புதன், 3 ஆகஸ்ட், 2011

அழகிரி மனைவி காந்தி மீது வழக்கு போலீஸார் நிறுத்தி வைத்துள்ளனர்

மதுரை: திமுக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. ஆனால் தற்போது அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு காந்தி அழகிரி பவர் எழுதிக் கொடுத்து விட்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மதுரை உத்தங்குடியில் உள்ள நாகநாதர் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம், காந்தி அழகிரி தன் பெயருக்கு பதிவு செய்து கொண்டார் என்றும், இந்த இடம் 1500 வருடங்கள் பழமையான நாகநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்றும், அந்த கோயிலின் டிரஸ்டி சார்பில் மதுரை புறநகர் எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

மேலும், அந்த இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு காந்தி அழகிரி தற்போது பவர் கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்.பி. கார்க் உத்தரவிட்டார். மேலும் காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய முடியுமா என்று அரசு வக்கீல்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த புகாரைப் பரிசீலித்த அரசு வக்கீல்கள், நிலம் தற்போது காந்தி வசம் இல்லை. அவர் சுப்பிரமணியனுக்கு பவர் எழுதிக் கொடுத்து விட்டார். எனவே காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்வது சரியாக இருக்காது என்று கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்வதை தற்போதைக்கு போலீஸார் நிறுத்தி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

முன்னதாக காந்தி அழகிரி நேற்று இரவுக்குள் கைது செய்யப்படலாம் என்று வெளியான செய்தியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது

கருத்துகள் இல்லை: