vikatan.com - ந.பொன்குமரகுருபரன் :
ராமாயணத்தில் ராவணனின்
சகோதரன் விபீஷணனைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு, ராவணனை வீழ்த்துவார்
ராமன். மகாராஷ்டிராவில் இதைத்தான் அமித் ஷாவும் செய்ய நினைத்தார். ஆனால்,
பி.ஜே.பி-க்குள் அஜித் பவார் என்னும் `ட்ரோஜன் குதிரையை’ அனுப்பி மொத்த
திட்டத்தையும் சிதைத்துவிட்டார் சரத்பவார்
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பி.ஜே.பி-யின் தேவேந்திர பட்னாவிஸ்
ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஒருவாரமாக அம்மாநிலத்தில் நிலவி வந்த
அரசியல் குழப்பம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அஜித் பவாரை
வைத்து சரத்பவார் ஆடிய சதுரங்க ஆட்டத்தில் அமித் ஷா வீழ்ந்துவிட்டதாகக்
கூறுகிறது மும்பை வட்டாரங்கள்.
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்
பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களைப் பெற்றிருந்த பி.ஜே.பி, 56
இடங்களை வைத்திருந்த சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க
முடிவெடுத்தது. முதல்வர் பதவி உட்பட, அமைச்சரவையில் 50 சதவிகித இடத்தை
சிவசேனா எதிர்பார்த்ததால் கூட்டணி முடிவு எட்டப்படவில்லை. தேசியவாத
காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடமும் ஆட்சியமைக்கும் அளவுக்கு போதிய
பலமில்லாததால், நவம்பர்12-ம் தேதி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை
அமல்படுத்தியது மத்திய அரசு.
இச்சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக, சரத்பவாரின் அண்ணன் மகனும்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் திடீரென
பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்தார். நவம்பர் 22-ம் தேதி இரவோடு இரவாகத்
தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, அமைச்சரவையைக் கூட்டாமலேயே
ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து, நவம்பர் 23-ம் தேதி விடிவதற்குள் தேவேந்திர
பட்னாவிஸ் தலைமையில் பி.ஜே.பி அரசு மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டது. இதன்
பின்னணியில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவின் சாணக்கியத்தனம் இருப்பதாக
பி.ஜே.பி-யினர் புளங்காகிதம் அடைந்தார்கள். தங்களுடன் வரமறுத்த
சிவசேனாவுக்கு அமித் ஷா தக்க பாடம் புகட்டிவிட்டதாகக் கொண்டாடினார்கள்.
ஆனால், வரலாறு வேறொரு விடையை ஒளித்து வைத்திருந்தது.
அஜித் பவார் பின்னால் அணிவகுத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்,
எம்.எல்.ஏ-க்கள் பலரும் சரத்பவார் பக்கம் திரும்பினர். குறிப்பாக, தனஞ்சய
முண்டே சரத்பவார் அணிக்கு மீண்டும் சென்றது, தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு
பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. அஜித் பவாரை பி.ஜே.பி கூட்டணிக்குள்
அனுப்பி, அமித் ஷாவை குழப்பி, தேவேந்திர பட்னாவிஸ் அரசைக் கவிழ்த்ததன்
பின்னணியின் சரத் பவாரின் ஆடுபுலி ஆட்டம் இருப்பதாகக் கூறுகின்றன மும்பை
வட்டாரங்கள்.
மும்பையைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்
பேசினோம். “கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற சூழலில், திடீரென
மகராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை பி.ஜே.பி அமல்படுத்தியதை யாரும்
எதிர்பார்க்கவில்லை. ஆட்சியமைக்கும் அளவுக்கு எண்ணிக்கை இருந்தாலும்,
நீதிமன்றத்தின் வாயிலாக ஜனாதிபதி ஆட்சியை உடைக்க வேண்டுமென்றால் இரண்டு
மாதங்களாகிவிடும். இதற்காக சரத்பவார் தயார் செய்த ஆயுதம் தான் `அஜித்
பவார்’.
இது அமித் ஷா ஆடிய ஆட்டம் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், இது சரத்பவாரின் ஆட்டம்.தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ
அஜித் பவாருடன் பி.ஜே.பி ஏற்கெனவே தொடர்பில் இருப்பதை அறிந்திருந்த
சரத்பவார், பி.ஜே.பி எடுத்த ரகசிய நடவடிக்கைகளுக்கு எந்த முட்டுக்கட்டையும்
போடாமல் அமைதி காத்திருந்தார். தன் கட்சியை அஜித் பவார் உடைத்தபோதும்,
சரத்பவாரிடமிருந்து பெரிய சலனம் எழவில்லை. இந்தத் தருணத்துக்காகவே
காத்திருந்ததுபோல அடுத்தடுத்து காய்களை நகர்த்த ஆரம்பித்தார். இதற்கு
இரண்டு காரணங்கள் உண்டு.
முதலாவது, தன் மகள் சுப்ரியா சுலேவுக்குப் போட்டியாக அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பரிணமிப்பதை சரத்பவார் விரும்பவில்லை. 1991
– 96 நரசிம்மராவ் அமைச்சரவையில் சரத்பவார் பாதுகாப்புத்துறை அமைச்சராக
இருந்தபோது, மகாராஷ்டிரா அரசியலைப் பார்த்துக்கொள்ள அவரால்
நியமிக்கப்பட்டவர்தான் அஜித் பவார். இன்று மகாராஷ்டிராவில் அஜித்
பவாருக்கென ஒரு செல்வாக்கு, ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் வட்டம்
உருவாகியுள்ளது. இதை உடைத்து தன் மகளை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த
ஒருவாய்ப்பு சரத்பவாருக்குத் தேவைப்பட்டது. அதை பி.ஜே.பி உருவாக்கிக்
கொடுத்தது.
இரண்டாவது, ஜனாதிபதி ஆட்சியை உடைத்தால்தான் சிவசேனா, தேசியவாத
காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்க முடியும். நேரம்
செல்லச் செல்ல, இக்கூட்டணிக்கும் பெரும் பிளவை பி.ஜே.பி உருவாக்கலாம்.
நீதிமன்றத்தின் மூலமாகச் சென்றால் காலதாமதம் ஆகும் என்பதால்தான், அஜித்
பவாருக்கு பி.ஜே.பி வலைவிரிப்பதை அறிந்து அந்த வாய்ப்பை சரத்பவார்
பயன்படுத்திக் கொண்டார்.
அஜித் பவாரை பி.ஜே.பி முகாமுக்குள் நுழைத்ததன் மூலம், ஜனாதிபதி
ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, அஜித் பவாருக்கென தேசியவாத
காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த செல்வாக்கையும் சரத் பவார் உடைத்துவிட்டார்.
இனி சுப்ரியா சுலேவுக்கு எந்தத் தடையும் இல்லை. இது அமித் ஷா ஆடிய ஆட்டம்
எனப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், இது சரத்பவாரின்
ஆட்டம்” என்று சிரித்தனர்.
ராமாயணத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனை தன் பக்கம் இழுத்துக்கொண்டு,
ராவணனை வீழ்த்துவார் ராமன். மகாராஷ்டிராவில் இதைத்தான் அமித் ஷாவும் செய்ய
நினைத்தார். ஆனால், பி.ஜே.பி-க்குள் அஜித் பவார் என்னும் `ட்ரோஜன் குதிரை’யை அனுப்பி மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டார் சரத்பவார்.
vikatan.com
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக