வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Walmart போன்ற நிறுவனங்கள்.அமெரிக்காவில் விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் அழித்து விட்டது

சேமிப்பு கிடங்குகளில் அழுகி வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்காதது ஏன்

புதுடெல்லி : மத்திய அரசு கிடங்குகளில் அழுகி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்க தயங்குவது ஏன்? என்று மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு பற்றி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நேற்று மக்களவையில் நடத்தப்பட்டது. விவாதத்தை பா.ஜ.வை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அவர் பேசியதாவது:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சந்தையாளர்கள், கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்குத்தான் அரசின் கொள்கைகள் உதவுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ஊழல்களால் ரூ.6 லட்சம் கோடி போயுள்ளது. அரசின் இந்த ஆண்டின் வருவாய் ஸி6.64 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகப் பெரிய தொகை.

ஏழைகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகும் போது, வளர்ச்சி விகிதம் 8, 9 சதவீதமாக இருப்பதால் என்ன பயன்? ஏழைகளை மேலும் வறுமைக்கு தள்ளி, வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை. வறுமை ஒழிப்பு திட்டமாக நீங்கள் கொண்டு வந்த ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள். எனவே, திட்டத்தால் பலனில்லை. ஆன்லைன் வர்த்தகத்தால் விலைவாசி உயர்வதாக 2005ல் சோனியா சொன்னார்.

அதை தடுக்க 6 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தே.ஜ. கூட்டணி அரசில் அதை கொண்டு வந்தோம். ஆனால், அப்போது பொருளாதார நிலை தாராளமாக இருந்தது. இப்போது நிலைமை அப்படியில்லை. அதை தடுத்து நிறுத்துங்கள். இது போன்ற தவறான அணுகுமுறைகளால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.
அரசின் உணவு கிடங்குகளில் பல லட்சம் டன் உணவு தானியங்கள் அழுகி வீணாகும் நிலையில் உள்ளன. அவற்றை ஏழைகளுக்கு ஏன் கொடுக்கவில்லை? 40 மில்லியன் டன் தானியங்களை விடுவித்து பாருங்கள். விலைவாசி தானாக இறங்கும்.

சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களை கொண்டு வர, அமெரிக்கா உங்களை நிர்ப்பந்திக்கிறது. அதற்கு அடிபணியாதீர்கள். அந்த நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் அழித்து விட்டது. நம் நாட்டில் சில்லரை விற்பனையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடுகள் செல்கின்றன. ஆனால், இந்தியாவுக்கு 27 பில்லியன் டாலர் அளவுக்குத்தான் முதலீடுகள் வந்துள்ளன. தாராளமயம் என்பதை நாட்டுக்கு துன்பத்தில் வீழ்த்தக் கூடாது. ஏழைகள் பிரச்னைகளை சந்திப்பார்கள். பணக்காரர்கள் வெளிநாடுகளுக்கு போய் விடுவார்கள் என்பதை எப்படி ஏற்பது?இவ்வாறு சின்கா பேசினார்.

கருத்துகள் இல்லை: