள் காணப்படுகிறது. இது குறித்த உரிய அறிவிப்புப் பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 23) மதியம் ஒரு மணியளவில் அந்தப் பாலத்தில் சிறப்பு நிற
வோல்க்ஸ்வேகன் ஜிடிஐ வகை கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த கார் வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீதிருந்து பறந்து கீழே விழுந்தது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.40 கிலோமீட்டர் வேகத்துக்கு அதிகமாக அந்தப் பாலத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வது ஆபத்தாக இருக்கும் சூழலில், இந்த கார் 104 கிலோமீட்டர் வேகத்தில் வந்துள்ளது. பாலத்திலிருந்து அதிவேகமாகப் பறந்து வந்த கார் கீழே இருந்த மரத்தின் மீது மோதியது. அத்துடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது அந்த கார் மோதியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சாலையில் நடந்து சென்றவர்கள், வாகன ஓட்டி உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்தனர். இந்தக் காட்சிகளைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பெரும் விபத்திலிருந்து சிலர் நூலிழையில் உயிர் பிழைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அந்தப் பாலத்தின் வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்குவதாக ஹைதராபாத் மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: