வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நல்லூர் திருவிழா கோலாகலமாக ஆரம்பம்


யாழ்.நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகும் இந்தத் திருவிழா தொடர்ந்து 25 தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 30 ஆம் திகதி நிறைவடையும்.கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை நேற்றுக் காலை செங்குந்த மரபின் சார்பில் பாரம்பரிய வழக்கப்படி மேள, தாளங்களுடன் சட்டநாதன் சிவன் ஆலய வழியாக தேரில் எடுத்துவரப்பட்டு இன்று பக்தி பூர்வமாக மந்திரங்கள் ஒலிக்க கொடிச் சீலை கொடித்தம்பத்தில் ஏற்றப்பட்டது.

இந்த கொடியேற்ற நிகழ்வின்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஆலயச் சூழலில் நிறைந்திருந்தனர்.
மேலும் பெருந்தொகையான பக்தர்கள் நல்லூர் கந்தனின் அருளைப்பெற திருவிழாக் காலத்தில் ஒன்று கூடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவம் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை முடிந்த 6ம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும்.
வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ம் திகதி மஞ்சத் திருவிழாவும் 23ம் திகதி கைலாச வாகனமும் 26ம் திகதி சப்பறத் திருவிழாவும் 27ம் திகதி தேர்த் திருவிழாவும் ஆவணி அமாவாசையான 28ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்று எதிர்வரும் 30ம் திகதியுடன் உற்சவம் நிறைவு பெறும்.

இந்நிலையில் உற்சவ காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்திற் கொண்டு கோயில் வளாகத்தில் யாழ். மாநகர சபையினால் மணல் பரப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: