வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஸ்ரேயா கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார்


முதன்மையாக இந்தியிலும், பிறகு அநேக தேசிய மொழிகளிலும் பாடிவரும் ஸ்ரேயா கோஷலை நாம்  அதிகமும் தமிழ் வழியாகத்தான் கேட்டிருப்போம். அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் திரையிசை அறிமுகமப்படுத்தியிருக்கும் குரல்களில், தனிச்சிறப்பான அழகுகள் என்று கண்டு லயிப்பது சிரமம். ஒரே மாதிரியான குரல்கள், சலித்துப் போன ஃபார்முலா உணர்ச்சிகள், குரலிசையை மிஞ்சும் கருவியிசைகள், பாடல் வரிகளை மென்று தீர்க்கும் சப்தநுட்பங்கள்…
உலகமயமாக்கம் பண்பாட்டுத் துறையில் அனைத்தையும் ஒரே படித்தானவைகளாக  மாற்றுகிறது. தேசிய இனங்களின் தனியழகுச் சிறப்பான பண்பாட்டு அம்சங்கள், சாதனைகள் அனைத்தும் உலகச்சந்தையின் அகோரப் பசியில் இறந்து போகின்றன. தமிழ் சினிமாவும் சில விதிவிலக்குகளைத் தவிர இந்த அனைத்துலக திணிக்கப்பட்ட மேட்டுக்குடி வாழ்வை காட்சிப்படுத்துகிறது, இசையும் படுத்துகிறது.
தமிழ் சினிமாவை மொழிமாற்றி தெலுங்கிலோ, இந்தியிலோ வெளியிட்டால் கூட அது பண்பாட்டு மாறுபாட்டால் தடுமாறுவதில்லை. அங்கனமே மற்ற மொழிப் படங்களும். செல்பேசி, கோக், ஷாப்பிங்  மால்கள், பல்சர் பைக், ஜீன்ஸ் பேண்ட், உதட்டுச்சாயம் இத்தியாதிகளில் விதவிதமான தேசிய இனங்கள் வாழவா முடியும்? இந்த ஒருமைப்பாடு, வேறுபட்ட மக்களின் வாழ்க்கை உணர்ச்சியில், அழகான வேற்றுமைகளை இணைக்கும் ஆன்மாவாக மிளிரவில்லை. மாறாக நுகர்வை மாபெரும் அகோரப் பசிவெறியாக்கி நசுக்கி வருகிறது.
சென்னை சத்யம் திரையரங்கு சென்றால் மேட்டுக்குடி சீமான்களும், சீமாட்டிகளும் ஒரே உடையில், ஒரே மணத்தில், ஒரே உடல் மொழியில், ஒரே நாசுக்கில், கோக்கை இழுப்பது கூட ஒரே அளவில் இருப்பதைப் பார்க்கலாம்.  ஆனால் சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சியைக் கண்டால் நூற்றுக்கணக்கான அழகுகளையும், உடல்மொழிகளையும், குதூகலத்தையும் அறியலாம். உழைக்கும் மக்களிடத்தில் இருக்கும் அந்த வேற்றுமையான தனித்தனி அழகு ,வார்க்கப்படும் பார்பி பொம்மை போன்ற கனவான்களிடம் கடுகளவு கூட உணர முடியாது.
ஆகவேதான் தமிழ் பின்னணி பாடகர்களும் அப்படி ஒரு படித்தானவர்களாக பாடுவதால் நமக்கு எல்லாம் ஒரே குரலாய், இசையாய் தெரிகிறது. நட்சத்திரங்களின் இமேஜை வைத்தே வெற்றியடையும் பாடல்கள் அடையாளம் காணப்படுகின்றன. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த , டி எம் சௌந்தரராஜன் பி பி ஸ்ரீநிவாஸ் எ எம் ராஜா பி சுசீலா எல் ஆர் ஈஷ்வரி வாணி ஜெயராம் உமா ரமணன் முதலானவர்களின் தனியழகு நினைவுகளை இப்போது யாரிடம் தேடினாலும் கிடைப்பது கடினம்.
இத்தகைய கடினமான உலகமய மோல்டிங் கலைச் சூழலில்தான் ஸ்ரேயா  கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார். எனினும் ஊடகப் பெருவெளி உருவாக்கி வரும் அழகுப் பெண்ணின் குரல் மாதிரியோடு ஸ்ரேயா கோஷலின் குரலும் பெருமளவு ஒத்துப்போவது கண்கூடு.  சமகால நாயகிகளுக்கு டப்பிங் குரல்தான் என்றாலும் அது தனித்தனி வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில்லை.  அது ஒரு வகையான நகரத்து மேட்டுக்குடி நடுத்தரவர்க்க பெண்ணின் ரோல் மாடலான குரல். அந்த வகையில் ஸ்ரேயா கோஷலின் குரலும் சினிமாவில் இன்று தேவைப்படுகிறது. என்றாலும் அவரது தனித்திறமைகள் அந்த மாதிரித் தோற்றத்தை கொஞ்சம் வெற்றி கொண்டிருப்பதும் நிஜம்.
இயக்குநர் பாலுமகேந்திரா, ஹாலிவுட் படமொன்றை ஷாட்டுக்கு ஷாட் சுட்டு எடுத்த ஜூலி கணபதியில்தான் ஸ்ரேயா கோஷலை “ எனக்குப் பிடித்த பாடல்” மூலம் கேட்டதாக நினைவு. பிறகு விருமாண்டி, சில்லுனு ஒரு காதல், நான் கடவுள், செல்வராகவன் படங்கள், படமே தெரியாத பாடல்கள் என்று தொடரும்போது அவரது குரல் எனக்கு தனித்து தெரியத் தொடங்கியது. ஆர்வத்துடன் தேடிப் பிடித்துக் கேட்டேன். கேட்கிறேன்.
வரம்புக்குட்பட்ட கலைத்தூண்டுதலில், திட்டவட்டமான வகைமாதிரிகளையே விதிகளாக கொண்டு இயங்கும் தமிழ் இசையில் இந்த பெண் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் அதை கொஞ்சம் தனது சாயலோடு பாடுகிறாரோ என்று தோன்றியது. ஆலாபனைகளில் அவர் தோய்ந்து பாடும் போது தெரியும் உணர்ச்சிகளில் இழையோடும் அசாத்தியத் திறமை ஆச்சரியப்படுத்தியது. இசை, பாடல் வரிகள், உப்புமா கதைகள் அத்தனையும் ஸ்ரேயா கோஷலின் குரலிசையில் மண்டியிடுகின்றனவோ என்று கூட தோன்றியது.
1984-இல் வங்கத்தில் பிறந்த கோஷல் அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணி காரணமாக ராஜஸ்தானில் வளர்கிறார். பெற்றோர் இருவரும் படித்தவர்கள் என்பதோடு கூட இசையார்வமும் உள்ளவர்கள். காரணமாக  ஸ்ரேயாகோஷல் அங்கே மகேஷ் சந்திர ஷர்மா என்ற இந்துஸ்தானி கலைஞரிடம் இசை பயில்கிறார். ராஜஸ்தான், இந்துஸ்தானி இரண்டும் மிக வளமான இசைப் பின்னணி கொண்டவை. ராஜஸ்தானின் நாட்டுப்புறப் பாடல்களில் பாலைவனத்தின் சோகமும், கம்பீரமும், உச்சஸ்தாயில் பாடும் பெண்களது வலிமையும் எவரையும் சுண்டி இழுக்கும்.
பாரசீகத்திலிருந்து ராஜஸ்தான் வரையிலும் இசைக்கு ஒரு வரலாற்றுரீதியான இழையும் தொடர்பும் காலந்தோறும் இருந்து வருகிறது. மொகலாயர்களது பங்களிப்பாக வளர்ந்த இந்துஸ்தானி இசை, செவ்வியல் இசையறிவு இல்லாத பாமரர்களையே சுண்டி இழுக்கும். தமிழிசையிலிருந்து திருடப்பட்ட கர்நாடக இசையும் ஒரு செவ்வியல் இசைதான் என்றாலும் இதில் பாடுபவர்கள் இசையை கணிதம் போல பாடுவார்கள். மனோபாவத்துக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்படும் கர்நாடக இசையில் உணர்ச்சியை விட தாளத்தின் ஸ்வர வரிசையே மேலோங்கி இருக்கும். இந்துஸ்தானியில் கணிதம் இருந்தாலும் உணர்ச்சிதான் முதன்மையானது.
அதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. ஹிந்துஸ்தானி இசை அடிப்படையில் மதச்சார்ற்ற இசை. வாழ்வின் மகிழ்ச்சியை, கேளிக்கையை பாடுவதற்காக உருவான இசை. கர்நாடக இசை பக்தியை மட்டுமே கொண்ட மதச்சார்பு இசை. வாழ்வின் மற்ற உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை.
அதனால்தானோ என்னமோ இசையறிவு அற்ற பாமரர்களும் ஹிந்துஸ்தானி இசையில் மயங்குவது போல கர்நாடகத்திடம் நெருங்குவதில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத இனிமை ஹிந்துஸ்தானி இசையிடம் இருக்கிறது என்று ஒரு இசையமைப்பாளரான நண்பர் சொன்னார்.

கருத்துகள் இல்லை: