திங்கள், 25 நவம்பர், 2019

குட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை .!

குட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு சம்மன்!மின்னம்பலம் : குட்கா ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணையைத் தொடங்கிய சிபிஐயின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய மத்திய கலால் துறை அதிகாரிகள், தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.
குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்த புகார் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாத மத்திய மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுபோலவே கூடுதல் காவல் ஆணையர் தினகரனிடம் டிசம்பர் 3ஆம் தேதி விசாரணை நடத்தவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் டிஜிபி ராஜேந்திரனிடம் நடத்தப்படும் விசாரணையில் குட்கா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பக் காத்திருக்கின்றனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை: