வெள்ளி, 29 நவம்பர், 2019

தேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்!

சிறப்புக் கட்டுரை: தேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்!நா. ரகுநாத் - மின்னம்பலம் : இந்த வாரம் திங்கட்கிழமை ‘மின்ட்’ எனும் வணிகப் பத்திரிகையில் ‘எது நல்ல ஊழல், எது மோசமான ஊழல் என்பதை இந்தியா வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தது. ‘மக்கள் மனத்தில் பயமும் பீதியும் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதுவே பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ளதற்குக் காரணம்’ என்று மன்மோகன்சிங் ‘தி இந்து’ பத்திரிகையில் சமீபத்தில் எழுதியிருந்தார். அவருக்குப் பதில் சொல்லும்விதமாகத் தொடங்கிய இந்த மின்ட் கட்டுரை, அரசு ஊழலுக்கு எதிராக எடுத்துக்கொண்டிருக்கும் கடும் நடவடிக்கைகள் இந்த பயத்துக்கும் பீதிக்கும் முக்கியக் காரணம் எனலாம் என்ற வாதத்தை முன்வைத்தது.
இதைப் படித்தவுடன் அடக்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சிரிப்பு வரத் தொடங்கிவிட்டது. காரணம், அதற்கு முந்தைய நாள் இரவு, ஊழலை நிறுவனமயப்படுத்த இந்த மோடி அரசு, ‘சட்டப்படி’ மேற்கொண்ட அறமற்ற நடவடிக்கைகள் பற்றிய தொடர் ஒன்றை நான் படித்ததே. இந்திய ஜனநாயகத்தின் தலையாய அமைப்புகளான ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மற்றும் நாடாளுமன்றம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக Electoral Bonds எனப்படும் தேர்தல் பத்திரங்களை அவசர அவசரமாக 2017 பிப்ரவரி மாதம், மோடி அரசு அறிமுகப்படுத்தியது என்னும் தகவல் உட்பட, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக இதுவரை வெளிவராத மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை Huffington Post என்னும் இணையப் பத்திரிகை சென்ற வாரம் திங்கள் முதல் சனி வரை ஆறு பாகங்களாக வெளியிட்டுள்ளது.

வெளிவராத இந்தத் தகவல்களைத் தேடி, தோண்டியெடுத்து, புலனாய்வு செய்து, ஆதாரங்களோடு விரிவான அறிக்கைகளைத் தயார் செய்திருப்பவர் நிதின் சேத்தி எனும் பத்திரிகையாளர்.
நாட்டில் ஊழலையும் கறுப்புப் பணத்தையும் முற்றிலுமாக ஒழித்து, நேர்மையான ஆட்சியை நாங்கள் நடத்துவோம் என்றெல்லாம் 2014 பொதுத் தேர்தலில் வீராவேசமாகப் பரப்புரை செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவ்விரண்டையும் ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்களா? இல்லை, ஊழலை நிறுவனமயப்படுத்தும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்களா?
கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணைத் தொடாத பணமதிப்பு நீக்கம்

கறுப்புப் பணத்தை அழிக்கப்போவதாகச் சொல்லி, புழக்கத்திலிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் 2016 நவம்பர் 8 நள்ளிரவு முதல் செல்லாது என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அன்று இரவு எட்டு மணி அளவில் அறிவித்தார். நாடு சுபிட்சம் அடைவதற்காக இந்தத் தற்காலிக வலியைப் பொறுத்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களை அவர் கேட்டுக்கொண்டார். உயர்மதிப்பு நோட்டுகளைச் செல்லாக்காசு ஆக்குவதன்மூலம் நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்ற புரிதல் எவ்வளவு கோளாறானது என்பதைப் பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
செல்லாக்காசு ஆக்கப்பட்ட மொத்த பணமதிப்பில் ஒரு கணிசமான தொகை வங்கிகளுக்கு வராமலேயே போய்விடும்; அதுவே நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நடந்தது என்ன? செல்லாக்காசு ஆக்கப்பட்ட அனைத்துப் பணமும் (99.3 விழுக்காடு) வங்கிகளுக்கு வந்துவிட்டது என்று 2017 ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்தது. அப்படியென்றால் கறுப்புப் பணம் எல்லாம் எங்கே போனது?
முதலில் கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எந்தெந்த வடிவில் வலம் வருகிறது என்பதைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மட்டுமே அதை ஒழிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும். பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையைத் தொடர்ந்து இதைப்பற்றி மின்னம்பலத்திலேயே முக்கியமான கட்டுரைகள் வெளிவந்தன (கட்டுரை 1, கட்டுரை 2). ‘இது கறுப்புப் பணம், இது வெள்ளைப் பணம்’ என்றெல்லாம் துல்லியமாக அடையாளம் காண்பது கடினம். சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருக்கும் பணத்தை, சட்டத்துக்குட்பட்ட பொருளாதாரப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தினால் கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் ஆகிவிடும். ஆனால், இந்தக் கறுப்புப் பணம் ரொக்கமாகவே இருப்பதில்லை என்பதும், அது நாட்டுக்கு வெளியே சென்று சலவை செய்யப்பட்டு, அந்நிய நேரடி முதலீடுகளாக மீண்டும் நாட்டுக்குள் வருவதும் அரசாங்கத்துக்கு தெரியாதா என்ன?
அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் செலவுகளுக்காகத் தனிநபர்கள், பெருநிறுவனங்களிடம் பெறும் நன்கொடைதான் நாட்டில் கறுப்புப் பணத்தின் மிக முக்கியமான ஊற்றுக்கண் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் சீர்திருத்தங்கள் கொண்டுவராமல் பணமதிப்பு நீக்கம் செய்வதெல்லாம் வெறும் திசை திருப்பல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சீர்திருத்தத்தின் பெயரில் நடந்த அவலம்

இந்தக் குற்றச்சாட்டுக்கு மோடி அரசு ஆற்றிய எதிர்வினை என்ன தெரியுமா? 2017 பிப்ரவரி 1 அன்று 2017-18ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, அதோடு சேர்ந்து நிதி மசோதாவும் (Finance Bill 2017) அன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரிசர்வ் வங்கி சட்டம், வருமானவரிச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் கம்பெனி சட்டத்தில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. மார்ச் 2017இல் அந்த மசோதா சட்டமாக மாறியதால், மேற்கூறிய சட்டத்திருத்தங்கள் அமலுக்கு வந்தன. அதனால் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
முதலாவதாக, பணமாகக் கொடுக்கப்படும் நன்கொடையின் உச்சவரம்பு ரூ.20,000இல் இருந்து ரூ.2,000 ஆகக் குறைக்கப்பட்டது. அதற்கு அதிகமாக நன்கொடை வழங்க விரும்புபவர்கள் காசோலை அல்லது இணையத்தின்மூலம் (Digital Payment) அதைச் செலுத்தலாம். ஆனால், ரூ.20,000-த்துக்குக் குறைவாக நன்கொடை வழங்குபவர்கள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடத் தேவையில்லை என்னும் சரத்து மாற்றப்படவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியே புகுந்து செல்லத் தெரிந்தவர்களுக்கு நன்கொடையைச் சிறுசிறு தொகையாகப் பிரித்து வழங்குவது அவ்வளவு பெரிய சவாலா என்ன?இரண்டாவதாக, தனியார் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கக்கூடிய தொகையின் உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு, ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய கடந்த மூன்று ஆண்டுகளின் நிகர லாபத்தில் 7.5 விழுக்காடு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்று சட்டத்தில் சொல்லப்பட்டது. மேலும், இதற்கு முன்பு, எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கினார்கள் என்பதை தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாப - நஷ்டக் கணக்கு (Profit and Loss Account) மற்றும் இருப்புநிலைக் கணக்கில் (Balance Sheet) காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதாவது, லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் மட்டுமே நன்கொடை வழங்க முடியும் என்ற ஒரு சரத்து இருந்தது. 2017இல் இருந்து அதுவும் நீக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்களும் இனி இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்றும் FCRA என்னும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

மூன்றாவதாக, நன்கொடை வழங்குவதற்கும் பெறுவதற்கும் “தேர்தல் கடன் பத்திரங்கள்” (Electoral Bonds) என்னும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கடன் பத்திரங்களைக் குறிப்பிட்ட சில தேதிகளில் மட்டும் State Bank of India-விடமிருந்து நன்கொடை வழங்க நினைக்கும் நபர்களோ அல்லது நிறுவனங்களோ காசோலை வழங்கி பெற்றுக்கொள்ளலாம். வாங்கிய கடன் பத்திரத்தை எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சியிடம் அதை ஒப்படைத்துவிட வேண்டும். கடன் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி, தன்னுடைய வங்கியில் அதை ஒப்படைத்து, தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நன்கொடையைப் பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் 15 நாட்களுக்குள் நடக்க வேண்டும். இந்தப் பரிவர்த்தனைகள் யாவுமே பொதுவெளியில் வைக்கப்பட மாட்டாது.
அரசியல் கட்சிகளும், யாரிடம் தேர்தல் கடன் பத்திரங்கள் வழியாக நன்கொடை பெற்றார்கள் என்னும் விவரங்களை வெளியிடத் தேவையில்லை. நாட்டு மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) வழியாகவும் இதுகுறித்த தகவல்களைப் பெற முடியாது. இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்தாலும் சாத்தியமில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.
யாருக்கான வெளிப்படைத்தன்மை?
முதல் இரண்டு மாற்றங்களோடு இந்தத் தேர்தல் கடன் பத்திரங்களின் செயல்பாட்டை இணைத்துப்பார்த்தால் புலப்படும் உண்மை இதுவே... பெரும் தனியார் நிறுவனங்களும், பணபலம் படைத்தவர்களும் சட்டத்துக்குட்பட்டே, யாருக்கு எவ்வளவு வழங்கினார்கள் என்னும் தகவலை வெளியிடாமலேயே, எந்த வரையறையும் இன்றி கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். இதில் என்ன வெளிப்படைத்தன்மை (transparency) இருக்கிறது?
‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டதே இந்தத் தேர்தல் பத்திரங்கள்’ என்றார் அருண் ஜெட்லி. அவர் மற்றொன்றையும் சொன்னார், ‘நன்கொடை கொடுத்தவரின் அடையாளம் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.’
இரண்டு முற்றிலும் முரணான வாதங்களையல்லவா அவர் முன்வைத்துள்ளார் என்னும் கேள்வி எழலாம். யாருக்கான வெளிப்படைத்தன்மையை இது உறுதி செய்யும் என்று அவர் சொல்லாததே இதில் உள்ள சூட்சுமம்.

இந்தப் பரிவர்த்தனைகள் State Bank of India வழியாக நடப்பதால், நன்கொடையை வங்கியில் செலுத்தி பத்திரங்களை வாங்கியவர்கள் யார், எந்தக் கட்சி அந்த நன்கொடையைப் பெற்றது, இவர்களின் வங்கிக்கணக்கு பற்றிய தகவல்கள் அனைத்துமே SBIயிடம் இருக்கும். SBI என்பது அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பொதுத் துறை வங்கி. ஆக, அந்த வங்கியிடம் இருந்து அரசாங்கத்தால் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும். தேவைப்பட்டால் மத்திய புலனாய்வுத் துறை(CBI)யும், அமலாக்கத் துறை(ED)யும் SBIயிடம் இந்தப் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டு அமைப்புகளும் ஆட்சியில் இருப்பவர்களால் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது நாடறிந்த சேதி.
ஆக, எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டது என்பது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு மட்டுமே தெரியும்பட்சத்தில், மற்ற கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி, ஆளும்கட்சியின் கோபத்தையும் எதிர்ப்பையும் சம்பாதிக்க யாராவது விரும்புவார்களா என்ன?
பொய்களும் புறக்கணிப்புகளும்
இத்தகையதொரு கருவியை அறிமுகப்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ‘வெளிநாட்டு நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்கள் வழியே நன்கொடை வழங்கலாம் என்பது, நாட்டிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம் சலவை செய்யப்பட்டு (Money Laundering), மீண்டும் நாட்டுக்குள் நுழைவதற்கான ஏற்பாடாக அமைந்துவிடும் அபாயம் இருக்கிறது’ என்பதை 2017 ஜனவரி 30, அன்று ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்திடம் சுற்றிவளைக்காமல் நேரடியாகவே தெரிவித்தது.
“இந்தக் கருவி எப்படி செயல்படும் என்பதை ரிசர்வ் வங்கி புரிந்துகொண்டாதாக எனக்குத் தோன்றவில்லை. நிதி மசோதா ஏற்கனவே தயாராக இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவுரை தாமதமாக வந்துள்ளது. எனவே, நாம் திட்டமிட்டபடி இதை அறிமுகப்படுத்தலாம்” என்று வருவாய் செயலாளர் ஹஸ்முக் ஆதியா நிதியமைச்சருக்கு எழுதி அனுப்பினார். அவர்கள் திட்டமிட்டபடியே 2017 பிப்ரவரி 1 அன்று தேர்தல் பத்திரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியின் கருத்தைக்கேட்ட அடுத்த நாளே அது தன்னுடைய அச்சங்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவித்துப் பதிலளித்து இருந்ததை நிதின் சேத்தியின் புலனாய்வு நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஆக, நாட்டின் பொருளாதார மேலாண்மைக்குப் பொறுப்பு வகிக்கும் ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளைப் புறக்கணித்தே அரசு இந்தச் சர்ச்சைக்குரிய கருவியை அறிமுகப்படுத்தியது தெளிவாகிறது.

“தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல் பத்திரங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதா?” என்று 2018இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எதுவும் தேர்தல் ஆணையத்திடமிருந்து வரவில்லை” என்று அன்றிருந்த துணை நிதியமைச்சர் பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அது சுத்தப் பொய். ரிசர்வ் வங்கி எழுப்பிய அதே ஆட்சேபனைகளை எழுப்பி, வெளிப்படைத் தன்மையற்ற இந்தத் தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படக் கூடாது என்று 2017 மே மாதம் தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துக்கு எழுதி அனுப்பியது. அதை நிதி அமைச்சகத்துக்கு சட்ட அமைச்சகம் ‘forward’ செய்தது. ஆனால், நிதி அமைச்சகம் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. மேலும் பல பொய்களைச் சொல்லி, விதிகளை மீறி, பல தில்லுமுல்லு வேலைகள் செய்து இதுவரை ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு படித்துத் தெரிந்துகொள்ளலாம்: https://www.huffingtonpost.in/author/nitin-sethi/.
நாட்டின் பொருளாதாரக் கொள்கை முடிவுகளை, செல்வாக்கு உள்ளவர்கள் தீர்மானிக்கும் போக்கை வலுப்படுத்தும் ஏற்பாடு, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக தன்னாட்சி உரிமையோடு செயல்பட்டுவந்த ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த சில ஆண்டுகளாகவே இறங்குமுகத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அவர்களின் நியாயமான அச்சங்கள், ஆட்சேபனைகள் மற்றும் அறிவுரைகளையும் முற்றிலுமாகப் புறக்கணித்து, ஜனநாயகத்தின்மீது மீண்டும் ஒரு துல்லியத் தாக்குதலை (Surgical Strike) மோடி அரசு நடத்தியிருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு
நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com

கருத்துகள் இல்லை: