ஏழைகளுக்காக ரஜினி கட்டும் புதிய மருத்துவனை - அண்ணன் சத்யநாராயணா தகவல்
ரஜினி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார்.
வசதியுள்ளவர்கள் பணம் செலவழித்து வெளிநாடு சென்று சிகிச்சைப் பெறுகிறார்கள். ஆனால் ஏழைகள் நிலைமை... அவர்களுக்கும் இதே மருத்துவ வசதியைச் செய்ய வேண்டும் என்று ரஜினி யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக மிகப்பெரிய அதிநவீன மருத்துவமனையை சென்னையில் உருவாக்கும் முயற்சியில் உள்ளார் ரஜினி. இந்த மருத்துவனைக்காக வண்டலூர் அருகே இடமும் வாங்கியுள்ளாராம். பெங்களூரில் சாய்பாபா உருவாக்கியுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போல பெரிய அளவில் சென்னையில் ரஜினி உருவாக்கவிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ராவ் கூறுகையில், "ஏழைகளுக்காக பெரிய மருத்துவமனை கட்ட ரஜினி திட்டமிட்டிருப்பது உண்மைதான். இலவச சிகிச்சை கொடுப்பார்னு நினைக்கிறேன். இதுக்காக வண்டலூர் பக்கத்தில் நிலம் கூட வாங்கிப் போட்டிருக்கார். சின்ன வயதில் அவரை டாக்டராக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். டாக்டராக முடியாத குறையை இப்படியாவது தீர்த்துக்கலாமே என்பதில் எனக்கு சந்தோஷம். தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நிறைய செய்யணும் என்பது அவர் ஆசை, லட்சியம். அதை நிச்சயம் செய்வார்," என்றார்.
ஏற்கெனவே தான் பிறந்த ஊரான கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தில் பெரிய நூலகம், மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார் ரஜினி. அந்தப் பகுதி இளைஞர்களின் மேம்பாட்டுக்காக வேறு சில திட்டங்களும் வைத்துள்ளாராம் ரஜினி. இதற்கான அறக்கட்டளைக்கு ரஜினியும், அவரது அண்ணன் சத்யநாராயணாவும் நிர்வாகிகளாக உள்ளனர். நாச்சிக்குப்பம் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, ஆடுமாடுகளுக்கென்றே தனி குடிநீர்த் தொட்டி, கோயில் சீரமைப்பு என ஏற்கெனவே பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர், எந்த விளம்பரமும் இல்லாமல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக