வியாழன், 28 நவம்பர், 2019

ஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே தேசபக்தர்: ... வீடியோ


கோட்சே தேசபக்தர்: மக்களவையில் பாஜக எம்.பி மின்னம்பலம் :  கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் மக்களவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஜி பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது. விவாதத்தின் மீது பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “காந்தியைச் சுட்டுக்கொன்றது தொடர்பாக நாதுராம் கோட்சே அளித்த வாக்குமூலத்தில் சில வரிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கோட்சே தனது வாக்குமூலத்தில், தான் காந்தி மீது 32 ஆண்டுகளாக வெறுப்பை வளர்த்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை நம்பியதால் அவர் காந்தியைக் கொன்றார்” எனப் பேசினார்.
ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், “தேசபக்தர் பற்றிய உதாரணம் எதையும் நீங்கள் கூறக்கூடாது” என இந்தியில் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரக்யா தாகூரை அமரும்படி சக பாஜக எம்.பி.க்கள் அறிவுறுத்தினர். ஆ.ராசாவின் பேச்சு மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

தொடர்ந்து விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸின் குரு கோகாய், ‘நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறிய பாஜக உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியைக் கொன்றவரை தேசபக்தர் என பாஜக எம்.பி குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே காரில் செல்லும்போது பிரக்யா தாகூரிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் என்ன பேசினேன் என்பதை முழுவதும் கேளுங்கள். நாளைக்கு நான் பதிலளிக்கிறேன்” என்று கூறிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
 ஏற்கனவே, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே ஓர் இந்து தீவிரவாதி’ என்று பேசியது விவாதத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரக்யா தாகூர், அப்போதும் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியிருந்தார். பின்னர் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: