

திட்டமிட்டு துன்புறுத்தி வன்புணர்ச்சி படுகொலை செய்திருக்கிறது சாதிவெறிக் கும்பல்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம் - ஆன்டிசிறுவள்ளூர் காலனியை சேர்ந்த ரோஜாவை கூட்டுவன்புணர்ச்சி செய்து தூக்கிலிட்டு சாவடித்திருக்கிறார்கள்.
காரை கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை இரண்டு ஆண்டுளாக காதலித்து வந்துள்ளார் ரோஜா. ஆனால் ராஜேஷ் ஏற்கனவே யாதவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தனது வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். இதனை மறைத்து ரோஜாவை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 21-11-2019 அன்று அழைத்துச் சென்றுள்ளான் ராஜேஷ்.
அவன் மீதுள்ள நம்பிக்கையின் பேரில் உடன் சென்றிருக்கிறார் ரோஜா. பின்னர் கடந்த 26-11-2019 அன்று ரோஜாவின் தம்பிக்கு போன் செய்து உன் அக்காவை சிறுவாக்கம் புதுரோடு அருகில் விட்டுவிட்டேன். பறப் பொண்ணை வைத்து நான் குடும்பம் நடத்த முடியாது. கல்யாணம் பன்னிக்க முடியாது. உன் அக்காவை வந்து கூட்டினு போ என்று திமிராக பேசிவிட்டு போனை துண்டித்திருக்கிறான் கொடூரன் ராஜேஷ்.
பெண்ணை காணவில்லை என்று கடந்த 21-11-2019 அன்று ரோஜாவின் தந்தை புகார் கொடுத்திருந்த நிலையில்,
நேற்று சிறுவாக்கம் அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் ரோஜா மரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்து காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லி உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் வைத்துள்ளது காவல்துறை.
பிணவறையில் ரோஜாவின் உடலை பார்த்ததில் உடலில் பல இடங்களில் சூட்டுக் கொப்பளங்கள், நகக் கீறல்கள் இருக்கின்றன. கொடூரமான முறையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
காவல்துறை தற்கொலை என்று வழக்கு பதிந்து சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. எனவே , தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு உடற்கூராய்வினை காணொளிப் பதிவு செய்யவேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
மேலும், தற்கொலை என்பதை மாற்றி கொலை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவண்
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக