Shyamsundar -/tamil.oneindia.com :
மும்பை: சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள்
ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. மூன்று கட்சிகள் இணையும் மகா விகாஸ் ஆகாதி
என்று புதிய கூட்டணிக்கான தீர்மானம் 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்களால் இந்த
ஆலோசனையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை
ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிதான்
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி
அமைக்கும் என்று இருந்தது. ஆனால் தற்போது அங்கு திடீர் என்று பாஜகவின்
தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார்.
கடந்த சனிக்கிழமைதான் அவர் பதவி ஏற்றார். யாருமே எதிர்பார்க்காத வகையில்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு அளித்தார்.
அதோடு அஜித் பவார் துணை முதல்வராகவும் மகாராஷ்டிராவில் பதவி ஏற்றார்.
இதற்கு எதிராகவும், ஆளுநர் இவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம்
வழங்கியதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா - காங்கிரஸ் -
தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த மூன்று
நாட்களாக விசாரணை நடந்தது. இன்று அதில் தீர்ப்பு வந்தது.
நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் அளித்த தீர்ப்பில், நாளை மாலை
5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; நம்பிக்கை
வாக்கெடுப்பு நடத்த வசதியாக தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்
என்று கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில்
இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது தேவேந்திர பட்னாவிஸ்
செய்துள்ளார்.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் தற்போது ஆலோசனை
நடத்தினார்கள்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை
நடத்தினார்கள்
மூன்று கட்சியை சேர்ந்த தலைவர்களாக உத்தவ் தாக்கரே, சரத் பவார், அசோக்
சவான், சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே, சில முக்கிய எம்எல்ஏக்கள் ஆகியோர்
இதில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் மகாராஷ்டிராவில்
என்சிபி-காங்-சிவசேனா இணைந்த மகா விகாஸ் ஆகாதி எனும் புதிய கூட்டணி
அதிகாரப்பூர்வமாக உதயமானது. புதிய கூட்டணிக்கான தீர்மானம் 3 கட்சிகளின்
எம்.எல்.ஏக்களால் இந்த ஆலோசனையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக