தன் மீதான நில மோசடி புகார் குறித்தும் தன்னை போலீஸ் தேடி வருவதாகவும் வெளியான செய்திகள் குறித்து நேற்று வடிவேலு பரபரப்பாக பேட்டியளித்திருந்தார்.
இந்த பேட்டி தொடர்பாக இணையதளத்தில் வெளியான செய்திகளுக்கு வாசகர்கள் அளித்த கமெண்ட்களைப் படித்த வடிவேலு, அவற்றுக்கு பதிலளித்துள்ளார்.
வடிவேலு தனது தொழிலை மட்டும் செய்திருந்தால் நிலமோசடியில் சிக்கி இருக்க மாட்டார் என்று ஒரு வாசகர் கூறியதை மறுத்துள்ள வடிவேலு, "என் தொழிலை மட்டும்தான் செய்கிறேன். சம்பாதிக்கிற பணத்தை வரும் காலத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சேமித்து வைக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அந்த பணத்துக்கு சொத்துக்களை வாங்கி போடுவார்கள். அப்படித்தான் நான் செய்தேன். மோசடி செய்யவில்லை. மோசம் போனேன்," என்றார்.
விஜயகாந்த் பெரிய மனசு வைத்து வடிவேலுவை மன்னித்து விடலாம். வடிவேலு தான் செய்த தவறை உணரவேண்டும், என மற்றொரு வாசகர் கூறிய கருத்துக்கு பதலிளித்துள்ள வடிவேலு, "இந்த கருத்தை சொன்னவர் எதிரி கூடாரத்தின் முக்கிய உறுப்பினர். யாரையோ இவர் சொல்கிறாரே அவர்தான் (விஜயகாந்த்) தவறை உணர்ந்து திருந்தி வருந்த வேண்டும். அவர் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார்.
மேலும் 'என் கிணற்றை காணோம் என்று சினிமாவில் நடித்தார். நிஜத்தில் சுடுகாட்டு நிலத்தை காட்டி சிங்கமுத்து ஏமாற்றி விட்டதாக கூறுகிறாரே' என்ற வாசகரின் கருத்துக்கு, 'அது பொய்யல்ல, மெய்', என்று கூறியுள்ளார் வடிவேலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக