வெள்ளி, 29 நவம்பர், 2019

யேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள் ... சவுதியில் சிக்கி இருந்தவரகள்

மீனவர்கள்மீனவர்கள் மீன்பிடிக்கும் விசைப்படகுvikatan.com - சிந்து ஆர் - ரா.ராம்குமார் : விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி கடலுக்குச் சென்ற மீனவர்கள், அந்த விசைப்படகை அப்படியே இந்தியாவை நோக்கித் திருப்பினர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஆல்பிரட் நியூட்டன், எஸ்கலின், வினிஸ்டன், பெரியக்காட்டைச் சேர்ந்த விவேக், மணக்குடியைச் சேர்ந்த சாஜன், உவரியைச் சேர்ந்த சகாய ரவிகுமார், குளச்சலைச் சேர்ந்த ஜெகன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என 9 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏமன் நாட்டுக்குச் சென்றனர். அங்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுல்தான் என்பவரது விசைப் படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஆனால், சுல்தான் இந்த மீனவர்களுக்குத் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு கொடுத்ததாகவும், இதுவரை சம்பளம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீனவர்கள், சம்பளம் வழங்காத சுல்தானிடமிருந்து தப்பவும், அவருக்கு பாடம் புகட்டவும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த 19-ம் தேதி விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி கடலுக்குச் சென்ற மீனவர்கள், அந்த விசைப்படகை அப்படியே இந்தியாவை நோக்கி திருப்பினர். ஏமனிலிருந்து லட்சத்தீவு கடல் பகுதியை அடைந்தனர். அங்கிருந்து கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகம் அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் துறைமுகத்தை அடைய வேண்டும் என்று தீர்மானித்தனர்.


ஆனால், அவர்களின் போதாதகாலம் விசைப்படகில் டீசல் தீர்ந்துவிட்டது. இதனால் லட்சத்தீவு பகுதியில் படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் கூறினர். ஏமன் நாட்டிலிருந்து படகைக் கடத்தி வருவதை அறிந்த உறவினர்கள் பதறிப்போனார்கள். இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சிலுக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் சர்ச்சில் மீனவர்களின் உறவினர்களை அழைத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்தார். லட்சத்தீவில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும்படி கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், கடத்திவந்த படகை மீட்க அரசு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



மீனவர்களின் உறவினர்கள்



மீனவர்களின் உறவினர்கள்
இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில், "படகை கடத்தி வந்தது தவறான செயல்தான். ஒரு வருடமாக சம்பளம் கொடுக்காததாலும் அடிமைபோன்று நடத்தியதாலும் எப்படியாவது உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில்தான் மீனவர்கள் அப்படிச் செய்துள்ளனர். எனவே, அவர்களுக்கு உதவி செய்வதுடன் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனத் தமிழக மற்றும் கேரள அரசுகளுக்கு கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

கருத்துகள் இல்லை: