வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தமிழக நதிகளை இணைப்பதே அரசின் முதல் பணி

: தமிழகத்தில் நதிகளை இணைப்பதே, அரசின் முதன்மைப் பணியாகக் கருதப்படுகிறது. இதனால், பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள் நாட்டு நீர் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். பாசன வசதிக்கு முற்றிலும் பருவ மழையை நம்பியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மைப் பணியாகக் கருதுகிறது. நதிநீர் இணைப்பால், பாசன வசதிகள் மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள் நாட்டு நீர் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். முதற்கட்டமாக, காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன் இணைப்பதற்காக, காவிரி ஆற்றில் கட்டளைக் கதவணை அமைக்கும் பணி, 189 கோடி ரூபாயில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக, 2011-12ம் ஆண்டில், 93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன் அடுத்த கட்டமாக, கட்டளைக் கதவணையை குண்டாறு ஆற்றுடன் இணைக்கும் பணியை இந்த அரசு துவங்கும். மத்திய அரசு உதவியுடன், வெள்ள மேலாண்மைப் பணியாக, இரண்டாம் கட்டத்தில் இப்பணி செய்யப்படும். முதற்கட்டமாக, கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன், 3,787 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இரண்டாவது கட்டத்தில், மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன் குண்டாறு, 1,379 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இந்த வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு, 5,166 கோடி ரூபாய் மதிப்பில், விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எனினும், மத்திய அரசின் உதவிக்காகக் காத்திருக்காமல் , மாநில அரசே இப்பணியினை உடனடியாகத் தொடங்கும். இப்பணிக்காக, 2011-12ம் ஆண்டில், 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பியாறுடன் தாமிரபரணி ஆற்றை இணைக்கும் பணி, 369 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2011-12ம் ஆண்டில், இப்பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: