யுவன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை அக்கார்ட் ஓட்டலில் நடந்தது. டைரக்டர் கே.பாக்யராஜ் பாடல்களை வெளியிட, டைரக்டர் பிரபு சாலமன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ் பேசும்போது,
’இந்த படத்தின் டைரக்டர் சரணின் சொந்த பெயர் சரவணன். அவர் என்னிடம் வேலை செய்தவர். அவர் என்னிடம் உதவி டைரக்டராக இருந்தவர் என்று இங்கே சொன்னார்கள். அவர் உதவி டைரக்டராக என்னிடம் வேலை செய்யவில்லை. அதற்கும் மேலே...
என் அலுவலகத்தில் டீ, காபி கொடுப்பவராக வேலை செய்தார். அவர் செய்கிற வேலை அதுவாக இருந்தாலும், டைரக்ஷன் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் நிறைய இருந்தது.
தினமும், என் உதவி டைரக்டர்களுக்கு அவர் சாப்பாடு பரிமாறும்போது, இன்று என்ன கதை விவாதம் நடந்தது, டைரக்டர் என்ன சொன்னார்? என்று கேட்டு தெரிந்து கொள்வார்.
அந்த துடிப்பு இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் டைரக்டர் ஆகலாம்.
நான் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தபோது, டீ-காபி வாங்கி கொடுக்கிற வேலை கூட கிடைக்கவில்லை. ஐதராபாத், விஜயவாடா என அலைந்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர்கள், எந்த வேலை வேண்டுமானாலும் செய். ஓட்டலில் சர்வர் வேலைக்கு மட்டும் போய் விடாதே என்று சொன்னார்கள்.
விஜயவாடாவில், மூன்று நாட்களாக சாப்பிடாமல் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தேன். பசி மயக்கத்தில் கீழே விழுந்து விடுவோம் என்ற நிலை வந்தபோது,சர்வர் வேலை என்றாலும் பரவாயில்லை என்று ஒரு ஓட்டலுக்கு சென்று வேலை கேட்டேன்.
அந்த ஓட்டல் உரிமையாளர் என்னை முதலில் சாப்பிட சொன்னார். பிறகு பக்கத்தில் அழைத்து, ’’தம்பி, சர்வர் வேலையை சாதாரணமாக நினைக்காதே. ஞாபக சக்தி அதிகமாக இருந்தால்தான் அந்த வேலையில் நிலைக்க முடியும் என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. சர்வர் வேலைக்கு கூட நான் தகுதி இல்லை என்று’’ என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக