வெள்ளி, 29 நவம்பர், 2019

இலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மில்லியன் டாலர்கள் அன்பளிப்பாகவும் இந்தியா வழங்கியது


மின்னம்பலம் : இலங்கை அதிபராகப் பதவியேற்றதும் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டெல்லி வந்த கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு இன்று (நவம்பர் 29) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர்.
கோத்தயப சீனாவுக்கு ஆதரவானவர் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், அவர் தேர்தலில் வெற்றிபெற்ற சில நாட்களிலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை கொழும்புவுக்கு அனுப்பிவைத்த மோடி, கோத்தபயவை முதலில் இந்தியாவுக்கு வரச் சொல்லுங்கள் என்றும் சொல்லியனுப்பினார்.
அதன்படியே முதலில் சீன பயணத்தைத் தவிர்த்துவிட்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் கோத்தபய. இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்குப் பின் பேசிய கோத்தய ராஜபக்‌ஷே, "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
கோத்தபயவை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வரவேற்றிருந்தார்.


தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோத்தபய அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை - இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்” என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
பயணத்தின் முக்கிய அம்சமாக மோடியும் கோத்தபய ராஜபக்‌ஷேவும் இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் கோரிக்கைகள், நிறைவேற்றுவது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.
இந்தப் பயணத்தைக் குறிக்கும் வகையில், இலங்கையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் கடனாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான 50 மில்லியன் டாலர் நிதியை இலவசமாகவும் இந்தியா அளித்திருக்கிறது.
இதுபற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “ இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் கடன் வழங்குவது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை பலப்படுத்தும். இது இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் ”என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: